settings icon
share icon

நியாயாதிபதிகள் புத்தகம்

எழுத்தாளர்: நியாயாதிபதிகள் புத்தகம் குறிப்பாக அதன் எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி தான் நியாயாதிபதிகள் புத்தகத்தை எழுதியவர் என்பது பாரம்பரியம். நியாயாதிபதிகளின் எழுத்தாளர் நியாயாதிபதிகளின் காலத்திற்குப் பிறகு வாழ்ந்ததாக உள்ளான சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. சாமுவேல் இந்த தகுதிக்கு மிகவும் சரியாகப் பொருந்துகிறார்.

எழுதப்பட்ட காலம்: நியாயாதிபதிகள் புத்தகம் கி.மு. 1045 முதல் கி.மு. 1000 வரையிலுள்ள ஆண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: நியாயாதிபதிகள் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1) 1-16 வரையிலுள்ள அதிகாரங்கள், இஸ்ரவேலர் கானானியர்களைத் தோற்கடித்து, பெலிஸ்தியரின் தோல்வி மற்றும் சிம்சோனின் மரணத்துடன் முடிவடையும் விடுதலைப் போர்களைப் பற்றிய விவரத்தை அளிக்கிறது; 2) 17-21 வரையிலுள்ள அதிகாரங்கள் பின் இணைப்பு என குறிப்பிடப்படுகின்றன மற்றும் முந்தைய அதிகாரங்களுடன் தொடர்புபடுத்தவில்லை. இந்த அதிகாரங்கள் "இஸ்ரவேலில் ராஜா இல்லாத காலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (நியாயாதிபதிகள் 17:6; 18: 1; 19:1; 21:25). ரூத் புத்தகம் முதலில் நியாயாதிபதிகள் புத்தகத்தின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் கி.பி. 450-ல் அது அதன் தனிப்பட்ட ஒரு புத்தகமாக மாற்றப்பட்டது.

திறவுகோல் வசனங்கள்: நியாயாதிபதிகள் 2:16-19: "கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள். கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார். நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்."

நியாயாதிபதிகள் 10:15: "இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொன்னார்கள்."

நியாயாதிபதிகள் 21:25: “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.”

சுருக்கமான திரட்டு: யெகோவா [தேவன்] தனது பிள்ளைகளால் எவ்வளவு சாதாரணமாக ஆண்டுதோறும், நூற்றாண்டுக்குப் பின் நூற்றாண்டுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதற்கான ஒரு சோகமான கணக்கு தான் நியாயாதிபதிகள் புத்தகம். நியாயாதிபதிகள் புத்தகம் யோசுவாவின் புத்தகத்திற்கு ஒரு சோகமான வேறுபாடாகும், இது தேசத்தை கைப்பற்றுவதில் தேவனுக்கு கீழ்ப்படிந்ததற்காக இஸ்ரவேலருக்கு தேவன் அளித்த ஆசீர்வாதங்களை விவரிக்கிறது. நியாயாதிபதிகளில், அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும் விக்கிரகாராதனைக்காரர்களாகவும் இருந்தார்கள், இது அவர்களின் பல தோல்விகளுக்கு வழிவகுத்தது. தம்முடைய ஜனம் தங்கள் துன்மார்க்க வழிகளிலிருந்து மனந்திரும்பி, அவருடைய பெயரைக் கூப்பிடும்போதெல்லாம் தேவன் தம்முடைய அன்பைக் காண்பிக்கத் தவறியதில்லை. (நியாயாதிபதிகள் 2:18) இஸ்ரவேலின் 15 நியாயாதிபதிகள் மூலமாக, ஆபிரகாமுக்கு அவருடைய சந்ததியினரைப் பாதுகாக்கவும் ஆசீர்வதிக்கவும் தேவன் அளித்த வாக்குறுதியை தேவன் நினைவுகூர்ந்தார் மற்றும் மதித்தார் (ஆதியாகமம் 12:2-3).

யோசுவா மற்றும் அவரது சமகாலத்தவர்கள் இறந்த பிறகு, இஸ்ரவேலர்கள் பாகால் மற்றும் அஷ்டரோத்துக்கு அடிபணிந்து அவைகளை நமஸ்கரிக்கவும் அவைகளை சேவிக்கவும் திரும்பினர். பொய்யான கடவுள்களை வணங்குவதன் விளைவுகளை இஸ்ரவேலர்கள் அனுபவிக்க தேவன் அனுமதித்தார். அப்போதுதான் தேவனுடைய ஜனம் யெகோவாவிடம் உதவி கேட்கிறார்கள். தேவன் தம் பிள்ளைகளை நீதியுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்த நியாயாதிபதிகளை அனுப்பினார். ஆனால் காலப்போக்கில் அவர்கள் தேவனைவிட்டு விலகி, தங்கள் துன்மார்க்க வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். ஆயினும், ஆபிரகாமுடனான உடன்படிக்கையின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு, நியாயாதிபதிகள் புத்தகத்தின் 480 ஆண்டு காலம் முழுவதும் தேவன் தம் ஜனங்களை ஒடுக்குபவர்களிடமிருந்து அவர்களை காப்பாற்றினார்.

அநேகமாக மிகவும் குறிப்பிடத்தக்க நியாயாதிபதி 12-வது நியாயாதிபதியாகிய சிம்சோன், இரக்கமற்ற பெலிஸ்தியரின் ஆட்சியின் கீழ் 40 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு இஸ்ரவேலரை வழிநடத்த வந்தார். இஸ்ரவேலின் நியாயாதிபதியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஜீவனை இழந்து பெலிஸ்தர்களை வென்றெடுத்து சிம்சோன் தேவனுடைய ஜனங்களை வழிநடத்தினார்.

முன்னிழல்கள்: இஸ்ரேலை வழிநடத்த ஒரு குமாரனைப் பெறுவாய் என்று சிம்சோனின் தாய்க்கு அறிவித்திருப்பது, மேசியாவின் பிறப்பு மரியாளுக்கு அறிவித்ததை முன்னறிவிப்பதாகும். தேவன் தம்முடைய தூதனை இரு ஸ்திரீகளுக்கும் அனுப்பி, அவர்கள் “கர்ப்பமாகி ஒரு குமாரனைப் பெறுவார்கள்” என்று சொன்னார் (நியாயாதிபதிகள் 13:7; லூக்கா 1:31), அவர்கள் தேவனுடைய மக்களை வழிநடத்துவார்கள்.

தேவனுடைய ஜனங்கள் பாவம் செய்தபோதும், அவரை நிராகரித்த போதிலும் தேவனுடைய இரக்கமுள்ள மீட்பு, சிலுவையில் மரித்த கிறிஸ்துவின் சித்திரத்தை முன்வைக்கிறது. தம் ஜனங்களை தம்மை நம்புகிற அனைவரையும் அவர்கள் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசு மரித்தார். அவருடைய ஊழியத்தின்போது அவரைப் பின்தொடர்ந்தவர்களில் பெரும்பாலோர் இறுதியில் வீழ்ந்து அவரை நிராகரிப்பார்கள் என்றாலும், அவர் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உண்மையாகக் கடைப்பிடித்து, நமக்காக மரிக்க சிலுவைக்கு சென்றார்.

நடைமுறை பயன்பாடு: கீழ்ப்படியாமை எப்போதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறது. நாம் என்ன செய்யக்கூடாது என்பதற்கு இஸ்ரவேலர் ஒரு சிறந்த உதாரணத்தை முன்வைக்கிறார்கள். தேவன் எப்போதும் அவருக்கு எதிரான கிளர்ச்சியைத் தண்டிப்பார் என்று அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படியாமல் தேவனுடைய அதிருப்தியையும் ஒழுக்கத்தையும் அனுபவித்தனர். நாம் கீழ்ப்படியாமல் தொடர்ந்தால், தேவனுடைய ஒழுங்கு நடவடிக்கையை வரவழைக்கிறவர்களாக இருப்போம், காரணம் அவர் நம்முடைய துன்பங்களை விரும்பி அனுபவிக்கிறார் என்றர்த்தமல்ல, மாறாக “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (எபிரெயர் 12:6).

நியாயாதிபதிகள் புத்தகம் தேவனுடைய உண்மைத்தன்மைக்கு ஒரு சான்றாகும். “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்” (2 தீமோத்தேயு 2:13). இஸ்ரவேலரைப் போலவே நாம் அவரிடம் விசுவாசமற்றவர்களாக இருந்தாலும், நம்மைக் காப்பாற்றுவதற்கும், நம்மை போஷிப்பதற்கும் அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 5:24) மற்றும் நாம் மன்னிப்பைத் தேடும்போது மன்னிக்கவும் செய்கிறார் (1 யோவான் 1:9). " நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” (1 கொரிந்தியர் 1:8-9).

English



முகப்பு பக்கம்

நியாயாதிபதிகள் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries