settings icon
share icon
கேள்வி

வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள இருபத்துநான்கு (24) மூப்பர்கள் யார்?

பதில்


வெளிப்படுத்துதல் 4:4 அறிவிக்கிறது, “அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.” இருபத்துநான்கு மூப்பர்கள் யார் என்பதைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷத்தின் புஸ்தகம் எங்கும் குறிப்பிடவில்லை. இருப்பினும், அவர்கள் பெரும்பாலும் சபையின் பிரதிநிதிகள் எனக் கருதப்படுகிறது. சிலர் கூறுவது போல் அவர்கள் தேவதூதர்கள் என்பதற்கு சாத்தியமில்லை. அவர்கள் சிங்காசனங்களில் அமர்ந்திருப்பது அவர்கள் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. வேதத்தில் எங்கும் தேவதூதர்கள் ஆட்சி செய்யவோ அல்லது சிங்காசனங்களில் அமரவோ இல்லை. ஆனால், திருச்சபையானது மீண்டும் மீண்டும் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதாகக் கூறப்படுகிறது (வெளிப்படுத்துதல் 2:26-27, 5:10, 20:4; மத்தேயு 19:28; லூக்கா 22:30).

கூடுதலாக, "மூப்பர்கள்" என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை தேவதூதர்களைக் குறிக்க ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை, இந்த வார்த்தை குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வயது முதிர்ந்த மற்றும் சபையை ஆளக்கூடிய மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மூப்பர் என்ற வார்த்தையானது வயது இல்லாத தேவதூதர்களைக் குறிப்பிடுகிறது என்பது பொருத்தமற்றதாக இருக்கும். அவர்களின் ஆடைகள் கூட மனிதர்களையே குறிக்கிறதாக இருக்கிறது. தேவதூதர்கள் வெண்மையான நிறத்தில் தோன்றினாலும், வெண்ணிற ஆடைகள் பொதுவாக விசுவாசிகளிடம் காணப்படுகின்றன, இரட்சிப்பில் நமக்கு எண்ணப்பட்ட கிறிஸ்துவின் நீதியைக் குறிக்கும் (வெளிப்படுத்துதல் 3:5,18; 19:8).

மூப்பர்கள் அணிந்திருக்கும் தங்க கிரீடங்களும் இவர்கள் தேவதூதர்கள் அல்ல, மாறாக மனிதர்கள் என்று குறிப்பிடுகின்றன. தேவதூதர்களுக்கு கிரீடங்கள் ஒருபோதும் வாக்குப்பண்ணப்படவில்லை, அல்லது தேவதூதர்கள் அவற்றை அணிந்ததை நாம் பார்ப்பதுமில்லை. இங்கே "கிரீடம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை, ஜெயங்கொள்ளுகிறவரின் கிரீடத்தைக் குறிக்கிறது, கிறிஸ்து வாக்குறுதியளித்தபடி வெற்றிகரமாக போட்டியிட்டு ஜெயங்கொண்டவர்கள் அணிய வேண்டும் (வெளிப்படுத்துதல் 2:10; 2 தீமோத்தேயு 4:8; யாக்கோபு 1:12).

இந்த இருபத்துநான்கு மூப்பர்கள் இஸ்ரவேலர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் இந்தத் தரிசனத்தின் போது, ஒரு முழு தேசமாக இஸ்ரவேல் இன்னும் மீட்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதுபோலவே இதே காரணத்திற்காக மூப்பர்கள் உபத்திரவகால பரிசுத்தவான்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது—யோவானின் இந்த தரிசனன்த்தின்போது அனைவரும் இன்னும் மாற்றப்படவில்லை. மிகவும் சாத்தியமான தேர்வு என்னவென்றால், மூப்பர்கள் மீட்பின் பாடல்களைப் பாடும் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் (வெளிப்படுத்துதல் 5:8-10). அவர்கள் வெற்றியின் கிரீடங்களை அணிந்துகொண்டு, தங்கள் மீட்பரால் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இடத்திற்குச் சென்றனர் (யோவான் 14:1-4).

English



முகப்பு பக்கம்

வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள இருபத்துநான்கு (24) மூப்பர்கள் யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries