தானியேல் புத்தகம்
எழுத்தாளர்: தானியேல் புத்தகம் அதன் எழுத்தாளராக தானியேல் தீர்க்கதரிசியை அடையாளப்படுத்துகிறது (தானியேல் 9:2; 10:2). இயேசு தானியேலை அதன் எழுத்தாளராக குறிப்பிடுகிறார் (மத்தேயு 24:15).எழுதப்பட்ட காலம்: தானியேல் புத்தகம் கி.மு. 540 முதல் கி.மு. 530 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாகும்.
எழுதப்பட்டதன் நோக்கம்: கி.மு. 605-ல், பாபிலோனின் மாமன்னன் நேபுகாத்நேச்சார் யூதாவைக் கைப்பற்றி, அதன் குடிமக்கள் பலரை பாபிலோனுக்கு நாடு கடத்தியிருந்தார் – அதில் தானியேலும் கொண்டு செல்லப்பட்டார். நேபுகாத்நேச்சாரின் அரசவையில், நேபுகாத்நேச்சரைப் பின்பற்றிய பல ஆட்சியாளர்களில் தானியேலும் பணியாற்றினார். தானியேல் புத்தகம் தானியேல் தீர்க்கதரிசியின் செயல்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் தரிசனங்களை பதிவு செய்கிறது.
திறவுகோல் வசனங்கள்: தானியேல் 1:19-20, “ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.”
தானியேல் 2:31, “ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.”
தானியேல் 3:17-18, “நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.”
தானியேல் 4:34-35, “அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.”
தானியேல் 9:25-27, “இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.”
சுருக்கமான திரட்டு: தானியேல் புத்தகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் அதிகாரம் எருசலேம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்படுவதை விவரிக்கிறது. பலருடன், தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர், அவர்களுடைய தைரியம் மற்றும் அவர்கள்மீது தேவனுடைய வெளிப்படையான ஆசீர்வாதம் காரணமாக, அவர்கள் ராஜாவின் சேவையில் “பதவி உயர்வு” பெற்றனர் (தானியேல் 1: 17-20).
2-7 வரையிலுள்ள அதிகாரங்கள், நேபுகாத்நேச்சார் ஒரு சொப்பனம் கண்டதை பதிவு செய்கிறது. அந்த சொப்பனத்தை தானியேல் மட்டுமே சரியாக விளக்க முடியும் என்பதையும் விவரிக்கிறது. ஒரு பெரிய சிலை பற்றிய நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் இனிவரும் எதிர்காலத்தில் எழும்ப்பப்போகிற ராஜ்யங்களைக் குறிக்கிறது. நேபுகாத்நேச்சார் தன்னைப் பற்றிய ஒரு பெரிய சிலையை உருவாக்கி, அதை வணங்கும்படி அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார். சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ என்னும் யூத வாலிபர்கள் மறுத்ததினால், எரிகிற அக்கினிச் சுவாலைக்குள் வீசப்பட்டாலும் அற்புதமாக தேவனால் காப்பாற்றப்பட்டனர். நேபுகாத்நேச்சார் தனது பெருமைக்காக தேவனால் தண்டிக்கப்படுகிறார், ஆனால் தேவனுடைய இறையாண்மையை அங்கீகரித்து ஒப்புக்கொண்டவுடன் பின்னர் மீட்டெடுக்கப்படுகிறார்.
எருசலேமில் உள்ள ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை நேபுகாத்நேச்சரின் மகன் பெல்ஷாத்சார் தவறாகப் பயன்படுத்துவதையும், தேவனிடமிருந்து ஒரு எச்சரிப்பின் செய்தியைப் பெறுவதையும் தானியேல் 5-ஆம் அதிகாரம் பதிவுசெய்கிறது. தேவனிடமிருந்து வரும் நியாயத்தீர்ப்பின் செய்தியை தானியேல் மட்டுமே அந்த எழுத்தை விளக்க முடியும்படியாயிற்று. ராஜாவினிடத்தில் ஜெபம் செய்ய மறுத்ததற்காக தானியேல் சிங்கங்களின் குகையில் வீசப்படுகிறார், ஆனால் அதிசயமாக தேவனால் காப்பாற்றப்படுகிறார். தேவன் தானியேலுக்கு தரிசனத்தில் நான்கு மிருகங்களைக் காண்பிக்கிறார். நான்கு மிருகங்களும் பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரேக்கம் மற்றும் ரோமாபுரி ஆகிய ராஜ்யங்களைக் குறிக்கின்றன.
8-12 வரையிலுள்ள அதிகாரங்களில், இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா, ஒரு வெள்ளாட்டுக்கடா மற்றும் பல கொம்புகள் சம்பந்தப்பட்ட ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டுள்ளது - இது எதிர்கால ராஜ்யங்களையும் அவற்றின் ராஜாக்களையும் குறிக்கிறது. தானியேல் 9 ஆம் அதிகாரம் தானியேலின் “எழுபது வாரங்கள்” குறித்த தீர்க்கதரிசனத்தை பதிவு செய்கிறது. மேசியா எப்போது வந்து சங்கரிக்கப்படுவார் என்பதற்கான துல்லியமான காலக்கெடுவை தேவன் தானியேலுக்கு கொடுத்தார். இஸ்ரவேலுடன் ஏழு ஆண்டுகள் உடன்படிக்கை செய்து பின்னர் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதை முறித்துக் கொள்ளும் ஒரு எதிர்கால ராஜாவினைப் பற்றியும் இந்த தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. இந்த பெரிய தரிசனத்திற்குப் பிறகு தானியேல் ஒரு தேவதூதனால் பார்வையிடப்பட்டு பலப்படுத்தப்படுகிறார், தேவதூதன் அந்த தரிசனத்தை தானியேலுக்கு மிக விரிவாக விளக்குகிறார்.
முன்னிழல்கள்: எரிகிற அக்கினிச்சூளை மற்றும் சிங்கங்களின் குகையிலுள்ள தானியேல் சம்பவங்களில் கிறிஸ்துவால் வழங்கப்பட்ட இரட்சிப்பின் முன்னறிவிப்பை நாம் காண்கிறோம். மூன்று மனிதர்களும் தேவன் ஒரு இரட்சிக்கும்/விடுவிக்கும் தேவன் என்று அறிவிக்கிறார்கள், அவர் தப்பிக்க ஒரு வழியை வழங்க முடியும் என்றும் உறுதியாக நம்புகிறார்கள் (தானியேல் 3:17). அதேபோல், நம்முடைய பாவங்களுக்காக இயேசுவை அனுப்புவதன் மூலம், நரகத்தின் நெருப்பிலிருந்து தப்பிக்க தேவன் ஒரு வழியை வழங்கியுள்ளார் (1 பேதுரு 3:18). தானியேலின் விஷயத்தில், சிங்கங்களின் வாயை மூடுவதற்கு தேவன் ஒரு தேவதூதனை வழங்கினார், மேலும் தானியேலை மரணத்திலிருந்து காப்பாற்றினார். நம்மை பட்சிக்கும் அக்கினியாக அச்சுறுத்தும் பாவத்தின் ஆபத்துகளிலிருந்து நம்மை விடுவிக்கும் நம்முடைய ஏற்பாடாக இயேசு கிறிஸ்து இருக்கிறார்.
கடைசிக் காலங்களைப் பற்றிய தானியேலின் தரிசனம் இஸ்ரவேலின் மேசியாவை சித்தரிக்கிறது, அவர்களால் பலர் கழுவப்பட்டு பரிசுத்தமாவார்கள் (தானியேல் 12:10). அவர் நம்முடைய நீதியாக இருக்கிறார் (1 பேதுரு 5:21) நம்முடைய பாவங்கள் இரத்தாம்பரம்போல் சிவந்திருந்தாலும் அது கழுவப்பட்டு வெண்பனியைப் போல வெண்மையாக இருப்போம் (ஏசாயா 1:18).
நடைமுறை பயன்பாடு: சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோவைப் போலவே, நாம் எப்போதும் சரியானது எது என்று அறிந்தவற்றிற்காக தைரியமாக நிற்க வேண்டும். நம்மீது வரக்கூடிய எந்த தண்டனையையும் விட தேவன் பெரியவர். தேவன் நம்மை விடுவிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதல்லாமல், அவர் எப்போதும் நம் நம்பிக்கைக்கு தகுதியானவர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். நமக்கு எது சிறந்தது என்பதை தேவன் நன்கு அறிவார், மேலும் அவரை நம்பி அவருக்குக் கீழ்ப்படிபவர்களை அவர் கனம்பண்ணுகிறார்/கௌரவிக்கிறார்.
தேவனுக்கு ஒரு திட்டம் உள்ளது, அவருடைய திட்டம் சிக்கலான விவரங்களுக்குள் ஒளிந்து உள்ளது. தேவன் யாவற்றையும் அறிந்திருக்கிறார், அவர் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார். தேவன் முன்னுரைத்த அனைத்தும் அவர் உரைத்தபடியே உண்மையாகிவிட்டன. ஆகவே, தேவன் அறிவித்தபடியே எதிர்காலத்திற்காக அவர் முன்னறிவித்த விஷயங்கள் ஒரு நாள் நிகழும் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும்.
English
தானியேல் புத்தகம்