கேள்வி
நான் எப்படி அதிகமாய் கிறிஸ்துவைப் போல் ஆக முடியும்?
பதில்
கிறிஸ்துவைப் போல் ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு விசுவாசியின் விருப்பமாகும், மேலும் தேவன் நம்மீது அதே விருப்பம் கொண்டிருக்கிறார் என்பதை அறிவது நமக்கு இன்னும் உற்சாகத்தை அளிக்கிறது. உண்மையில், தேவன் “[விசுவாசிகளை] தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29) என்று வேதாகமம் கூறுகிறது. நம்மை கிறிஸ்துவைப் போல ஆக்குவது தேவனுடைய கிரியை, அவர் அதை இமுடிவுவரை நடத்திவருவார் (பிலிப்பியர் 1:6).
இருப்பினும், தேவன் நம்மை கிறிஸ்துவைப் போல மாற்றுவார் என்கிற உண்மை, நாம் சும்மா உட்கார்ந்து கொண்டு "சுகமான படுக்கைகளில்" பரலோகத்திற்கு கொண்டு செல்லப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை. இந்த செயல்முறை பரிசுத்த ஆவியானவருடன் நமது விருப்பமான ஒத்துழைப்பைக் கோருகிறது. மேலும் கிறிஸ்துவைப் போல ஆவதற்கு தெய்வீக வல்லமை மற்றும் மனிதப் பொறுப்பை நிறைவேற்றுதல் ஆகிய இரண்டும் தேவை.
நாம் கிறிஸ்துவைப் போல அவருக்கு ஒப்பாக இருப்பதற்கு மூன்று காரியங்கள் உதவுகின்றன: தேவனிடம் நாம் நம்மை ஒப்புக்கொடுத்தல், பாவத்திலிருந்து விடுபடுதல் மற்றும் நமது ஆவிக்குரிய வளர்ச்சி.
1) மேலும் கிறிஸ்துவைப் போல அவருக்கொப்பாக மாறுவது தேவனிடம் ஒப்புக்கொடுப்பதன் விளைவாகும். ரோமர் 12:1-2 ஆராதனை தேவனுக்கு முழுமையான சுய ஒப்புக்கொடுத்தலை உள்ளடக்கியது என்று கூறுகிறது. நாம் நமது உடல்களை "ஜீவபலியாக" நாமாகவே ஒப்புக்கொடுக்கிறோம், மேலும் நம் மனமும் புதுப்பிக்கப்பட்டு மாற்றப்படுகிறது.
"எனக்குப் பின்சென்றுவா" என்று இயேசு சொன்னபோது, லேவி உடனடியாக வரி வசூலித்துக்கொண்டு இருந்த மேசையைவிட்டு அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான் (மாற்கு 2:14); எனவே கர்த்தரைப் பின்பற்றுவதற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் விருப்பத்துடன் மனமுவந்து ஒப்படைப்போம். யோவான்ஸ்நானகன் சொன்னது போல், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30), எனவே நாம் இயேசுவின் மீதும் அவருடைய மகிமையிலும் அதிக கவனம் செலுத்துகிறோம், அவருடைய சித்தத்தில் நம்மையே இழந்துவிடுகிறோம்.
2) மேலும் கிறிஸ்துவைப் போல மாறுவது என்பது பாவத்திலிருந்து பெரும் விடுதலையின் விளைவாகும். இயேசு பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்ததால், நாம் நம்மை "பாவத்திற்கு மரித்தவர்கள்" (ரோமர் 6:11) என்று எண்ணி, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வோம், நாம் இயேசுவைப் போல இருப்போம். நாம் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, பாவம் இனி நமது எஜமானன் அல்ல, மேலும் நாம் கிறிஸ்துவுடன் தெளிவாக அடையாளம் காணப்படுகிறோம் (ரோமர் 6:1-14).
தம்மைப் பின்பற்றும்படி இயேசு நம்மை அழைக்கிறார், கீழ்ப்படிதல் (யோவான் 15:10), தியாகமுள்ள அன்பு (யோவான் 15:12-13), மற்றும் துன்பத்தை சகித்தல் (1 பேதுரு 2:19-23) ஆகியவற்றில் அவருடைய முன்மாதிரி நமக்கு இருக்கிறது. கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்ட அப்போஸ்தலர்களின் உதாரணமும் நம்மிடம் உள்ளது (1 கொரிந்தியர் 11:1).
நம் வாழ்வில் பாவத்தைக் கட்டுப்படுத்தும் போது, நமக்கு தெய்வீக உதவி உள்ளது: தேவனுடைய வார்த்தைக்காக (சங்கீதம் 119:11), கிறிஸ்துவின் பரிந்துபேசுதலுக்காக (ரோமர் 8:34; எபிரேயர் 7:25) மற்றும் நம்மில் வாசம் செய்யும் ஆவியானவரின் வல்லமைக்காக (ரோமர் 8:4; கலாத்தியர் 5:16) நாம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்!
3) மேலும் கிறிஸ்துவைப் போல மாறுவது என்பது கிறிஸ்தவ ஆவிக்குரிய வளர்ச்சியின் விளைவாகும். நாம் முதலில் இரட்சிக்கப்படும்போது, நாம் ஞானத்திலும் அறிவிலும் முதிர்ச்சியற்றவர்களாகவும், கிருபையிலும் அன்பிலும் அனுபவமற்றவர்களாகவும் இருக்கிறோம். ஆனால் பின்னர் நாம் வளர்கிறோம். இந்தக் காரியங்கள் ஒவ்வொன்றிலும், நமது பொறுப்பு வலுவாகவும் இருக்கிறோம் — கிறிஸ்துவைப் போலவும் ஆகிறோம். "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்" (2 பேதுரு 3:18). "நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வார்" (1 தெசலோனிக்கேயர் 3:12).
இப்போது, தேவன் நம்மில் செயல்படுகிறார்: "நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்" (2 கொரிந்தியர் 3:18). இருப்பினும், ஒரு நாள், செயல்முறை முழுமையடையும்: "அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 3:2). எதிர்காலத்தில் முழுமையாக கிறிஸ்துவைப் போல இருப்போம் என்ற வாக்குத்தத்தமே இப்போது கிறிஸ்துவைப் போல ஆவதற்கு நமக்கு உந்துதலாக உள்ளது: "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்" (1 யோவான் 3:3).
English
நான் எப்படி அதிகமாய் கிறிஸ்துவைப் போல் ஆக முடியும்?