settings icon
share icon

எரேமியாவின் புத்தகம்

எழுத்தாளர்: எரேமியா முதல் அதிகாரம், முதலாவது வசனம் எரேமியா தீர்க்கதரிசியை இந்த எரேமியா புத்தகத்தின் எழுத்தாளராக அடையாளம் காண்பிக்கிறது.

எழுதப்பட்ட காலம்: எரேமியா புத்தகம் கி.மு. 630 முதல் கி.மு. 580 வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: எரேமியா புத்தகம் யூதா தேசத்திற்கு இறுதியான தீர்க்கதரிசனங்களை பதிவுசெய்கிறது, தேசம் மனந்திரும்பாவிட்டால் அழிவை எதிர்கொள்ளும் என்று கடுமையாக எச்சரிக்கிறது. எரேமியா தேசத்தை தேவனிடமாக திரும்புமாறு அழைக்கிறார். அதே சமயம், மனந்திரும்பாத விக்கிரகாராதனை மற்றும் ஒழுக்கக்கேடு காரணமாக யூதாவினுடைய அழிவின் தவிர்க்க முடியாத தன்மையையும் எரேமியா காண்கிறார்.

திறவுகோல் வசனங்கள்: எரேமியா 1:5, “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.”

எரேமியா 17:9, “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”

எரேமியா 29:10-11, “பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”

எரேமியா 52:12-13, “ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது. அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.”

சுருக்கமான திரட்டு: எரேமியாவின் புத்தகம் முதன்மையாக யூதாவின் மீது விக்கிரகாராதனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான செய்தியாகும் (எரேமியா 7:30-34; 16:10-13; 22:9; 32:29; 44:2-3). கடைசி நீதியுள்ள ராஜாவான யோசியா ராஜாவின் மரணத்திற்குப் பிறகு, யூத தேசம் தேவனையும் அவருடைய கட்டளைகளையும் முற்றிலும் கைவிட்டுவிட்டது. எரேமியா யூதாவை ஒரு விபச்சாரியுடன் ஒப்பிடுகிறார் (எரேமியா 2:20; 3:1-3). விக்கிரகாராதனையை மிகக் கடுமையாக நியாயந்தீர்ப்பேன் என்று தேவன் வாக்குறுதி அளித்திருந்தார் (லேவியராகமம் 26:31-33; உபாகமம் 28:49-68), தேவனுடைய நியாயத்தீர்ப்பு நெருங்கிவிட்டதாக எரேமியா யூதாவிற்கு எச்சரிக்கை விடுவிக்கிறார். தேவன் யூதாவை எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அழிவிலிருந்து விடுவித்தார், ஆனால் அவருடைய இரக்கம் அதன் முடிவில் இருந்தது. நேபுகாத்நேச்சார் ராஜா யூதாவை வென்று அதை அவருக்குக் கீழ்ப்படுத்துவதாக எரேமியா பதிவு செய்கிறார் (எரேமியா 24:1). மேலும் கலகத்தின் பின்னர், யூதாவையும் எருசலேமையும் அழிக்கவும் பாழாக்கவும் தேவன் நேபுகாத்நேச்சரையும் அவனுடைய பாபிலோனியப் படைகளையும் திரும்ப அழைத்து வந்தார் (எரேமியா 52-ஆம் அதிகாரம்). இந்த மிகக் கடுமையான நியாயத்தீர்ப்பில் கூட, தேவன் அவர்களுக்குக் கொடுத்த தேசத்தில் யூதாவை மீட்டெடுப்பதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார் (எரேமியா 29:10).

முன்னிழல்கள்: எரேமியா 23:5-6 வரையிலுள்ள வசனங்கள், வரவிருக்கும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தை முன்வைக்கிறது. தீர்க்கதரிசி அவரை தாவீதின் வீட்டிலிருந்து தோன்றுகிற ஒரு கிளை என்று விவரிக்கிறார் (வச. 5; மத்தேயு 1), ஞானத்திலும் நீதியிலும் ஆட்சி செய்யும் ராஜாவாக சித்தரிக்கப்படுகிறார் (வச. 5, வெளிப்படுத்துதல் 11:15). தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரட்சிப்பை அளிப்பதால், கிறிஸ்துவே இஸ்ரவேலால் அவளுடைய உண்மையான மேசியாவாக அங்கீகரிக்கப்படுவார் (வச. 6; ரோமர் 11:26).

நடைமுறை பயன்பாடு: எரேமியா தீர்க்கதரிசி கொடுப்பதற்கு மிகவும் கடினமான நியாயத்தீர்ப்பின் செய்தியைக் கொண்டிருந்தார். எரேமியா யூதா தேசத்தை நேசித்தார், ஆனால் அவர் அதனைக்காட்டிலும் கூடுதலாக மிகவும் அதிகமாக தேவனை நேசித்தார். எரேமியா தனது சொந்த மக்களுக்கு ஒரு தொடர்ச்சியான தீர்ப்பை வழங்குவது எவ்வளவு வேதனையானது, எரேமியா செய்யும்படி மற்றும் சொல்லும்படியாக தேவன் சொன்னவிகளுக்கு அவர் கீழ்ப்படிந்தார். எரேமியா யூதாவிற்காக தேவனிடமிருந்து இரக்கத்தை கோரினார், ஜெபித்தார், ஆனால் தேவன் நல்லவர், நீதியுள்ளவர், நியாயம் செய்கிறவர் என்று உறுதியாக நம்பினார். நாமும் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அது கடினமாக இருக்கும்போது கூட, தேவனுடைய சித்தத்தை நம்முடைய சொந்த விருப்ப ஆசைகளை விட முக்கியமானது என்று நாம் அங்கீகரிக்க வேண்டும், மேலும் தேவன் தனது எல்லையற்ற அளவில்லாத ஞானத்திலும், முழுமையான திட்டத்திலும், அவருடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததைக் கொண்டு வருவார் என்றும் நம்பவேண்டும் (ரோமர் 8:28) .

English



முகப்பு பக்கம்

எரேமியாவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries