கேள்வி
தேவனுக்கு எதிராக சாத்தான் – தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்றால், அவர் ஏன் சாத்தானை கொன்றுபோடவில்லை?
பதில்
கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள மர்மங்களில் ஒன்று, சாத்தான் பாவம் செய்த பிறகு தேவன் ஏன் சாத்தானை உடனடியாக அழிக்கவில்லை. தேவன் ஒரு நாள் சாத்தானை அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினிக் கடலிலே போடுவார் என்றும் அவன் அதிலே இரவும் பகலும் என்றென்றும் வேதனையை அடைவான் என்றும் நமக்குத் தெரியும் (வெளிப்படுத்துதல் 20:10), ஆனால் தேவன் ஏன் சாத்தானை ஏற்கனவே அழிக்கவில்லை என்று சில சமயங்களில் நாம் ஆச்சரியப்படுகிறோம். தேவனுடைய சரியான காரணத்தை நாம் ஒருபோதும் அறியமாட்டோம், ஆனால் அவருடைய சுபாவத்தைப் பற்றி சில விஷயங்கள் நமக்குத் தெரியும்.
முதலாவதாக, தேவன் அனைத்து சிருஷ்டிப்புகளிலும் முற்றிலும் இறையாண்மை கொண்டவர் என்பதை நாம் அறிவோம், இதில் சாத்தானும் அடங்குவான். நிச்சயமாக, சாத்தானும் அவனது பிசாசுகளும் உலகில் பேரழிவை ஏற்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் மட்டுமே தேவனால் அனுமதிக்கப்படுகிறது. காலத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்தையும் தேவன் திட்டமிட்டுள்ளார் என்பதையும் நாம் அறிவோம். அவருடைய திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது, மற்றும் திட்டமிடப்பட்ட விஷயங்கள் சரியாக நடக்கின்றன. "நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்” (ஏசாயா 14:24).
இரண்டாவதாக, "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28). சாத்தானுக்கு தேவன் என்ன திட்டமிட்டிருந்தாலும், அந்த திட்டம் தான் சிறந்ததாக இருக்கும். தேவனுடைய பரிபூரண கோபமும் நீதியும் திருப்தி அடையும், அவருடைய பரிபூரண நீதி மகிமைப்படும். அவரை நேசிப்பவர்கள் மற்றும் அவருடைய திட்டம் நிறைவேறும் வரை காத்திருப்பவர்கள் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மெய்சிலிர்ப்பார்கள், மேலும் அது வெளிவருவதைப் பார்த்து அவரை மகிமைப்படுத்துவார்கள்.
மூன்றாவதாக, தேவனுடைய திட்டத்தையும் அதன் நேரத்தையும் கேள்விக்குட்படுத்துவது தேவனையும், அவரின் நியாயத்தீர்ப்பையும், அவரது தன்மையையும் மற்றும் அவரது சுபாவத்தையும் கேள்விக்குட்படுத்துவதாகும். அவர் விரும்பியபடி செய்வதற்கான அவரது உரிமையை கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் அல்ல. சங்கீதக்காரன் நமக்குச் சொல்கிறார், "தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்" (சங்கீதம் 18:30). எல்லாம் வல்லவரின் மனதில் இருந்து எந்த திட்டம் வந்தாலும் அது சிறந்த திட்டமாகும். அவர் நமக்கு நினைவூட்டுகிறபடி, அந்த மனதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான், "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:8-9). ஆகவே, நாம் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் சரி தேவனுக்கு முன்பதாக நம்முடைய பொறுப்பு அவருக்குக் கீழ்ப்படிவதும், அவரை நம்புவதும், அவருடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படிவதுமே ஆகும். சாத்தானின் மறைவுக்கான அவரது நேரத்தின் விஷயத்தில், இது தேவனுடைய திட்டம் என்பதால் அது சிறந்த திட்டமாக இருக்க வேண்டும்.
English
தேவனுக்கு எதிராக சாத்தான் – தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்றால், அவர் ஏன் சாத்தானை கொன்றுபோடவில்லை?