தீத்துவின் புத்தகம்
எழுத்தாளர்: தீத்து முதலாம் அதிகாரத்தின் முதலாவது வசனம், அப்போஸ்தலனாகிய பவுல்தான் தீத்து புத்தகத்தின் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்துகிறது.எழுதப்பட்ட காலம்: தீத்துவுக்கு எழுதின நிருபம் ஏறக்குறைய கி.பி. 66-ல் எழுதப்பட்டதாகும். பவுலின் பல சுவிசேஷப் பயணங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவர் எபிரஸில் உள்ள நிக்கொப்போலிக்கிலிருந்து தீத்துவுக்கு இந்த நிருபத்தை எழுதியதைக் காட்டுகிறது. சில வேதாகம மொழிபெயர்ப்புகளில், மக்கெதோனியாவில் உள்ள நிக்கொப்போலிக்கிலிருந்து பவுல் இந்த நிருபத்தை எழுதியதாக நிருபத்தின் மேற்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய ஒரு இடம் எதுவும் இல்லை மற்றும் இந்த மேற்குறிப்புக்கள் உண்மையானவை அல்ல என்பதால் அவைகள் அதிகாரமற்றதாகும்.
எழுதப்பட்டதன் நோக்கம்: தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டு கடிதங்களைப் போலவே தீத்துவிற்கும் பவுல் எழுதிய இந்த நிருபம் மேய்ப்பர்களுக்கு எழுதப்பட்ட நிருபங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த நிருபத்தை அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தில் தன் சகோதரரான தீத்துவை ஊக்குவிப்பதற்காக எழுதினார், பவுல் தனது மிஷனரி பயணங்களின்பொது நிறுவிய திருச்சபைகளுள் ஒரு திருச்சபையை வழிநடத்தும்படியாக தீத்துவை கிரேத்தா தீவில் விட்டுவிட்டுப் புறப்பட்டார் (தீத்து 1:5). இந்த நிருபம் தீத்துவினை திருச்ச்சபைக்கான தலைவர்களுக்கு என்னென்ன தகுதிகள் காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. கிரேத்தா தீவில் வசிப்பவர்களின் பண்புகளைக் குறித்தும் அவர் தீத்துவை எச்சரிக்கிறார் (தீத்து 1:12).
திருச்சபையில் ஒரு தலைவரில் காணப்படவேண்டிய தகுதிகளைக் குறித்து தீத்துவிற்கு அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், தீத்துவை நிக்கொபோலிக்கு வருகை தரும்படியும் பவுல் ஊக்குவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பவுல் தீத்துவையும் அதுபோல் மற்றவர்களையும் தொடர்ந்து கர்த்தருடைய கிருபையில் வளர்த்து அவர்களை சீஷராக்கினார் (தீத்து 3:13).
திறவுகோல் வசனங்கள்: தீத்து 1:5, “நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.”
தீத்து 1:16, “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்."
தீத்து 2:15, “இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக."
தீத்து 3:3-6, “ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.”
சுருக்கமான திரட்டு: தீத்து தனது வழிகாட்டியான அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றபோது அது எவ்வளவு அருமையானதாக இருந்திருக்க வேண்டும். பவுல் மிகவும் மரியாதைக்குரிய ஒரு மனிதராக இருந்தார், கிழக்கத்திய நாடுகள் முழுவதும் பல திருச்சபைகளை நிறுவியதால் பவுல் மிகவும் கனம்பெற்று விளங்கினார். அப்போஸ்தலரிடமிருந்து வந்த இந்த புகழ்பெற்ற அறிமுகம் தீத்துவால் நிச்சயமாக வாசிக்கப்பட்டிருக்கும், "பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக" (தீத்து 1:4).
திருச்சபையை வழிநடத்துவதற்காக தீத்துவை பவுல் விட்டுச்சென்ற கிரேத்தா தீவில், தீவின் பூர்வீகவாசிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய உண்மையை அறியாத யூதர்கள் வசித்து வந்தனர் (தீத்து 1:12-14). கிரேத்தா தீவிலுள்ள திருச்சபையில் தலைவர்களை வளர்த்து அவர்களை ஏற்ப்படுத்துவதில் தீத்துவை அறிவுறுத்துவதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்கும் தீத்துவை பின்தொடர்ந்து அவரை போதனைகளால் அறிவுறுத்துவதை தனது பொறுப்பாக பவுல் உணர்ந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் தலைவர்களைத் கண்டறிவதில் தீத்துவை வழிநடத்தியபோது, கிறிஸ்து மீதான விசுவாசத்தில் வளரும்படி தீத்து தலைவர்களுக்கு எவ்வாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் பவுல் பரிந்துரைக்கிறார். அவருடைய அறிவுறுத்தல்கள் எல்லா வயதினருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் (தீத்து 2:1-8) ஏற்ற வகையில் இருந்தன.
கிறிஸ்துவை விசுவாசிப்பதில் தீத்துக்கு உதவுவதற்காக, தீத்து நிக்கொபோலிக்கு வந்து திருச்சபையிலுள்ள மற்ற இரண்டு உறுப்பினர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வரும்படி பவுல் பரிந்துரைக்கிறார் (தீத்து 3:12-13).
இணைப்புகள்: இரட்சிப்பைத் தரும் ஈவாகிய கிருபையோடு கிரியைகளைச் சேர்க்க முற்படுகிற யூதமதத்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி திருச்சபையின் தலைவர்களுக்கு அறிவுறுத்துவது அவசியம் என்று பவுல் மீண்டும் காண்கிறார். கலகக்கார ஏமாற்றுபவர்களுக்கு எதிராக, குறிப்பாக விருத்தசேதனம் செய்வதாகவும், மோசேயின் நியாயப்பிரமாண சடங்குகள் மற்றும் ஆசரிப்புகளைக் கடைபிடிக்கும் விஷயத்தில் தொடர்ந்து அது தேவையானது என்று வாதிடுபவர்களுக்கு எதிராக அவர் எச்சரிக்கிறார் (தீத்து 1:10-11). பவுலின் நிருபங்கள் முழுவதிலும் இது ஒரு தொடர்ச்சியான கருப்பொருள் மற்றும் தீத்து புத்தகத்தில், அவர்களின் வாயானது அடைக்கப்பட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அவர் எடுத்துரைக்கிறார்.
நடைமுறை பயன்பாடு: நம்முடைய கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த அறிவுறுத்தலுக்காக வேதாகமத்தை நாம் பார்க்கும்போது அப்போஸ்தலனாகிய பவுல் நம் கவனத்திற்கு தகுதியானவராக இருக்கிறார். நாம் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் நாம் பின்பற்ற முயற்சிக்கவேண்டியதையும் கற்றுக்கொள்ளலாம். நம் மனதையும் மனசாட்சியையும் தீட்டுப்படுத்தும் விஷயங்களைத் தவிர்ப்பதால் நாம் பரிசுத்தமாக இருக்க முற்படுகிறோம் என்று பவுல் அறிவுறுத்துகிறார். பின்னர் பவுல் ஒருபோதும் மறக்கக் கூடாத ஒரு அறிக்கையை அளிக்கிறார்: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்” (தீத்து 1:16). கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வாழ்க்கையானது கிறிஸ்துவை விசுவாசிக்கும் அறிக்கையுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் (2 கொரிந்தியர் 13:5).
இந்த எச்சரிக்கையுடன், தேவனை மறுப்பதை / மறுதலிப்பதைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் பவுல் நமக்குச் சொல்லுகிறார்: “மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்” (தீத்து 3:5-6). பரிசுத்த ஆவியினால் நம் மனதை தினசரி புதுப்பிக்க முற்படுவதன் மூலம், நாம் வாழும் வாழ்வின் முறையால் தேவனை மதிக்கும் கிறிஸ்தவர்களாக நாம் வளர முடியும்.
English
தீத்துவின் புத்தகம்