settings icon
share icon
கேள்வி

பொன் விதி என்றால் என்ன?

பதில்


“பொன் விதி” என்பது இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் கற்பித்த ஒரு கொள்கைக்கு கொடுக்கப்பட்ட பெயர். "பொன் விதி" என்ற உண்மையான வார்த்தைகள் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை, அதே போல் "மலை பிரசங்கம்" என்ற வார்த்தைகளும் காணப்படவில்லை. வேதாகமப் படிப்பை கொஞ்சம் எளிதாக்குவதற்காக இந்த தலைப்புகள் பின்னர் வேதாகம மொழிபெயர்ப்பு குழுக்களால் சேர்க்கப்பட்டன. 16-17 ஆம் நூற்றாண்டுகளில் இந்த இயேசுவின் போதனைக்கு "பொன் விதி" என்ற சொற்றொடர் கூறப்பட்டது.

பொன் விதி என்று நாம் அழைப்பது மத்தேயு 7:12ஐக் குறிக்கிறது: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” மனித இருதயத்தையும் அதன் சுயநலத்தையும் இயேசு அறிந்திருந்தார். உண்மையில், முந்தைய வசனத்தில், அவர் மனிதர்களை உள்ளார்ந்த நிலையில் "பொல்லாதவர்கள்" என்று விவரிக்கிறார் (வசனம் 11). இயற்கையாகவே சுயநலவாதிகள் தங்கள் செயல்களை அளவிடக்கூடிய ஒரு தரத்தை இயேசுவின் பொன் விதி நமக்குத் தருகிறது: மற்றவர்களைத் தாங்கள் நடத்த விரும்புகிற விதத்தில் சுறுசுறுப்பாக நடத்துங்கள்.

ESV என்னும் ஆங்கில பதிப்பு பொன் விதியை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: "மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் அவர்களுக்கும் செய்யுங்கள், ஏனென்றால் இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாய் இருக்கிறது." லேவியராகமம் 19:18 இலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒற்றைக் கொள்கையில் முழு பழைய ஏற்பாட்டையும் இயேசு அற்புதமாகச் சுருக்கி கூறுகிறார்: “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்." மீண்டும், மக்கள் இயற்கையாகவே சுயத்தை விரும்புபவர்கள் என்பதற்கான உட்குறிப்பைக் காண்கிறோம், மேலும் அந்த மனிதக் குறைபாட்டை மற்றவர்களை எவ்வாறு நடத்துவது என்பதைத் தொடங்குவதற்கான இடமாக கட்டளை பயன்படுத்துகிறது.

தகுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் உலகளாவிய மரியாதை, அன்பு மற்றும் பாராட்டு ஆகியவற்றைக் கோருகிறார்கள். இயேசு இந்த ஆசையைப் புரிந்துகொண்டு, தெய்வீக நடத்தையை மேம்படுத்த அதைப் பயன்படுத்தினார். உங்களுக்கு மரியாதை காட்டப்பட வேண்டுமா? பிறகு மற்றவர்களை மதிக்கவும். நீங்கள் ஒரு அன்பான வார்த்தைக்கு ஆசைப்படுகிறீர்களா? பிறகு மற்றவர்களிடம் அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள். "வாங்குவதைவிட கொடுப்பதே பாக்கியம்" (அப்போஸ்தலர் 20:35). பொன் விதி இரண்டாவது பிரதான கற்பனையின் ஒரு பகுதியாகும், தேவனையே நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு முந்தியது (மத்தேயு 22:37-39).

பொன் விதியைப் பற்றி கவனிக்க வேண்டியது என்னவென்றால், வேறு எந்த மதம் அல்லது தத்துவ அமைப்பும் அதற்கு இணையானவை அல்ல. இயேசுவின் பொன் விதி என்பது கிறிஸ்தவர் அல்லாத ஒழுக்கவாதிகளால் பொதுவாகக் கூறப்படும் "பகிர்வு நெறிமுறை" அல்ல. அடிக்கடி, தாராளவாத விமர்சகர்கள் மற்றும் மதச்சார்பற்ற மனிதநேயவாதிகள் பொன் விதியின் தனித்துவத்தை விளக்க முயற்சிக்கின்றனர், இது அனைத்து மதங்களாலும் பகிரப்படும் பொதுவான நெறிமுறை என்று கூறினர். இது அப்படியல்ல. இயேசுவின் கட்டளைக்கு நுட்பமான, ஆனால் மிக முக்கியமான வேறுபாடு உள்ளது. கிழக்கத்திய மதங்களின் கூற்றுகளின் விரைவான ஆய்வு இதை தெளிவுபடுத்தும்:

• கன்பூசியனிசம்: "மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய விரும்பாததை நீங்கள் அவர்களுக்குச் செய்யாதீர்கள்" (அனலெக்ட்ஸ் 15:23)

• இந்துமதம்: "கடமையின் கூட்டுத்தொகை இதுவே: உங்களுக்குச் செய்தால் வலியை உண்டாக்கும் காரியங்களை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்" (மகாபாரதம் 5:1517)

• புத்தமதம்: "நீங்கள் உங்களையே புண்படுத்தும் விதத்தில் காணும் காரியங்களால் மற்றவர்களைப் புண்படுத்தாதீர்கள்" (உதானவர்கா 5:18)

இந்த வார்த்தைகள் பொன் விதியைப் போலவே இருக்கின்றன, ஆனால் அவை எதிர்மறையாகக் கூறப்படுகின்றன மற்றும் செயலற்ற தன்மையை நம்பியுள்ளன. இயேசுவின் பொன் விதி, அன்பை முன்கூட்டியே காட்டுவதற்கான நேர்மறையான கட்டளை. கிழக்கத்திய மதங்கள், "செய்யாமல் இரு" என்று கூறுகின்றன; “செய்!” என்று இயேசு கூறுகிறார். உங்கள் எதிர்மறையான நடத்தையை கட்டுக்குள் வைத்தாலே போதும் என்று கிழக்கத்திய மதங்கள் கூறுகின்றன; நேர்மறையாகச் செயல்படுவதற்கான வழிகளைத் தேடுங்கள் என்று இயேசு கூறுகிறார். கிறிஸ்தவரல்லாதவர்களின் வார்த்தைகளின் "தலைகீழ்" தன்மையின் காரணமாக, அவை "வெள்ளி விதி" என்று விவரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கத்திய மதங்களிலிருந்து பொன் விதியின் கருத்தை இயேசு "கடன் வாங்கினார்" என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட கன்பூசியனிசம், இந்து மதம் மற்றும் புத்தமதத்திற்கான நூல்கள் அனைத்தும் முற்காலத்தில் 500 மற்றும் கி.மு. 400 க்கு இடையில் எழுதப்பட்டன. கி.மு. 1450 இல் எழுதப்பட்ட லேவியராகமம் புத்தகத்திலிருந்து இயேசு பொன் விதியை எடுத்தார். எனவே, பொன் விதிக்கான இயேசுவின் ஆதாரம் “வெள்ளி விதிக்கு” சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தையது. யார் யாரிடம் "கடன் வாங்கினார்கள்"?

அன்புக்கான கட்டளையே கிறிஸ்தவ நெறிமுறைகளை மற்ற எல்லா மதத்தின் நெறிமுறைகளிலிருந்தும் பிரிக்கிறது. உண்மையில், வேதாகமத்தின் அன்பை ஊக்குவிப்பது ஒருவரின் எதிரிகளையும் நேசிக்க வேண்டும் என்ற தீவிர கட்டளையை உள்ளடக்கியது (மத்தேயு 5:43-44ஐ யாத்திராகமம் 23:4-5 உடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்). இது மற்ற மதங்களில் கிடையாது.

மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்ற கிறிஸ்தவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஒரு உண்மையான கிறிஸ்தவரின் அடையாளமாகும் (யோவான் 13:35). உண்மையில், கிறிஸ்தவர்கள் மற்றவர்களையும் தீவிரமாக நேசிக்காவிட்டால், தேவனை நேசிப்பதாகக் கூற முடியாது. “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:20). பொன் விதி இந்த யோசனையை உள்ளடக்கியது மற்றும் யூத-கிறிஸ்தவ வேதாகமத்திற்கு தனித்துவமானது.

English



முகப்பு பக்கம்

பொன் விதி என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries