settings icon
share icon
கேள்வி

சட்டவாதத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


“சட்டவாதம்” என்ற சொல் வேதாகமத்தில் இல்லை. இரட்சிப்பு மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி இரண்டையும் அடைவதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலியுறுத்தும் ஒரு கோட்பாட்டு நிலையை விவரிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் சொல்தான் இது. சட்டவாதிகள் நம்புகிறதும் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கோருகிறார்கள். கோட்பாட்டு ரீதியாக, இது அடிப்படையில் கிருபைக்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஆகும். சட்டவாத நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் பெரும்பாலும் சட்டத்திற்கான உண்மையான நோக்கத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள், குறிப்பாக மோசேயின் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின் நோக்கம், இது நம்மை கிறிஸ்துவிடம் கொண்டுவருவதற்கு நம்முடைய “உபாத்தியாய்” அல்லது “ஆசானாக” இருக்கிறது (கலாத்தியர் 3:24).

உண்மையான விசுவாசிகள் கூட சட்டப்பூர்வமாக இருக்க முடியும். ஒருவருக்கொருவர் இரக்கத்துடன் இருக்கும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது: “விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்” (ரோமர் 14:1). துரதிர்ஷ்டவசமாக, அத்தியாவசியமற்ற கோட்பாடுகளைப் பற்றி மிகவும் வலுவாக உணருபவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களை தங்கள் ஐக்கியத்திலிருந்து வெளியேற்றுவர்களாக இருக்கிறார்கள், மற்றொரு கண்ணோட்டத்தின் வெளிப்பாட்டைக் கூட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதுவும் சட்டவாதமாகும். பல சட்டவாதமுள்ள விசுவாசிகள் இன்று தங்கள் சொந்த வேதாகம விளக்கங்களுக்கும், தங்கள் சொந்த மரபுகளுக்கும் கூட தகுதியற்ற முறையில் கடைப்பிடிக்கக் கோருவதில் பிழையைச் செய்கிறார்கள். உதாரணமாக, ஆவிக்குரியவர்களாக இருக்க ஒருவர் புகையிலை, மது பானங்கள், நடனம், திரைப்படங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இவற்றைத் தவிர்ப்பது ஆன்மீகத்திற்கு உத்தரவாதம் இல்லை.

கொலோசெயர் 2:20-23 வரையிலுள்ள வசனங்களில் சட்டவாத தன்மையைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் நமக்கு எச்சரிக்கிறார்: “நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.” இத்தகைய விதிமுறைகள் உண்மையிலேயே ஞானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளன, அவற்றின் சுய-வணக்க வழிபாடு, பொய்யான பணிவு மற்றும் உடலைக் கடுமையாக நடத்துவது போன்றவை, ஆனால் சிற்றின்ப இன்பத்தைத் தடுப்பதில் அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. சட்டவாத கொள்கையை நம்புபபவர்கள் / கைக்கொள்ளுகிறவர்கள் நீதியுள்ளவர்களாகவும் ஆவிக்குரியவர்கலாகவும் தோன்றலாம், ஆனால் சட்டவாதம் இறுதியில் தேவனின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறிவிடுகிறது, ஏனெனில் இது ஒரு உள்ளான மாற்றத்திற்குப் பதிலாக வெளிப்புற செயல்திறன்களில் தான் அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளது.

சட்டபூர்வமான வலையில் சிக்குவதைத் தவிர்ப்பதற்கு, அப்போஸ்தலனாகிய யோவானின் வார்த்தைகளை இறுக்கமாகப் பிடிப்பதன் மூலம் நாம் தொடங்கலாம், “நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின” (யோவான் 1:17) மேலும் கிருபையுள்ளவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக கிறிஸ்துவிலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நாம் கிருபையுள்ளவர்களாக இருக்கவேண்டும். “மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே” (ரோமர் 14:4). “இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே” (ரோமர் 14:10).

எச்சரிக்கையின் வார்த்தை இங்கே அவசியமாக இருக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும், சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து வேறுபாட்டை சகித்துக்கொள்ள வேண்டும் என்றாலும், மதங்களுக்கு எதிரான கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறோம் (யூதா 3). இந்த வழிகாட்டுதல்களை நினைவில் வைத்துக் கொண்டு, அவற்றை அன்பிலும் இரக்கத்திலும் பயன்படுத்தினால், நாம் சட்டவாத மற்றும் மதங்களுக்கு எதிரான கொள்கைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்போம். “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1 யோவான் 4:1).

English



முகப்பு பக்கம்

சட்டவாதத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries