settings icon
share icon
கேள்வி

வேதாகம எண்ஜோதிடம் என்றால் என்ன?

பதில்


வேதாகம எண்ஜோதிடம் என்பது வேதாகமத்தில் உள்ள எண்களின் ஆய்வு ஆகும். வேதாகமத்தில் பொதுவாக மீண்டும் மீண்டும் சொல்லப்படும் இரண்டு எண்கள் 7 மற்றும் 40. எண் 7 பரிபூரணம் அல்லது முழுமையை குறிக்கிறது (ஆதியாகமம் 7:2-4; வெளிப்படுத்துதல் 1:20). இது பெரும்பாலும் "தேவனுடைய எண்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவர் மட்டுமே பரிபூரணமானவர் மற்றும் முழுமையானவர் (வெளிப்படுத்துதல் 4:5; 5:1, 5-6). எண் 3 கூட தெய்வீக பரிபூரணத்தின் எண்ணாக கருதப்படுகிறது: திரித்துவமானது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டுள்ளது.

எண் 40 பெரும்பாலும் "நன்னடத்தை அல்லது சோதனைக்காலத்தின் எண்" என்று புரிந்து கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இஸ்ரவேலர்கள் 40 வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்தார்கள் (உபாகமம் 8:2-5); மோசே 40 நாட்கள் மலையில் இருந்தார் (யாத்திராகமம் 24:18); 40 நாட்களுக்குப் பிறகு நியாயத்தீர்ப்பு வரும் என்று யோனா நினைவே பட்டணத்தை எச்சரித்தார் (யோனா 3:4); இயேசு 40 நாட்கள் வனாந்திரத்தில் சோதிக்கப்பட்டார் (மத்தேயு 4:2); இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் பரமேறுதலுக்கும் இடையில் 40 நாட்கள் இருந்தன (அப். 1:3). வேதாகமத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் மற்றொரு எண் 4, இது சிருஷ்டிப்பின் எண்: வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு; நான்கு பருவங்கள். எண் 6 மனிதனின் எண்ணாக கருதப்படுகிறது: மனிதன் 6 வது நாளில் படைக்கப்பட்டான்; மனிதன் 6 நாட்கள் மட்டுமே உழைக்கிறான். வேதாகமத்தின் மற்றொரு உதாரணம் எதையாவது குறிக்க எண்ணைப் பயன்படுத்துகிறது என்பது வெளிப்படுத்துதல் 13 ஆம் அதிகாரத்தில் உள்ளது, இது அந்திக்கிறிஸ்துவின் எண் 666 என்று கூறுகிறது.

எண்களுக்கு உண்மையில் முக்கியத்துவம் உள்ளதா இல்லையா என்பது இன்னும் விவாதிக்கப்படுகிறது. வேதாகமம் நிச்சயமாக எண்களை வடிவங்களில் பயன்படுத்துகிறது அல்லது ஆவிக்குரிய சத்தியத்தைக் கற்பிக்கிறது. இருப்பினும், பலர் வேதாகமத்தில் உள்ள எண்களுக்குப் பின்னால் ஒரு சிறப்பு அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயன்று "வேதாகம எண் ஜோதிடத்திற்கு" அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெரும்பாலும், வேதாகமத்தில் உள்ள ஒரு எண் வெறுமனே ஒரு எண். இரகசிய அர்த்தங்கள், மறைக்கப்பட்ட செய்திகள் அல்லது குறியீடுகளை வேதாகமத்தில் தேட தேவன் நம்மை அழைக்கவில்லை. நம்முடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கும், "தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி" (2 தீமோத்தேயு 3:16) வேதத்தில் போதுமான தெளிவான சத்தியம் உள்ளது.

English



முகப்பு பக்கம்

வேதாகம எண்ஜோதிடம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries