settings icon
share icon
கேள்வி

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தையா?

பதில்


இந்த கேள்விக்கு நாம் கொடுக்கிற பதில் வேதாகமத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் மற்றும் அது நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்வது மட்டுமல்ல மாறாக அது நித்தியமான மாற்றம் மற்றும் அழுத்தத்தை நமக்கு கொடுக்கிறதாயும் இருக்கிறது. வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தை என்றால், நாம் அதைப்பற்றிக்கொண்டு, அதை படித்து, அதற்கு கீழ்படிந்து முழவதுமாய் அதை நம்ப வேண்டும். வேதாகமம் தேவனுடைய வார்த்தையென்றால், அதை நிராகரிப்பது தேவனையே நிராகரிப்பதற்கு சமமாகும்.

தேவன் நமக்கு வேதாகமத்தை கொடுத்ததின் நோக்கம் என்னவென்பது, அவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பின் தெளிவு மற்றும் எடுத்துக்காட்டில் தெளிவாக விளங்குகிறது. "வெளிப்பாடு" என்கிற வார்த்தையின் அர்த்தம் தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை மனுமக்களோடு பகிர்ந்து கொள்ளவும் நாம் அவரோடு சரியான நிலையில் ஐக்கியப்பட்டு இருக்கவுமே ஆகும். தேவன் இவைகளை வேதாகமத்தில் வெளிப்படுத்தாதிருந்தால் தேவனைப்பற்றிய இந்த தெய்வீக சத்தியங்களை நாம் அறிந்திருக்க முடியாது. ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு மேலாக தேவன் தம்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வேதாகமம் பரிபூரணமாக கிடைக்கப்பெற்றாலும், எல்லா காலத்தும் தேவனுடைய வெளிப்பாடு போதுமானதாகவும் அதினிமித்தம் மனுமக்கள் அவரோடு உறவு பூண்டு ஐக்கியப்படிருக்கும்படியாகவும் அமைந்தது. வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பது மெய்யானால், அதுவே நம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்கும், விசுவாச சம்மந்தபட்ட காரியங்களுக்கும் முழு அதிகாரம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்.

நமக்கு நாமே வினவிக்கொள்கிற கேள்வி என்னவென்றால், வேதாகமமானது ஏதோ ஒரு நல்ல புத்தகம் என்கிற நிலையில் அல்லாமல் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? இதுவரையில் எழுதப்பட்ட எல்லா மத புத்தகங்களைக் காட்டிலும் வேதாகமம் எந்த வகையில் சிறந்து விளங்குகிறது? வேதாகமம் தேவனுடைய வார்த்தை, தெய்வீக உந்துதலால் அருளப்பட்டவை மற்றும் எல்லா விசுவாசம் மற்றும் நடைமுறை காரியங்களுக்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட கேள்விகள் கவனமாக ஆராயப்பட வேண்டியவைகளாகும்.

வேதாகமம் தன்னில்தானே தேவனுடைய வார்த்தை என அறிவுறுத்துகிறதா என்கிற கேள்விக்கு இடமே இல்லாமல் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. வேதாகமம் தேவனுடைய வார்த்தை தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு கூறிய காரியத்தில் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார்: “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:15-17).

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தை தான் என்பதற்கான உள்ளான மற்றும் புறம்பான ஆதாரங்கள் இருக்கின்றன. உள்ளான ஆதாரங்கள் என்பது வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கு வேதாகமத்தின் உள்ளிலிருக்கிறவைகள் ஆகும். வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான முதல் உள்ளான ஆதாரம், அதனுடைய “ஒற்றுமை”. வேதாகமானது 66 தனித்தனி புத்தகங்களாக இருந்தாலும், மூன்று கண்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும், மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும், 1500க்கும் மேற்பட்ட ஆண்டு காலளவில் எழுதப்பட்டிருந்தாலும், பல்வேறு பின்னணி மற்றும் கலாச்சாரம் கொண்ட 40க்கும் மேற்பட்ட எழுதாளர்களாலே எழுதப்பட்டிருந்தாலும், வேதாகமம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு புத்தகமாக ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருக்கிறது. ஆக தேவனே மனிதர்களை கொண்டு இந்த புத்தகங்களை எழுதினார் என்பதற்கான தெளிவாக இந்த ஒற்றுமை விளங்குகிறது.

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான அடுத்த உள்ளான ஆதாரம் என்னவென்றால், அவற்றுள் அடங்கியிருக்கிற “தீர்க்கதரிசனங்கள்” ஆகும். வேதாகமத்தில் எதிர்காலத்தோடு தொடர்புபடுத்தி இஸ்ரவேலர்களைக் குறித்தும், சில பட்டணங்களைக் குறித்தும், மனித வர்க்கத்தை குறித்தும் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. மற்ற தீர்க்கதரிசனங்கள் யாவரும் விசுவாசிக்க தக்கதான இரட்சகரும் வருகிறவராகிய மேசியாவுமானவரைக் குறித்து கூறுகின்றன. மற்ற வேதங்களில் காணப்படுகிற தெளிவற்ற தீர்க்கதரிசனங்களைப் போன்று அல்லாமல் தெளிவான விவரணங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவைக் குறித்ததான 300கும் அதிகமான தீர்ர்க்கதரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் எங்கே பிறப்பார் மற்றும் குடும்ப வம்சாவளி என்பது மட்டுமல்ல அவர் எப்படி மரிப்பார் மற்றும் உயிரோடு எழுந்திருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படி நிறைவேறின தீர்க்கதரிசனங்கள் யாவும் எவ்வித தர்க்கத்திற்கும் இடமில்லாமல் வேதாகமம் தேவனுடைய வார்த்தை தான் என்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன. வேதாகமத்தைப் போல தீர்க்கதரிசனங்களையும் அவைகளின் நிறைவேருதலையும் உள்ளடக்கிய வேறே ஒரு புத்தகம் இவ்வுலகில் இல்லை.

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான மூன்றாவது உள்ளான ஆதாரம் என்னவென்றால், அதனுடைய தனித்துவமான அதிகாரமும் வல்லமையும் ஆகும். இந்த ஆதாரம் மேற்கண்ட இரண்டு ஆதாரங்களைப்போன்று அல்லாமல் அக எண்ணஞ்சார்ந்தது ஆகும். அதே வேளையில் வேதாகமம் தேவனுடைய வார்த்தைதான் என்கிற விஷயத்தில் எந்த வகையிலும் வல்லமை குன்றியது அல்ல.

வேதாகமத்தின் அதிகாரம் இதுவரை எழுதப்பட்ட மற்ற புத்தகங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். தேவனுடைய வார்த்தையின் அற்புத சக்தியால் எண்ணற்றோர் வாழ்வுகள் மாறியிருக்கிற விதத்தில் இந்த புத்தகத்தினுடைய அதிகாரமும் வல்லமையும் சிறந்து விளங்குகின்றன. மயக்கமருந்துக்கு அடிமையானவர்கள் இதனால் குணப்பட்டு இருக்கிறார்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் இதனால் விடுவிக்கப்பட்டுள்ளனர், கைவிடப்பட்ட அநாதைகளும் சுற்றித்திரிகிற பரதேசிகளும் இதனால் மாற்றம் அடைந்துள்ளனர், கடினமாக்கப்பட்ட இருதயம் கொண்ட குற்றவாளிகள் இதனால் மாறியிருக்கிறார்கள், பாவிகள் இதனால் கடிந்துகொள்ளப்பட்டு இருக்கிறார்கள், மற்றும் வெறுப்புடன் இருந்தவர்கள் அன்பு காட்டுகிறவர்களாக மாறியிருக்கிறார்கள். வேதாகமம் உண்மையிலேயே தேவனுடைய வார்த்தை என்பதால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமானது, மற்றபடி இந்த புத்தகத்திற்கு ஏதோ வல்லமை இருக்கிறது என்று அர்த்தமல்ல.

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான சில புறம்பான ஆதாரங்களும் உண்டு. வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான புறம்பான ஆதாரங்களில் ஒன்றுதான் வேதாகமத்தின் வரலாற்று உண்மை. வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் யாவும் வரலாற்று நிகழ்வுகள் என்பதால், அதன் உண்மைத்தன்மை மற்றும் துல்லியம் பிற வரலாற்று ஆவணம் போன்று சரிபார்ப்புக்கு உட்பட்டு இருக்கின்றன. தொல்பொருள் சான்றுகள் மற்றும் பிற எழுத்துக்களின் ஆவணங்கள் மூலமாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று விவரங்கள் யாவும் துல்லியமாகவும் உண்மையுடனும் இருக்கின்றன என மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளன. வேதாகமத்தின் உண்மையை ஆதரிக்கும் எல்லா தொல்பொருள் மற்றும் கையெழுத்துப்பிரதி ஆதாரங்களும் பண்டைய நாட்களிலிருந்து காக்கப்பட்டு வந்திருக்கிற சிறந்த ஆவணப்படுத்தப்பட்ட புத்தகமாக வேதாகமத்தை ஆமோதிக்கின்றன. வேதாகமம் துல்லியமாகவும், உண்மையாகவும் வரலாற்றுக் நிகழ்வுகளை பதிவுசெய்கிறது என்பது மட்டுமல்லாமல் மதம் சம்பந்தப்பட்ட அனைத்து விசுவாச கோட்பாடுகளுக்கும், பாடங்களுக்கும் மற்றும் போதனைகளுக்கும் ஆதாரமாகவும் இருக்கிறது.

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான அடுத்த புறம்பான ஆதாரம் என்னவென்றால், மனித எழுத்தாளர்களின் துல்லியம். முன்னமே குறிப்பிட்டபடி, வாழ்க்கையின் பல பின்னணி, கலாசாரம் மற்றும் பல்வேறு பூகோள பகுதிகளிலிருந்து தேவன் அவருடைய வார்த்தைகளை பதிவு செய்ய மனிதர்களைப் பயன்படுத்தினார். இந்த மனிதர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது, அவர்கள் நேர்மையாகவும் நேர்மையுடனும் இருப்பதைக் காண்கிறோம். தேவன் தங்களோடு பேசியதற்கு உண்மையுள்ள சாட்சிகளாக இவர்கள் இருக்கிறபடியினாலும் தாங்கள் எழுதியவைகள் யாவும் தேவனுடைய வார்த்தைதான் என்கிற பரிபூரண நம்பிக்கையும் இவர்களுக்கு இருந்தபடியினால்தான், தங்கள் உயிரையே கொடுத்தார்கள். புதிய ஏற்பாட்டை எழுதியவர்களும் மற்ற நூற்றுக்கணக்கான விசுவாசிகளும் (1 கொரிந்தியர் 15:6) எழுதப்பட்ட செய்தி சத்தியம் என அறிந்திருந்தனர். ஏனென்றால் அவர்கள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவுவை நேரில் கண்டவர்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்தது அவர்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனிமித்தம் மரணத்திற்கு பயந்து ஒளிந்துகொள்லாமல் தேவனுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் தங்கள் உயிரையே கொடுத்தார்கள். அவர்களுடைய வாழ்வும் மரணமும் வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்தைதைதான் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தைதான் என்பதற்கான இறுதியான புறம்பான ஆதாரம் என்னவென்றால், வேதாகமம் அழிக்கப்பட முடியாமல் இன்றும் நிலைத்திருப்பது. வேதாகமத்தின் முக்கியத்துவமும் அது தேவனுடைய வார்த்தையாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் காரணமும் நிமித்தம் உலக வரலாற்றில் இதுவரையிலும் வேறே எந்த புத்தகத்திற்கும் வராத அளவிற்கு எண்ணற்ற இன்னல்களையும் பல தீய தாக்குதல்களையும் அது நேரிட்டு பலர் அழிக்க முயன்றும் அழிக்கமுடியாமல் இன்றும் அது சிறந்து ஜொலிக்கிறது. ரோம சக்கிரவர்த்தி டயோகிலேஷன் தொடங்கி, கம்யூனிச சர்வாதிகாரிகள், நவீனகாலத்து நாத்திகர்கள் மற்றும் அக்னோஸ்டிஸ்ட்டுகள் என பலரால் தாக்கத்தை சந்தித்தும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, இன்னும் உலகில் பரவலாக வெளியிடப்பட்ட மிகப்பெரிய புத்தகமாக வேதாகமம் உள்ளது.

சந்தேகவாதிகள் பலர் எழும்பி வேதாகம் வெறும் கட்டுக்கதை மற்றும் புராணங்களாக இருக்கிறது என விவாதித்தபோதிலும், தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆதாரங்கள் வேதாகமத்தை மெய்யான வரலாற்று புத்தகம் என்று உறுதியளித்தது. எதிரிகள் பலர் வேதாகம போதனைகள் பழமையானது மற்றும் காலாவதியானது என தாக்கினர், ஆனால் அதன் தார்மீக மற்றும் சட்ட கருத்துகள் மற்றும் போதனைகள் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் வளர்ந்தோங்கி மாபெரும் செல்வாக்கைக் கொண்டிருகின்றன. போலி அறிவியல், உளவியல் மற்றும் அரசியல் இயக்கங்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தாலும், வேதாகமம் முதலில் எழுதப்பட்டபோது இருந்ததைப் போல இன்றும் அது உண்மையானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது. வேதாகமம் கடந்த 2000 ஆண்டுகளில் எண்ணற்ற மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரங்களை மாற்றிய ஒரு புத்தகம் ஆகும். எத்தனை எதிரிகள் தோன்றி எப்படி தாக்கினாலும், அழிக்க நினைத்தாலும் அல்லது இழிவுபடுத்தினாலும் வேதாகமம் அப்படியாகவே எவ்வித குறைச்சலுமில்லாமல் தேவனுடைய வார்த்தையாக திகழுகிறது. வேதாகமத்தின் உண்மைத்தன்மையும், மனித வாழ்க்கையின் மீதான அதன் தாக்கமும் எள்ளளவும் மாறாமல் தேவனாலே பாதுகாக்கப்பட்டு துல்லியமான புத்தகமாக இருக்கிறது.

எல்லா தாக்குதல் மத்தியிலும் ஒரு மாற்றமும் இல்லாமல் அன்றும் இன்றும் மாறாமல் அதே நிலையில் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட தேவையில்லை, ஆண்டவர் இயேசு இதைக்குறித்து தெளிவாக கூறியுள்ளார்: “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மாற்கு 13:31). ஒருவர் இத்தனை சான்றுகளையும் தெளிவாக கண்டபிறகு, வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என்று கூறாமல் இருக்கமாட்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

English



முகப்பு பக்கம்

வேதாகமம் மெய்யாகவே தேவனுடைய வார்த்தையா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries