கேள்வி
அனிமிசம் என்றால் என்ன?
பதில்
அனிமிசம் என்பது விலங்குகள், தாவரங்கள், பாறைகள், மலைகள், ஆறுகள் மற்றும் நட்சத்திரங்கள் உட்பட அனைத்திற்கும் ஒரு ஆத்துமா அல்லது ஆவி இருக்கிறது என்னும் நம்பிக்கையாகும். இது இலத்தீன் மொழியில் அனிமா என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அனிமாவும் அவர்களுக்கு உதவக்கூடிய அல்லது காயப்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆவி என்றும், அவை வணங்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குப் பயப்பட வேண்டும் அல்லது ஏதாவது ஒரு வழியில் அவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அனிமிச கோட்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். அனிமிசம் என்பது ஒரு பழமையான மதமாகும், அதன் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விலங்குகள், நட்சத்திரங்கள் மற்றும் எந்த வகையான சிலைகளையும் தெய்வமாக்கி வழிபட்டுள்ளனர் மற்றும் அவர்கள் குறி சொல்லுதல், பில்லிசூனியம், கணிப்பு மற்றும் ஜோதிடம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மந்திரம் ஓதுதல், மாயவித்தைகள், மந்திரங்கள், மூடநம்பிக்கைகள், தாயத்துக்கள், காப்புத்தகடுகள், வசீகரம் அல்லது தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றவும் நல்ல ஆவிகளை சாந்தப்படுத்தவும் உதவும் என்று அவர்கள் நம்பும் எதையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்து மதம், மோர்மோனிசம் மற்றும் அனைத்து புதுயுக வழிபாட்டு முறைகள் உட்பட பல தவறான மதங்களில் அனிமிசத்தின் கூறுகள் உள்ளன. மனிதர்களுக்குள் இருக்கும் ஆவி உண்மையில் கடவுள் என்று பொய்யான மதம் எப்போதும் ஏதோவொரு விதத்தில் போதிக்கிறது, மேலும் மதத்தின் நடைமுறைகள் இதை உணர்ந்து கடவுள்-ஆவியை வளர்க்க உதவும், இதனால் நாமும் கடவுளாக இருக்கலாம் என்கிறது. இதே பொய்யை ஏதேன் தோட்டத்தில் சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் சோதித்தபோது கூறினான், "நீங்கள் தேவர்களைப்போல் இருப்பீர்கள்" (ஆதியாகமம் 3:5) என்று கூறி பிரச்சாரம் செய்தான்.
தேவன் ஒருவரே என்று வேதாகமம் எவ்வித சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது, பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் முதல் கடற்கரை மணல் மணிகள் வரை அனைத்தும் அவரால் உருவாக்கப்பட்டன (ஆதியாகமம் 1:1). ஒன்றுக்கு மேற்பட்ட தேவர்கள் இருப்பதாகக் கற்பிக்கும் எந்த மதமும் பொய்யைக் கற்பிக்கிறது. "எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை" (ஏசாயா 43:10) மற்றும் "நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை” (ஏசாயா 45:5). உண்மையில் தேவர்கள் அல்லாத பொய்க் கடவுள்களின் விக்கிரக வழிபாடு, தேவன் குறிப்பாக வெறுக்கும் பாவம், ஏனென்றால் அது அவருக்குச் சொந்தமான மகிமையைக் கொள்ளையடிக்கிறது. வேதாகமத்தில் பலமுறை தேவன் பொய்யானக் கடவுள்களை வணங்குவதைத் தடை செய்கிறார்.
கூடுதலாக, அனிமிச கோட்பாட்டாளர்களின் நடைமுறைகளை வேதாகமம் கண்டிப்பாக தடை செய்கிறது. "அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்" (லேவியராகமம் 20:27). அனிமிச நடைமுறைகள் பேய்கள் ஜனங்களின் வாழ்க்கையில் நுழைவதற்கு திறந்த கதவுகள் ஆகும். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவர்களை வேதாகமம் மிகவும் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறது (உபாகமம் 18; லேவியராகமம் 20; ஏசாயா 47).
எல்லா பொய் மதங்களையும் போலவே, அனிமிசம் என்பது பொய்களின் பிதாவாகிய சாத்தானின் மற்றொரு திட்டம். இன்னும் உலகெங்கிலும் உள்ள பலர் "எதிராளியாகிய பிசாசானவனால் வஞ்சிக்கப்படுகிறார்கள், [அவன்] கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல, யாரை விழுங்கலாம் என்று வகைத்தேடி சுற்றித் திரிகிறான்" (1 பேதுரு 5:8).
English
அனிமிசம் என்றால் என்ன?