யோவேலின் புத்தகம்
எழுத்தாளர்: யோவேலின் புத்தகம் அதன் எழுத்தாளரை தீர்க்கதரிசியாகிய யோவேல் தான் என்று கூறுகிறது (ஜோயல் 1:1).எழுதப்பட்ட காலம்: யோவேலின் புத்தகம் கி.மு. 835 முதல் கி.மு. 800 வரையிலுள்ள காலங்களின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.
எழுதப்பட்டதன் நோக்கம்: புத்தகத்தின் அமைப்பான யூதா, வெட்டுக்கிளிகளின் பரந்த கூட்டத்தால் அழிக்கப்படுகிறது. வெட்டுக்கிளிகளின் இந்த படையெடுப்பு தானியங்கள், திராட்சைத் தோட்டங்கள், வயல்கள் மற்றும் மரங்கள் போன்ற அனைத்தையும் அழிக்கிறது. வெட்டுக்கிளிகளைப் போல அணிவகுத்துச் செல்லும் மனித இராணுவத்தை யோவேல் உருவக அடையாளமாக விவரிக்கிறார், இவை அனைத்தையும் தனது பாவங்களுக்காக தேசத்திற்கு எதிராக வரும் தெய்வீக நியாயத்தீர்ப்பாக கருதுகிறார். புத்தகம் இரண்டு முக்கிய நிகழ்வுகளால் சிறப்பிக்கப்படுகிறது. ஒன்று வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, மற்றொன்று ஆவியானவரின் வெளிப்பாடு. இதன் ஆரம்ப நிறைவேறுதல் பெந்தெகொஸ்தே நாளில் நடந்ததாக அப்போஸ்தலர் 2-ல் பேதுரு மேற்கோள் காட்டியுள்ளார்.
திறவுகோல் வசனங்கள்: யோவேல் 1:4, “பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது.”
யோவேல் 2:25, “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.”
யோவேல் 2:28, “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.”
சுருக்கமான திரட்டு: வெட்டுக்கிளிகளின் கொடூரமான வாதையால் நிலம் முழுவதும் கடுமையான பஞ்சத்தைத் தொடர்ந்து சந்தித்தது. யூதாவிற்கு எச்சரிக்கை வார்த்தைகளை அனுப்ப யோவேல் இந்த நிகழ்வுகளை வினையூக்கியாக பயன்படுத்துகிறார். ஜனங்கள் விரைவாகவும் முழுமையாகவும் மனந்திரும்பாவிட்டால், இயற்கை கூறுகளைப் போலவே எதிரிப் படைகளும் தேசத்தை விழுங்கிவிடும் என்று எச்சரிக்கிறார். தேவனுடைய மன்னிப்பைப் பெறும்படிக்கு தங்களைத் தாங்களே உபவாசித்து தேவனுக்கு முன்பாக தாழ்த்தும்படிக்கு யோவேல் எல்லா ஜனத்திற்கும், தேசத்தின் ஆசாரியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றார். அவர்கள் பதிலளித்தால், தேசத்திற்கு புதுப்பிக்கப்பட்ட வஸ்துக்கள் மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இருக்கும். ஆனால் கர்த்தருடைய நாள் வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து தேசங்களும் அவருடைய நியாயத்தீர்ப்பைப் பெறுவதால், பயங்கரமான வெட்டுக்கிளிகள் ஒப்பிடுகையில் பித்தலாட்டங்களாகத் தோன்றும்.
யோவேல் புத்தகத்தின் முக்கிய கருப்பொருள் கர்த்தருடைய நாள், தேவனுடைய கோபம் மற்றும் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகியவைகளாகும். தேவனுடைய கோபம், வல்லமை மற்றும் பரிசுத்தத்தன்மை ஆகியவற்றின் பண்புகளை வெளிப்படுத்தும் நாள் இதுவாகும், அவருடைய எதிரிகளுக்கு இது ஒரு திகிலூட்டும் நாளுமாகும். முதல் அதிகாரத்தில், தேசத்தின் மீது வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் கர்த்தருடைய நாள் வரலாற்று ரீதியாக அனுபவிக்கப்படுகிறது. 2:1-17 வரையிலுள்ள வேதபாகம், இடைக்கால அதிகாரமாகும், அதாவது இதில் யோவேல் தீர்க்கதரிசி வெட்டுக்கிளிகளின் வாதை மற்றும் பஞ்சத்தின் வறட்சியின் உருவகத்தை மனந்திரும்புதலுக்கான அழைப்பைப் புதுப்பிக்க பயன்படுத்துகிறார். 2:18-3:21 வரையிலுள்ள வேதபாகம், கர்த்தருடைய நாளை இனிச்சம்பவிக்கப்போகிற எதிர்கால சொற்களில் விவரிக்கிறது மற்றும் சரீரப் பிரகாரமான மறுசீரமைப்பு (2:21-27), ஆவிக்குரிய மறுசீரமைப்பு (2:28-32) மற்றும் தேசிய மறுசீரமைப்பு (3:1-21) ஆகியவை அடங்கியுள்ளன.
முன்னிழல்கள்: பழைய ஏற்பாடு பாவத்திற்கான நியாயத்தீர்ப்பைப் பற்றி பேசும்போதெல்லாம், அது தனிநபராகவோ அல்லது தேசிய பாவமாகவோ இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் வருகையானது அதில் முன்னறிவிக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் மனந்திரும்பும்படி இஸ்ரவேலை தொடர்ந்து எச்சரித்தனர், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்தபோதும், அவர்களின் மனந்திரும்புதல் நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கும் அதன் செயல்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டது. அவர்களுடைய ஆலய பலிகள் இறுதியாக செலுத்தப்படப்போகிற பலியின் நிழலாக இருந்தன, அவை எல்லா நேரத்திற்கும் ஒரேஒரு முறை வழங்கப்பட்டன, அது சிலுவையில் நிறைவேற்றப்பட்டது (எபிரெயர் 10:10). கர்த்தருடைய நாளில் வரும் தேவனுடைய கடைசி நியாயத்தீர்ப்பு “பெரியதும் பயங்கரமானது” என்று யோவேல் நமக்குச் சொல்லுகிறார். அதை யார் தாங்க முடியும்? ” (யோவேல் 2:11). பதில், நம்மால், அத்தகைய தருணத்தை ஒருபோதும் தாங்க முடியாது என்பதேயாகும். ஆனால் நம்முடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காக கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருந்தால், நியாயத்தீர்ப்பு நாளுக்கு நாம் பயப்பட ஒன்றுமில்லை/தேவையில்லை.
நடைமுறை பயன்பாடு: மனந்திரும்புதல் இல்லாமல், நியாயத்தீர்ப்பு கடுமையானதாகவும், முழுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். நம்முடைய நம்பிக்கை விசுவாசம் நம்முடைய உடைமைகளில் இருக்கக்கூடாது, மாறாக நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் இருக்க வேண்டும். தேவன் சில சமயங்களில் இயற்கையையோ, துக்கத்தையோ அல்லது பிற பொதுவான நிகழ்வுகளையோ நம்மை அவரிடம் நெருங்கி வரவழைப்பதற்காக பயன்படுத்தலாம். ஆனால் அவருடைய இரக்கத்திலும் கிருபையிலும், நம்முடைய இரட்சிப்பிற்கான உறுதியான திட்டத்தை அவர் வழங்கியுள்ளார் – அதுதான் இயேசு கிறிஸ்து என்னும் நம்முடைய இரட்சகர், நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய அவருடைய பரிபூரண நீதிக்காக நம்முடைய பாவத்தை தம்மேல் எடுத்துக்கொண்டார் (2 கொரிந்தியர் 5:21). இழக்க நேரமில்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்பு இரவில் வருகிற ஒரு திருடனைப்போல சீக்கிரமாக விரைவாக வரும் (1 தெசலோனிக்கேயர் 5:2), நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். இன்றே இரட்சிப்பின் நாள் (2 கொரிந்தியர் 6:2). "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” (ஏசாயா 55:6-7). தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதன் மூலம் மட்டுமே கர்த்தருடைய நாளில் அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
English
யோவேலின் புத்தகம்