கேள்வி
ஒரு கிறிஸ்தவர் சபிக்கப்பட்டிருக்க முடியுமா? ஒரு விசுவாசி மீது தேவன் சாபத்தை அனுமதிப்பாரா?
பதில்
"அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது" (நீதிமொழிகள் 26:2 ) என்று வேதாகமம் சொல்கிறது. முட்டாள்தனமான இடப்பட்ட சாபங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதே இதன் பொருள். தேவன் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் சபிக்க அனுமதிக்கவில்லை. தேவன் இறையாண்மையுள்ளவர். தேவன் ஆசீர்வதிக்க முடிவு செய்த ஒருவரை சபிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. தேவன் மட்டுமே தீர்ப்பை உச்சரிக்க வல்லவர்.
வேதாகமத்தில் உள்ள “மந்திரங்கள்” எப்போதும் எதிர்மறையாகவே விவரிக்கப்படுகின்றன. உபாகமம் 18:10-11ல், தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். இவைகள் யாவும் “கர்த்தருக்கு வெறுக்கத்தக்க” செயல்களாகும். தேவன் சூனிய வித்தைகள் இராதபடிக்கு அகற்றுவார் என்றும் நாள் பார்க்கிறவர்கள் இல்லாமற்போவார்கள் என்றும் மீகா 5:12 கூறுகிறது. எதிர்க்கிறிஸ்து மற்றும் அவனது "பெரிய நகரமான பாபிலோன்" (வச. 21-24) பயன்படுத்தும் ஏமாற்றத்தின் ஒரு பகுதியாக வெளிப்படுத்துதல் 18ஆம் அதிகாரம் விவரிக்கிறது. தேவன் நம்மைப் பாதுகாக்காவிட்டால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கூட ஏமாற்றப்படுவார்கள் என்று கடைசிக் கால மோசடி மிகப் பெரியதாக இருந்தாலும் (மத்தேயு 24:24), தேவன் சாத்தானையும் எதிர்க்கிறிஸ்துவையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் முற்றிலுமாக அழிப்பார் (வெளி. 19-20 அதிகாரங்கள்).
கிறிஸ்தவர் இயேசு கிறிஸ்துவில் ஒரு புதிய நபராக மீண்டும் பிறந்திருக்கிறார் (2 கொரிந்தியர் 5:17), நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியின் நிலையான முன்னிலையில் அவருடைய பாதுகாப்பின் கீழ் நாம் இருக்கிறோம் (ரோமர் 8:11). எவரும் எந்தவிதமான புறமத மந்திரத்தையும் நம்மீது செலுத்துவதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. பில்லி சூனியச் சடங்குகள், மாந்திரீகம், ஹெக்ஸ்கள் மற்றும் சாபங்கள் சாத்தானிடமிருந்து வருவதால் நம்மீது அவைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, மேலும் “உங்களில் இருப்பவர் [கிறிஸ்து] இந்த உலகில் இருக்கும் [சாத்தானை] விட பெரியவர்” (1 யோவான் 4:4). தேவன் அவனை வென்றுவிட்டார், பயமின்றி தேவனை வணங்குவதற்கு நாம் விடுவிக்கப்பட்டோம் (யோவான் 8:36). “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்கீதம் 27:1).
English
ஒரு கிறிஸ்தவர் சபிக்கப்பட்டிருக்க முடியுமா? ஒரு விசுவாசி மீது தேவன் சாபத்தை அனுமதிப்பாரா?