கேள்வி
தேவன் ஏன் ஏனோக்கையும் எலியாவையும் மரிக்காமல் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார்?
பதில்
வேதாகமத்தின்படி, ஏனோக்கு மற்றும் எலியா ஆகிய இருவரை மட்டுமே தேவன் அவர்களை மரிக்காமல் பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். ஆதியாகமம் 5:24 நமக்கு சொல்கிறது, "ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." 2 ராஜாக்கள் 2:11 நமக்குச் சொல்கிறது, "...திடீரென்று இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்." ஏனோக் "தேவனோடு 300 வருடங்கள் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்" (ஆதியாகமம் 5:23) என்று விவரிக்கப்படுகிறார். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய தீர்க்கதரிசிகளில் எலியா மிகவும் சக்திவாய்ந்தவராக இருக்கலாம். எலியாவின் வருகை பற்றிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன (மல்கியா 4:5-6).
ஏனோக்கையும் எலியாவையும் தேவன் ஏன் எடுத்துக் கொண்டார்? வேதாகமம் குறிப்பாக நமக்கு பதில் தரவில்லை. வெளிப்படுத்துதல் அதிகாரம் 11:3-12 இல் உள்ள இரண்டு சாட்சிகளாக, கடைசி காலத்தில் மீண்டும் வருகிற ஒரு பாத்திரத்திற்காக அவர்கள் எடுக்கப்பட்டதாக சிலர் ஊகிக்கிறார்கள். இது சாத்தியம், ஆனால் அது வேதாகமத்தில் வெளிப்படையாகக் கற்பிக்கப்படவில்லை. ஏனோக்கும் எலியாவும் அவருக்குச் சேவை செய்வதிலும் கீழ்ப்படிதலிலும் மிகுந்த உண்மையுள்ளவர்களாக இருந்ததால், மரணத்தை அனுபவிப்பதிலிருந்து அவர்களை எடுத்துக்கொள்ள தேவன் விரும்பியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தேவனுக்கு அவருடைய நோக்கம் உள்ளது, மேலும் தேவனுடைய திட்டங்களையும் நோக்கங்களையும் நாம் எப்போதும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், "அவருடைய வழி உத்தமமானது" (சங்கீதம் 18:30) என்பதை நாம் அறிவோம்.
English
தேவன் ஏன் ஏனோக்கையும் எலியாவையும் மரிக்காமல் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டார்?