ஆதியாகமம் புத்தகம்
எழுத்தாளர்: ஆதியாகமம் புத்தகத்தின் எழுத்தாளர் யார் என்று குறிப்பாக அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், பாரம்பரியமாக, தொன்றுதொட்டு தொடர்ச்சியாக இந்த புத்தகத்தின் எழுத்தாளர் மோசே என்று நம்பப்பட்டும் கருதப்பட்டும் வருகிறது. ஆதியாகமத்தின் எழுத்தாளர் மோசேதான் என்பதை மறுப்பதற்கு உறுதியான காரணங்கள் எதுவும் இல்லை.எழுதப்பட்ட காலம்: ஆதியாகமம் புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்று அதில் குறிப்பிடவில்லை. மோசே இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து புறப்படப்பண்ணி வெளியே அழைத்துச் சென்ற காலத்திற்கும் அவரது மரணத்திற்கும் இடையில், எழுதப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அதாவது கி.மு. 1440 முதல் கி.மு. 1400 வரையிலுள்ள காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.
எழுதப்பட்டதன் நோக்கம்: ஆதியாகமம் புத்தகம் சில நேரங்களில் முழு வேதாகமத்தினுடைய "விதைக்கரு" என்று அழைக்கப்படுகிறது. வேதாகமத்திலுள்ள பெரும்பாலான முக்கிய கோட்பாடுகள் ஆதியாகமம் புத்தகத்தில் "விதை" வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மனிதனின் வீழ்ச்சி, அவனுடைய இரட்சிப்பு அல்லது மீட்பினைக் குறித்த தேவனுடைய வாக்குறுதியும் பதிவு செய்யப்பட்டுள்ளது (ஆதியாகமம் 3:15). சிருஷ்டிப்பின் கோட்பாடுகள், பாவத்தின் குற்றச்சாட்டு, நீதிமானாக்குதல், பிராயச்சித்தம், சீரழிவு, கோபம், கருணை, இறையாண்மை, பொறுப்பு மற்றும் இன்னும் பலதும் ஆதியாகமம் எனப்படும் இந்த புத்தகத்தில் அவைகளின் தோற்றம் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாழ்க்கையின் பல பெரிய கேள்விகளுக்கு ஆதியாகமத்தில் பதில் அளிக்கப்படுகிறது. (1) நான் எங்கிருந்து வந்தேன்? (தேவன் நம்மைப் படைத்தார் - ஆதியாகமம் 1:1) (2) நான் ஏன் இங்கே இருக்கிறேன்? (தேவனோடு உறவு கொள்ள நாம் இங்கு வந்துள்ளோம் - ஆதியாகமம் 15:6) (3) நான் எங்கே போகிறேன்? (மரணத்திற்குப் பிறகு நமக்கு ஒரு இடம் இருக்கிறது - ஆதியாகமம் 25:8). ஆதியாகமம் புத்தகம், விஞ்ஞானி, வரலாற்றாசிரியர், இறையியலாளர், இல்லத்தரசி, விவசாயி, பயணி மற்றும் தேவனுடைய மனிதனோ மனுஷியோ யாவருக்கும் ஏற்றதாக இருந்து முறையிடுகிறது. மனிதகுலத்திற்கான தேவனுடைய திட்டமான வேதாகமத்தின் கதைக்கு இந்த புத்தகம் ஒரு பொருத்தமான தொடக்கமாகும்.
திறவுகோல் வசனங்கள்: ஆதியாகமம் 1:1, "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்."
ஆதியாகமம் 3:15, "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்."
ஆதியாகமம் 12:2-3, "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்."
ஆதியாகமம் 50:20, "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்."
சுருக்கமான திரட்டு: ஆதியாகமம் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: ஆதி வரலாறு மற்றும் முற்பிதாக்களின் வரலாறு. ஆதி வரலாற்றுப் பதிவுகள் (1) சிருஷ்டிப்பு (ஆதியாகமம் 1-2 அதிகாரங்கள்); (2) மனிதனின் வீழ்ச்சி (ஆதியாகமம் 3-5 அதிகாரங்கள்); (3) ஜலப்பிரளயம் (ஆதியாகமம் 6-9 அதிகாரங்கள்); மற்றும் (4) சிதறடிக்கப்படுதல் (ஆதியாகமம் 10-11 அதிகாரங்கள்) ஆகியவற்றை பதிவுச் செய்கிறது. முற்பிதாக்களின் வரலாறு நான்கு முக்கியமான மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது: (1) ஆபிரகாம் (ஆதியாகமம் 12-25:8); (2) ஈசாக்கு (ஆதியாகமம் 21:1-35-29); (3) யாக்கோபு (ஆதியாகமம் 25:21-50: 14); மற்றும் (4) யோசேப்பு (ஆதியாகமம் 30:22-50:26).
தேவன் பாவத்தில் விழாத நன்றாக இருந்த ஒரு பிரபஞ்சத்தை படைத்தார். அவருடன் தனிப்பட்ட உறவைப் பெற தேவன் மனிதகுலத்தைப் படைத்தார். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையால் பாவம் செய்து அதன் மூலமாக தீமையையும் மரணத்தையும் உலகிற்குக் கொண்டு வந்தார்கள். தேவன் எதையும் நல்லதாகக் காணும் ஒரே ஒரு குடும்பம் மட்டும் தவிர்த்து உலகில் மீதமுள்ள அனைவரும் அனைத்தும் தீமைக்குள்ளாக சீராக அதிகரித்து இருந்தன. தீமையைத் துடைக்க தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பினார், ஆனால் நோவாவையும் அவருடைய குடும்பத்தினரையும் பேழையில் இருந்த விலங்குகளுடன் மீட்டார். ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, மனிதகுலம் மீண்டும் பலுகிப்பெருகி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
தேவன் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தார், அவர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களையும் இறுதியில் வாக்களிக்கப்பட்ட மேசியாவையும் வரும்படி செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசை ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கிற்கும், பின்னர் ஈசாக்கின் குமாரன் யாக்கோபுவுக்கும் அனுப்பப்பட்டது. தேவன் யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார், அவருடைய பன்னிரண்டு குமாரர்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பிதாக்களானார்கள். தேவன் தமது இறையாண்மையில், யாக்கோபின் குமாரன் யோசேப்பை எகிப்துக்கு அனுப்பினார். சகோதரர்களால் தீமையை நோக்கமாகக் கொண்ட இந்த செயல், தேவனால் நன்மை செய்யப்பட வேண்டும் என்று, இறுதியில் எகிப்தில் பெரும் அதிகாரமுள்ள சக்தியாக உயர்ந்த யோசேப்பு அவர்களால் பேரழிவுகரமான பஞ்சத்திலிருந்து யாக்கோபும் அவரது குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர்.
முன்னிழல்கள்: பல புதிய ஏற்பாட்டு கருப்பொருள்கள் ஆதியாகமத்தில் வேர்களைக் கொண்டுள்ளன. இயேசு கிறிஸ்து சாத்தானின் வல்லமையை அழிக்கும் ஸ்திரீயின் வித்து (ஆதி. 3:15). யோசேப்பைப் போலவே, இயேசுவை சிலுவையில் அறைந்தவர்கள் அதை தீமைக்காக நோக்கினாலும், தம்முடைய குமாரனுடைய பலியின் மூலம் மனிதகுலத்தின் நன்மைக்கான தேவனின் திட்டம் நன்மைக்காகவே கருதப்பட்டது. வேதாகமத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பல மீதியானவர்களில் நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் முதன்மையானவர்கள் ஆகும். மிகுந்த முரண்பாடுகள் மற்றும் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், உண்மையுள்ளவர்களின் மீதியை தேவன் எப்போதும் தனக்காகவே பாதுகாக்கிறார். இஸ்ரவேலரின் எஞ்சியவர்கள் பாபிலோனிய சிறைவாசத்திற்குப் பிறகு எருசலேமுக்குத் திரும்பினர்; ஏசாயா மற்றும் எரேமியாவில் விவரிக்கப்பட்டுள்ள எல்லா துன்புறுத்தல்களினாலும் தேவன் ஒரு மீதியான கூட்டத்தை பாதுகாத்தார்; 7000 ஆசாரியர்களில் எஞ்சியவர்கள் யேசபேலின் கோபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள்; யூதர்களில் எஞ்சியவர்கள் ஒரு நாள் அவர்களின் உண்மையான மேசியாவை ஏற்றுக்கொள்வார்கள் என்று தேவன் வாக்குப்பண்ணினார் (ரோமர் 11). தேவன் மேல் ஆபிரகாம் காண்பித்த விசுவாசம், தேவனுடைய பரிசாகவும் யூதருக்கும் புறஜாதியினருக்கும் இரட்சிப்பின் அடிப்படையாகவும் இருக்கும்படி செய்தது (எபேசியர் 2:8-9; எபிரெயர் 11).
நடைமுறை பயன்பாடு: ஆதியாகமத்தின் முக்கிய கருப்பொருள் தேவனுடைய நித்திய இருப்பு மற்றும் அவர் உலகத்தை உருவாக்கியதாகும். தேவனுடைய இருப்பைக் காக்க எழுத்தாளரின் தரப்பில் எந்த முயற்சியும் இல்லை; தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வவல்லமையுள்ளவர், எப்போதும் இருக்கிறவராகவே இருந்தார், எப்போதும் இருப்பார் என்று எழுத்தாளர் எளிய நடையில் கூறுகிறார். அதேபோல், ஆதியாகமத்தின் உண்மைகளை மறுப்பவர்களின் கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தபோதிலும், நமக்கு இவைகளின் மேல் நம்பிக்கை உள்ளது. எல்லா மக்களும், கலாச்சாரம், தேசியம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சிருஷ்டிகருக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மனிதனுடைய வீழ்ச்சியின் போது, உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பாவத்தின் காரணமாக, நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்படுகிறோம். ஆனால் ஒரு சிறிய தேசமான இஸ்ரவேல் மூலம், மனிதகுலத்திற்கான தேவனுடைய மீட்பின் திட்டம் வெளிப்படுத்தப்பட்டு அது அனைவருக்கும் கிடைத்தது. அந்த திட்டத்தில் தான் நாமும் பயனடைந்து மகிழ்ச்சியடைகிறோம்.
தேவன் பிரபஞ்சத்தையும், பூமியையும், அதிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தார். நம் வாழ்வில் உள்ள கவலைகளை கையாள நாம் பூரணமாக அவரை நம்பலாம். தேவன் ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை எடுத்து முற்றிலுமாய் அதை மாற்ற வல்லவராக இருக்கிறார்; அதாவது ஆபிரகாமும் சாராவும் குழந்தை இல்லாதவர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் தேவனை நம்பினபடியால் தேவன் அவர்களை ஆசிர்வதித்தார். நாமும் வெறுமனே அவரை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்தால் ஆச்சரியமான காரியங்களைத் தேவன் செய்வார். யோசேப்பைப் போலவே நம் வாழ்க்கையிலும் பயங்கரமான மற்றும் அநியாயமான விஷயங்கள் நடக்கக்கூடும், ஆனால் தேவன் மீதும் அவருடைய இறையாண்மைத் திட்டத்தின் மீதும் நம்பிக்கை இருந்தால், தேவன் எப்போதும் ஒரு சிறந்த நன்மையைக் கொண்டுவருவார். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28).
English
ஆதியாகமம் புத்தகம்