settings icon
share icon

யோசுவாவின் புத்தகம்

எழுத்தாளர்: யோசுவாவின் புத்தகம் அதன் எழுத்தாளரை யார் என்று வெளிப்படையாக எதுவும் குறிப்பிடவில்லை. மோசேயின் ஸ்தானத்தில் இஸ்ரவேலின் தலைவராக இருந்த நூனின் குமாரனாகிய யோசுவா இந்த புத்தகத்தை எழுதியிருக்கலாம். புத்தகத்தின் பிற்பகுதி அதாவது யோசுவாவின் மரணம் மற்றும் மரணத்திற்குப் பிறகுள்ள பகுதி வேறொரு நபரால் எழுதப்பட்டிருக்கலாம். யோசுவாவின் மரணத்தைத் தொடர்ந்து பல பிரிவுகள் திருத்தப்பட்டன / தொகுக்கப்பட்டன.

எழுதப்பட்ட காலம்: யோசுவாவின் புத்தகம் ஏறக்குறைய கி.மு. 1400 முதல் கி.மு. 1370 வரையிலுள்ள ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: தேவனாகிய கர்த்தர் வாக்குறுதியளித்த தேசத்தை கைப்பற்றுவதற்கான இராணுவ தளவாடங்களையும் அவர்கள் முகாமிட்ட மற்றும் கைப்பற்றின ஸ்தலங்களையும் குறித்த ஒரு கண்ணோட்டத்தை யோசுவா புத்தகம் வழங்குகிறது. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, நாற்பது ஆண்டுகாலம் வனாந்திரத்தில் அலைந்து திரிந்ததைத் தொடர்ந்து, புதிதாக உருவான தேசம் இப்போது வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கும், மக்களைக் கைப்பற்றுவதற்கும், பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கும் தயாராக உள்ளது. இங்கே நாம் வைத்திருக்கும் கண்ணோட்டம் பல போர்களின் சுருக்கமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களையும், நிலம் கைப்பற்றப்பட்ட விதம் மட்டுமல்லாமல், அது எவ்வாறு ஒவ்வொரு கோத்திரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது என்பதையும் தருகிறது.

திறவுகோல் வசனங்கள்: யோசுவா 1:6-9, "பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

யோசுவா 24:14-15, "ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்."

சுருக்கமான திரட்டு: எகிப்திலிருந்து வெளியேறிய பின்னர் உள்ள இஸ்ரவேலரின் கதையை யோசுவாவின் புத்தகம் தொடர்கிறது. உபாகமத்தின் முடிவில் மோசே யோசுவாவை ஜனங்களின் தலைவராக அபிஷேகம் செய்தபின், சுமார் 20 ஆண்டுகளை இந்த புத்தகம் விவரிக்கிறது. யோசுவா புத்தகத்தின் இருபத்தி நான்கு அதிகாரங்களின் பிரிவுகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

அதிகாரங்கள் 1-12: வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தில் நுழைந்து வெற்றி பெறுதல்.
அதிகாரங்கள் 13-22: வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தின் பகுதிகளை விநியோகிப்பதற்கான வழிமுறைகள்.
அதிகாரங்கள் 23-24: யோசுவாவின் பிரியாவிடை முகவரி

முன்னிழல்கள்: ராகாப் என்னும் வேசியின் கதை மற்றும் இஸ்ரவேலரின் தேவன்மீது அவள் கொண்டிருந்த மிகுந்த நம்பிக்கையானது, எபிரெயர் 11:31-ல் விசுவாச வீரர்களின் பட்டியலில் கவுரவிக்கப்பட்டவர்களுடன் அவளுக்கு ஒரு இடத்தை அளிக்கிறது. அவளுடைய கதையானது பாவிகளுக்கு தேவன் அருளும் கிருபை மற்றும் விசுவாசத்தால் மட்டுமே இரட்சிப்பு என்பதை காண்பிக்கிறது. மிக முக்கியமாக, தேவனுடைய கிருபையால் அவள் மேசியாவின் வம்ச வழியில் இருக்கும்படியாயிற்று (மத்தேயு 1:15).

யோசுவா 5-ல் கொடுக்கப்பட்டுள்ளா சம்பிரதாய சடங்குகளில் ஒன்று புதிய ஏற்பாட்டில் அதன் முழுமையான நிறைவேற்றத்தைக் காண்கிறது. 1-9 வரையிலுள்ள வசனங்கள் வனாந்தரத்தில் பிறந்தவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வரும்போது விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்ற தேவனுடைய கட்டளையை விவரிக்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், தேவன் அவர்களிடமிருந்து “எகிப்தின் நிந்தையை கடந்துபோகும்படி செய்தார்”, அதாவது அவர்களுடைய முந்தைய வாழ்க்கையின் பாவங்களிலிருந்து அவர்களைத் பரிசுத்தப்படுத்தினார். கொலோசெயர் 2:10-12ல், பவுல் விசுவாசிகளை கிறிஸ்துவே அவர்களுடைய இருதயங்களில் விருத்தசேதனம் செய்ததாக விவரிக்கிறார், கிறிஸ்து இல்லாமல் உள்ள நம்முடைய முந்தைய வாழ்க்கையின் பாவ இயல்புகளை நாம் புறம்பாக்கி களைந்துள்ளோம்.

தற்செயலாக ஒருவரைக் கொன்றவர்கள் பழிவாங்கலுக்கு அஞ்சாமல் அங்கே தங்கி வாழக் கூடிய வகையில் தேவன் அவர்களுக்கு அடைக்கல பட்டணங்களை நிறுவினார். கிறிஸ்து நம்முடைய அடைக்கலம், “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு” (எபிரெயர் 6:18) என்று வாசிக்கிறோம்.

யோசுவாவின் புத்தகம் இளைப்பாறுதல் பற்றிய ஒரு இறையியல் கருப்பொருளைக் கொண்டுள்ளது. இஸ்ரவேலர்கள், 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபின், கானான் தேசத்தில் தேவன் அவர்களுக்காகத் தயார் செய்திருந்த இளைப்பாறுதலுக்குள் நுழைந்தார்கள். எபிரேயர் புத்தகத்தின் எழுத்தாளர் இந்த சம்பவத்தை கிறிஸ்துவில் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைவதைத் தடுக்கும் அவிசுவாசம் என்ற எச்சரிக்கையை கூற இந்த சம்பவத்தைப் பயன்படுத்துகிறார் (எபிரெயர் 3:7-12).

நடைமுறை பயன்பாடு: யோசுவா புத்தகத்தின் முக்கிய வசனங்களில் ஒன்று 1:8 “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்க வேண்டும்.” பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் எவ்வாறு மறந்துபோனார்கள், அதினிமித்தம் என்னென்ன பயங்கரமான விளைவுகளை அனுபவித்தார்கள் என்ற கதைகள் நிறைந்திருக்கின்றன. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, தேவனுடைய வார்த்தை நம்முடைய உயிர்நாடி. நாம் அதை புறக்கணித்தால், அதற்கேற்ப நம் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் 1:8வது வசனத்தின் கொள்கையை நாம் மனதில் கொண்டால், நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பூரணர்களாகவும், பயனடையக்கூடியவர்களாகவும் இருப்போம் (2 தீமோத்தேயு 3:16-17), யோசுவா 1:8-9 ல் கொடுக்கப்பட்டுள்ள தேவனுடைய வாக்குறுதிகள் நம்முடையதாகவும் இருப்பதைக் காண்போம்.

ஒரு தகுதியான வழிகாட்டியின் நன்மைகளுக்கு யோசுவா ஒரு பிரதான எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக அவர் மோசேயுடன் நெருக்கமாக இருந்தார். மோசேயை ஏறக்குறைய குறைபாடற்ற முறையில் தேவனைப் பின்தொடர்ந்தபோது அவர் அதைப் பார்த்தார். மோசேயிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஜெபிக்க கற்றுக்கொண்டார். மோசேயின் முன்மாதிரி மூலம் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்பதை அவர் கற்றுக்கொண்டார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மகிழ்ச்சிக்குள் நுழையமுடியாமல் போன மோசேயின் வாழ்க்கையில் காணும் எதிர்மறையான உதாரணத்திலிருந்து யோசுவா கற்றுக்கொண்டார். நீங்கள் உயிருடன் இருந்தால், நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். யாரோ, எங்கோ, உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில இளைய நபர் அல்லது நீங்கள் செல்வாக்கு செலுத்தும் ஒருவர் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்கிறார். உங்கள் முன்மாதிரியை யாராவது பின்பற்றுவார்கள். வழிகாட்டியால் பேசப்படும் சொற்களை விட அவரது வழிகாட்டுதல் மிக அதிகம். அவரது முழு வாழ்க்கையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

English



முகப்பு பக்கம்

யோசுவாவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries