settings icon
share icon
கேள்வி

நான் ஒரு இந்து, நான் எதற்காக கிறிஸ்தவனாகவேண்டும்?

பதில்


இந்துமதத்தையும் கிறிஸ்தவத்தையும் ஒப்பிடுவது சற்று சிரமமானது, அதிலும் குறிப்பாய் மேற்கத்தியர்களுக்கு இந்துமதம் அவர்களுடைய புரிதலுக்கு மிகவும் அப்பாற்பட்டதும் அளந்திடமுடியா ஆழமும், தொன்மையும், விரிவான இறையியல் கோட்பாடுகளை உடைய ஒன்று. உலகத்திலே இதைப் போன்ற பன்முக பரிமாணமும் நுண்ணிய பாரம்பரியமும் கொண்ட வேறொரு மதம் இருக்க வாய்ப்பில்லை. மதங்களின் ஒப்பிலக்கணத்தை படிக்க விரும்பும் கத்துக்குட்டி ஒருவன் இந்து-கிறிஸ்தவ மதங்களின் ஒப்பியலில் இறங்கினால் அது அவனை எளிதில் மூழ்கடித்துவிடும். ஆகையால், கேட்கப்படும் கேள்வியை நாம் மிகுந்த தாழ்மையுடனும், கவனத்துடனும் கையாளவேண்டும். மேலும் கொடுக்கப்பட்ட பதிலும் இந்துமதத்தின் ஆழத்தை நன்றாகவோ அல்லது ஓரளவுக்காவவது புரிந்துகொண்டோம் என்கின்ற மிதப்பிலும் வழங்கப்படவில்லை. கிறிஸ்தவம் ஏன் மேன்மையானது என்பதனை விளக்கி காட்ட இவ்விரு மதங்களுக்கு இடையே உள்ள ஒரு சில முக்கியமான குறிப்புகளை மட்டும் ஒப்பிடப்போகிறோம்.

முதலாவது, கிறிஸ்தவத்தை அதனுடைய வரலாற்றுப் பின்னணியை கருத்தில்கொண்டு அணுகவேண்டும். தடையயியல், தொல்பொருள் ஆராய்ச்சி, உரை ஒப்பீடு போன்றவைகளை கொண்டு நிரூபிக்கப்பட்ட வரலாற்று கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் கொண்டதுவே கிறிஸ்தவம். இந்துமதத்திலும் வரலாற்று குறிப்புகள் உண்டு. ஆனால், அதனுடைய இறையியல், புராணம் மற்றும் வரலாறு ஒன்றோடு ஒன்று பின்னி பிசைந்திருப்பதினால் கதை எங்கே முடிகிறது, எங்கே ஆரம்பிக்கிறது என்பதை வகையறுப்பது மிகவும் கடினம். தெய்வங்கள் மற்றும் அவர்களுடைய ஆளுமையை விளக்கக்கூடிய நெடிய கட்டுக்கதைகள் கொண்ட புராணங்கள் இந்துமதத்தில் உண்டு என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். மேலும் வரலாற்றுத் தொடர்பான தெளிவின்மையின் காரணமாக இந்துமதம் நெகிழ்வுத்தன்மை கொண்டதும் எளிதில் மற்றவைகளோடு சமரசமாககூடியதாயும் உள்ளது. ஆகவே, சரியான வரலாற்று பின்னணி இல்லாத ஒரு மதத்தை நாம் சோதித்து பார்க்க இயலாது. அதனால் அதை நாம் பொய்யென்று தீர்க்காவிட்டாலும் அதனை சரிப்பார்க்கவும் இயலாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மாறாக, கிறிஸ்தவத்தின் இறையியலை யூதர்களின் எழுத்தப்பட்ட வரலாறும், கிறிஸ்தவ பாரம்பரிய பதிவுகளும் உறுதிசெய்கின்றது. ஆதாம் மற்றும் ஏவாள் இல்லாமல் இருந்திருப்பார்களானால், எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் வெளியேறாமல் போயிருந்தால், யோனா ஒரு புனைக்கப்பட்ட கதாபாத்திரமாய் இருந்திருந்தால் அல்லது இயேசு பூமியில் நடக்காமல் போயிருந்தால் ஒட்டுமொத்த கிறிஸ்தவமதத்தின் நம்பிக்கையும் இந்த குறிப்புகளின் அடிப்படையில் தவிடுபொடியாயிருக்கும். கிறிஸ்தவத்தை பொறுத்தவரையில் தவறான வரலாறு ஓட்டையான இறையியலுக்கு சமம். வரலாற்றுடன் வேரூன்றியது கிறிஸ்தவத்திற்கு பெலவீனமாய் தோன்றினாலும், கிறிஸ்தவ பாரம்பரியம் வரலாற்றினால் சோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும் போது அப்பெலவீனமே பெலமாய் மாறுகிறது.

இரண்டாவது, கிறிஸ்தவம் மற்றும் இந்துமதம் இரண்டிலும் முக்கியமான வரலாற்று புருஷர்கள் இடம்பெற்றிருந்தாலும், இயேசு ஒருவரே மரித்தோரிலிருந்து சரீரப்பிரகாரமாய் உயிர்த்தெழுந்தார் என்று குறிப்பிடப்படுகிறார். வரலாற்றில் அநேகர் ஞானபோதகர்களாய் இருந்துள்ளனர் அல்லது மத இயக்கங்களை நிறுவியுள்ளனர். இந்துமதத்திலேயும் இப்படிப்பட்ட ஞானபோதகர்களும் உலகத்தலைவர்களும் உண்டு. ஆனாலும் இயேசு அவர்களுக்கு அப்பாற்ப்பட்டவர். ஒரு தெய்வீக வல்லமையின் உதவியன்றி அவருடைய ஆவிக்குரிய போதனைகளை நம்மால் பரிசோதிக்க இயலாது: தன்னைப் பற்றிய திர்க்கத்தரிசனத்தை உரைத்து அதனை தன்னிலே நிறைவேற்றினார் (மத்தேயு 16:21, 20:18-19, மாற்கு 8:31, லூக்கா 9:22, யோவான் 20:21, 1 கொரிந்தியர் 15)

அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுதலைப் பற்றிய கிறிஸ்தவ உபதேசம் இந்துமதத்தின் மறுஜென்ம நம்பிக்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இரண்டு கருத்துகளும் ஒன்றன்று. வரலாறு மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் ‘உயிர்த்தெழுதலை’ மட்டுமே நாம் திட்டமாய் உறுதிசெய்யமுடியும். குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மட்டுமே சமுதாய அறிஞர்கள் மற்றும் நன்னெறி போதகர்கள் என்ற இரு சாராரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாய் உள்ளது. அதன் சரிபார்ப்பு இந்து மறுஜென்ம கொள்கைக்கு எவ்விதத்திலும் ஒத்ததாயில்லை. கீழ்காணும் வேறுபாடுகளை கவனியுங்கள்:

உயிர்த்தெழுதலில் ஒரு மரணம், ஒரு வாழ்க்கை, ஒரு சாவுக்கேதுவான சரீரம் மற்றும் ஒரு புதிய சாவுக்கேதுவல்லாத மகிமையின் சரீரம். உயிர்த்தெழுதல் தெய்வீக செயல்பாட்டினால் நடக்கிறதும், ஒரே தேவனை சார்ந்ததும், பாவத்திலிருந்து விடுவிக்கக்கூடியதும் மற்றும் கடைசி காலத்தில் மட்டுமே நடக்கக்கூடியதாயும் உள்ளது. மாறாக மறுஜென்மம் அல்லது மறுபிறவி கொள்கை என்பது பலமுறை மரிப்பதும், பலமுறை பிறப்பதும், பற்பலமுறை சாவுக்கேதுவான சரீரத்தை பெற்றுக்கொள்வதும், சாவுக்கேதுவல்லாத சரீரம் என்பதின் இல்லாமையையும் காண்பிக்கிறது. அதோடுகூட, மறுஜென்மம் இயற்கை விதியினாலும், அனைத்து இறைக்கொள்கையின் (எல்லாம் தெய்வம்) அடிப்படையிலும், கர்ம வினையை சார்ந்ததும், நித்தமும் இயங்கிக்கொண்டே இருக்கின்ற ஒன்றாகவும் உள்ளது. ஆனாலும், வேறுபாடுகளை மட்டும் பட்டியலிட்டு இவ்விரண்டு கொள்கைகளின் உண்மையை நாம் நிருபிக்கமுடியாது. ஆகவே, வரலாற்று பிரகாரமாக உயிர்த்தெழுதலை நிரூபிக்கக்கூடுமானால், மரணத்திற்கு அப்பால் சம்பவிக்கும் இவ்விரண்டு தெரிந்தெடுத்தல்களையும் நாம் வேறுபடுத்தும்போது உறுதிசெய்யப்பட்டது உறுதிசெய்யமுடியாததிலிருந்து ஒரு படி உயர்ந்து நிற்கிறது. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும், உயிர்த்தெழுதலைப் பற்றிய விளக்கமான கிறிஸ்தவ உபதேசமும் நாம் கருத்தாய் கவனிக்கவேண்டியவைகள்.

மூன்றாவது, கிறிஸ்தவ மறைநூல்கள் வரலாற்றுப்பிரகாரமாய் தலைசிறந்ததும், கவனிக்கூடியவைகளாயும் உள்ளன. பற்பல பரிசோதனைகளில் கிறிஸ்தவ வேதாகமம் இந்து வேதங்கள் மற்றும் அனைந்து பண்டைய மதஇலக்கியங்களை காட்டிலும் மேலோங்கி நிற்கிறது. எல்லா பண்டைய மத இலக்கியங்களிலும் கிறிஸ்தவ வேதாகமம் மட்டுமே வரலாற்றுப் பிரகாரமாய் மிக அதிக அளவில் நிருபிக்ககூடிய ஒன்றாய் இருப்பதால், வேதாகமத்தை சந்தேகிப்பது வரலற்றை சந்தேகிப்பதாகிவிடும். எபிரேய வேதாகமமான பழைய ஏற்பாட்டை விட கூடுதலாய் நிருபணம் பண்ணக்கூடிய புத்தகம் ஒன்று இருக்குமானல் அது புதிய ஏற்பாடு மட்டுமே. கீழே குறிப்பிட்டுள்ளவைகளை கவனியுங்கள்:

1)மற்றெந்த பண்டைய மதநூல்களைவிட புதிய ஏற்பாட்டுக்கு கூடுதலான எழுத்துபிரதிகள் காணப்படுகின்றன – 5000 பண்டைய கிரேக்க எழுத்துப்பிரதிகள், மொத்தமாக எல்லா மொழிகளிலும் 24,000 எழுத்துப்பிரதிகள். ஏராளமான கைப்பிரதிகள் நம்மிடம் காணப்படுவது ஆராய்ச்சி செய்வதற்கான நல்லதொரு அடித்தளத்தை அமைத்து தருகின்றது. அதனால் இதிலே உள்ள வேதபகுதிகளை ஒன்றோடொன்று பரிசோதித்து மூலமொழியில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதனை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

2) எந்தவொரு பண்டைய மதம்சார்ந்த ஆவணத்தை விட புதிய ஏற்பாட்டு எழுத்துப்பிரதிகள் அவைகள் படைக்கப்பட்ட காலத்திற்கு மிக சமீபத்தில் எழுதப்பட்டவைகளாய் உள்ளன. எல்லா மூலப்படைப்புகளும் சமகாலத்தில் வாழ்ந்தவர்களுடைய (கண்களால் கண்ட சாட்சிகள்) காலத்தில், கி.பி. 1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை .மற்றும் நம்மிடம் கி.பி.125-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கையெழுத்துப் பிரதியும் உள்ளது. கி.பி. 200-ஆம் ஆண்டில் முழுபிரதிகளும், கி.பி.250-ஆவது ஆண்டில் முழுமையான புதிய ஏற்பாட்டும் எழுத்தப்பட்டிருக்கிறது. சம்பவங்களை கண்களால் கண்ட மக்களின் காலத்திலேயே புதிய ஏற்பாட்டின் எல்லா புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளதால், கட்டுகதைகள், புராணங்கள் போன்றவைகளுக்குள் போக அவரகளுக்கு நேரம் இல்லாதிருந்திருக்கும். அதுமட்டுமன்றி, அப்போதிருந்த சபை மக்கள் சம்பவங்களை நேரடியாக கண்டவர்களாகையால் , உண்மையோடு இதை எளிதில் ஒப்பிட்டு பார்க்கக்கூடியவர்களாயும் இருந்தார்கள்.

3) வேறெந்த பண்டைய ஆவணங்களைக் காட்டிலும் புதிய ஏற்பாடு ஆவணங்கள் மிகவும் துல்லியமானவைகள். “ஹானஸ்ட் டு காட்” (தேவனுக்கு உண்மை) எனும் நூலில் ஜான்.R.ராபின்சன் என்பவர் புதிய ஏற்பாடு ஆவணங்கள் அனைத்தும் 99.9% துல்லியமானவை என்று குறிப்பிடுகின்றார். கிரேக்க புதிய ஏற்பாட்டின் வல்லுனராய் திகழ்ந்த ப்ரூஸ் மெட்ஸ்கெர் சற்றே கண்ணியமாய் 99.5% என்று குறிப்பிடுகின்றார்.

4) எல்லாம் தெய்வக்கொள்கை மற்றும் பலதெய்வக்கொள்கை போன்றவைகளை விட கிறிஸ்தவத்தின் ஒருதெய்வ கொள்கையில் மட்டுமே சாதகமான பல்வேறு அமசங்கள் காணப்படுகிறது. இந்துமதத்தை வெறுமனே எல்லாம் தெய்வக்கொள்கை (“எல்லாம் தெய்வம்”} அல்லது பலதெய்வக்கொள்கை (“பல தெய்வங்கள்”) உடையவர்கள் என்று வகையறுக்கமுடியாது.. இந்துமதத்தில் எந்த பிரிவுடன் ஒருவர் தன்னை அடையாளம் காட்டுகிறாரோ அதன் அடிப்படையில் ஒருவர் எல்லாம் தெய்வக்கொள்கை உடையவராகவோ, பலதெய்வக்கொள்கை கொண்டவராகவோ, எல்லாம் ஒன்று (“எல்லாமே ஒன்று”) அல்லது ஒரே தெய்வம் போன்ற பல்வேறு தெரிந்தெடுத்தல்களை பின்பற்றுபவராய் இருப்பார். ஆனாலும் இந்துமதத்தின் இரண்டு வலுவான நீரோடைகள் என்று நாம் பிரித்தால், பலதெய்வக்கொள்கை மற்றும் எல்லாம் தெயவக்கொள்கை என்று அதனை இரண்டாக பிரிக்கலாம். கிறிஸ்தவத்தின் ஒருதெய்வகொள்கையை பொறுத்தவரையில் இந்த இரண்டைக் காட்டிலும் தெளிவான சாதக அம்சங்கள் காணப்படுகின்றது. இடநெருக்கடியை கருத்தில்கொண்டு இந்த மூன்று உலகப்பார்வைகளும் ‘வாழ்வியல் நீதிநெறிகள்” என்பதன் அடிப்படையிலே ஒப்பிடப்படுகிறது.

பலதெய்வக் கோட்பாடு மற்றும் எல்லாம்தெய்வக் கோட்பாடு, இவ்விரண்டின் நீதிநெறி அடிப்படையும் கேள்விக்குறியவைகள். பலதெய்வக்கோட்பாட்டின்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் உண்டெனில் நாம் பின்பற்றக்கூடிய உயரிய நெறிமுறைகளை கொண்ட தெய்வம் எது? பற்பல தெய்வங்கள் உண்டெனில், நீதிநெறிகளின் காரியத்தில் ஒன்று அவர்களுக்கும் வேறுபாடில்லாமல் இருக்கவேண்டும், அல்லது வேறுபாடு காணப்படவேண்டும். ஒருவேளை அப்படிப்பட்ட ஓப்பீடே இல்லை என்றால் இவர்கள் கூறும் நீதிநெறிகள் ஆதாரமற்றதாகிவிடும். இந்த நிலைபாட்டின் பெலவீனம் தானாகவே வெளியாகிறது. நீதிநெறிகளில் வித்தியாசங்கள், வேறுபாடுகள் இல்லையென்றால், எந்த கோட்பாட்டில் அவர்கள் ஒத்துப்போகிறார்கள். அப்படி அவர்களை வரிசைப்படுத்தும் தார்ப்பரியம் தெய்வங்களை காட்டிலும் பெரியவைகளாய் மாறிவிடும். இந்த தெய்வங்களும் வேறொரு அதிகாரத்தின்கீழ் இருந்து அதற்கு பதில்சொல்லவேண்டியவைகளாய் இருப்பதால், இவைகள் எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் என்றும் நாம் எடுக்கமுடியாது. அப்படியானால், நாம் பின்பற்றுவுதற்கு இதைவிட மேன்மையான வழி ஒன்றுண்டு என்பது தெளிவாகிறது. இந்த ஒரு உண்மையினால் பலதெய்வக் கோட்பாட்டை வெறுமையானது என்று நாம் சொல்லாவிடினும் அது ஆழமற்றது என்பதை மறுக்கமுடியாது, தெய்வங்களுக்கு இடையே சரி தவறு என்பவைகளைக் குறித்த மதிப்பீடுகளில் வேறுபாடு காணப்படுமானால், ஒரு தெய்வத்திற்கு கீழ்ப்படிவது இன்னொரு தெய்வத்திற்கு கீழ்ப்படியாதது போல் ஆகிவிடும், அதற்கான தண்டனையையும் ஏறகவேண்டிவரும். நீதிநெறிகள் அந்தந்த தெய்வங்கள் சம்பந்தபட்ட ஒன்று. ஒருவருக்கு ‘நன்மையாய்’ படுவது எல்லோருக்கும் எல்லாவிதத்திலும் நன்மை என்றே பொருள்படாது, உதாரணத்திற்கு, காளி என்கின்ற தெய்வத்திற்கு தங்களுடைய குழந்தையை பலியாக கொடுப்பது இந்துமதத்தின் ஒரு பிரிவினரால் பாரட்டக்கூடியதாய் இருக்கும், ஆனால் அதுவே மற்ற பிரிவனருக்கு கண்டிக்கத்தக்கதாகவும் அமையும். ஆனால், நிச்சயமாகவே, குழந்தைகளை பலி கொடுப்பது, எவ்வித்தத்திலும் ஏற்கமுடியாத ஒன்று என்பதில் ஐயமில்லை. ஒரு சில காரியங்கள், பின்னணி, பாராம்பரியம் என்று எதுவாக இருந்தாலும், காரணரீதியிலும் தோற்றத்தின் படியேயும் ஒன்று சரி அல்லது தவறு என்று இருக்கவேண்டும்.

பல்தெய்வக்கொள்கையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எல்லாம் தெய்வக்கொள்கை எவ்விதத்திலும் கூடுதல் சிறப்புமிக்கதன்று. ஏனெனில்,, நன்மை அல்லது தீமை என்று வகையறுக்கமுடியாத ஒரே பொருள் – ஒரே தெய்வீக யதார்த்தம் - உள்ளது என்பதே இதன் வாதம். ‘நன்மை’ மற்றும் ‘தீமை’ எனும் இரண்டு பிரிவுகள் ஒன்று மற்றதுடன் வேறுபட்டிருக்கையில், வகைபிரிக்கமுடியாத ஒரே நம்பிக்கை என்று அதை நாம் எடுக்கமுடியாது. சொல்லப்போனால், பல்தெய்வக்கொளைகையில் “நன்மை” “தீமை”என்கின்ற நீதிநெறி சார்ந்த வேறுபாடுகள் . நன்மையும் தீமையும் பிரிக்கமுடியாத ஓரே யதார்த்தத்தில் கலந்துவிடுகிறது. அப்படியே, “நன்மை”, “தீமை” எனும் பிரிவினைகளை நாம் உண்டாக்கினாலும், ‘கர்மா’ என்று அறியப்படும் முன்வினைப் பயன் அந்த நிதிநெறி பிரிவினைகளை வெறுமையாக்கிவிடும். இயற்கையில் உள்ள பூவிஈர்ப்பு அல்லது அசைவற்றத் தன்மை போன்றே ‘கர்மா’ என்பதும் ‘ஆட்சார்பற்ற’ தத்துவமாய் உள்ளது. பாவியான ஒரு ஆத்துமாவின் மேல் கரம்வினையின் பலன் வரும்போது, தெய்வீக கண்காணிப்பு நியாயத்தீர்ப்பை கொண்டுவருவதில்லை, மாறாக, அது இயற்க்கையின் ‘ஆட்சார்பற்ற’ எதிர்விளைவாய் அமைகிறது. ஆனால் நீதிநெறி ஒழுக்கம் ஒரு தனிநபரைச் சார்ந்தது, கர்மவினையோ தனிநபர் சாராதது. உதாரணமாக, ஒருவரை அடிக்க பயன்படுத்தப்படும் பிரம்பை நாம் குற்றஞ்சாட்டுவதில்லை . தனிப்பட்டவகையில் அந்த பிரம்பு நீதிநெறிகளையோ கடமையுணர்வையோ அறியாத ஒரு பொருள். மாறாக, அந்தப் பிரம்பை தவறாக கையாண்ட நபரைத் தான் நாம் குற்றஞ்சாட்டுகிறோம். அந்த மனிதருக்கு ‘நீதிநெறிகளும், கடமையுணர்வும்’ உண்டு. அப்படியே கர்மவினை வெறுமனே ‘ஆட்சார்பற்ற’ தன்மை கொண்டதானால் அது ‘நீதிநெறிகளின்’ அடிப்படையில் ஒழுக்கமில்லாதது. ஆகவே, நெறிமுறைகளை ஓப்பிடுவதற்கு போதுமான அடிப்படை காணப்படவில்லை.

ஆனாலும், கிறிஸ்தவத்தின் ஒரேதெய்வக்கொள்கையானது தேவனுடைய தன்மை மற்றும் குணாதிசயத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. தேவனுடைய குணாதிசயம் நல்லதாகவே இருப்பதால் அவரை சார்ந்த காரியங்களும், அவருடைய சித்தமும் ‘நல்லதாகவே’ இருக்கும். தேவனை விட்டு விலகியிருப்பது அல்லது தேவனுடைய சித்தத்தை சாராமல் இருப்பது ‘தீமையாகவே’ இருக்கும். ஆகையால், இந்த ஒரே தேவன் நீதிநெறிகளுக்கெல்லாம் அடிப்படையாய் இருப்பதால், இவர் தனிநபர் ஒழுக்கத்தின் காரணகர்த்தாவும் நன்மை தீமை பற்றிய அறிவாற்றலின் ஆதாரமாகவும் விளங்குகிறார்.

ஐந்தாவது, “உன்னுடைய பாவத்தை குறித்து என்ன செய்யப் போகிறாய்?” என்ற கேள்விக்கான விடையையும் நாம் கண்டுபிடிக்கவேண்டும். இந்தப் பிரச்சனைக்கு கிறிஸ்தவத்திலேதான் வலுவான பதில் காணப்படுகிறது. புத்தமதத்தை போன்றே, இந்துமதத்திலும் பாவத்தைக் குறித்து இரண்டுவிதமான எண்ணங்கள் உண்டு. சிலசமயங்களில் பாவம் அறியாமை என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்துமத விளக்கத்தின்படி ஒருவர் உண்மை நிலையை பார்க்காமலோ ,புரிந்துகொள்ளாமலோ இருப்பதும் பாவம் என்று அறியப்படுகிறது. அதே வேளையில், ‘பாவம்’ என்றால் ஒழுக்கநெறி பிழை என்கின்ற தார்ப்பரியமும் உண்டு. வேண்டுமென்றே தீமையை விளைவிப்பது, ஆன்மிக அல்லது இயற்கை விதியை மீறுவது அல்லது தவறான காரியங்களை விரும்புவது, இவைகளெல்லாம் பாவம் என்று அறியப்படுகிறது. ஆனாலும், பாவத்தை பற்றிய ஒழுக்கநெறி சார்ந்த விளக்கம் ஒழுக்கநெறி பிழையை சுட்டிக்காட்டுவதால் ஒரு உண்மையான பரிகாரம் அவசியமாகிறது. எங்கிருந்து பரிகாரம் வரும்? கர்மத்தின் அடிப்படையிலான கொள்கைகளை கடைபிடிப்பதால் பரிகாரம் உண்டாகுமா? கர்மம் ஆட்சார்பற்றதும் ஒழுக்கநெறிக்கு அப்பாற்பட்டதாயும் உள்ளது. நற்காரியங்களை செய்து ஒருவேளை தராசில் சமநிலையை கொண்டுவரலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக பாவத்தை அகற்றமுடியாது. கர்மம் அல்லது முன்வினை கொள்கையானது ஒழுக்கப்பிழை நீதிநெறியின் அடிப்படையில் எந்த சூழமைவில் நிகழ்கின்றது என்பதனை தெளிவுப்படுத்த தவறுகிறது. உதாரணத்திற்கு, தனிமையில் பாவம் செய்யும்பொழுது நாம் யாரை காயப்படுத்துகிறோம்? அதனால் பாதிக்கப்படுவது யார்? கர்மம் ஆட்சார்பற்றதாய் இருப்பதால் எதை குறித்தும் அது கவலைப்படுவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மகனை கொலைசெய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பாதிக்கப்பட்ட மனிதருக்கு இவர் பணத்தையோ, சொத்தையோ, அல்லது தன்னுடைய சொந்த மகனையோ கொடுக்க முன்வரலாம். ஆனால், செய்த கொலையை திருப்பமுடியாதே. ஏப்பேர்ப்பட்ட நிவாரணமும் அந்த பாவத்தை ஈடுசெய்ய முடியாது. சிவன் அல்லது விஷ்ணுவை பூஜிப்பதினால் அல்லது வேண்டுவதினால் பரிகாரம் கிடைக்குமா? அந்த தெய்வங்கள் ஒருவேளை மன்னிப்பை அருளினாலும், அந்தப் பாவத்திற்கான கடன் செலுத்தப்படாமல் இருக்குமே. அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று கருதி அவர்களுடைய தெய்வங்கள் அந்தப் பாவத்தை மன்னித்து மோட்சக் கதவுகளை அவர்களுக்காக திறந்துவைக்கலாம்.

ஆனால் கிறிஸ்தவத்தில் பாவம் என்பது தேவன் என்கின்ற நபருக்கு விரோதமாக இழைக்கப்படும் முதலும் கடைசியுமான குற்றம் என்று அறியப்படுகிறது. ஆதாம் காலத்திலிருந்தே மனிதர்கள் பாவப் பிறவிகளாய் இருந்துள்ளனர். பாவம் யதார்த்தமானது, மனிதனுக்கும், தேவனுக்குமிடையே பெரிய இடைவெளியை உண்டாக்குகின்றது. பாவம் நியாயத்தை வேண்டுகிறது. அதே வேளையில் நாம் சரிசமமான அல்லது கூடுதலான நற்பணிகளை செய்து அதனை ஈடுகட்ட முடியாது.

ஒருவருடைய நற்பணிகள் அவருடைய தீயசெயல்களைவிட பத்து மடங்கு கூடுதலாய் இருந்தாலும், அந்த மனிதனுடைய மனசாட்சியில் இன்னும் தீமை குடிகொண்டிருக்கும். அப்படியானால், எஞ்சியுள்ள தீயசெயல்கள் என்னவாகும்? அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று கருதி அவைகள் அப்படியே மன்னிக்கப்படுமா? மோட்சத்தை அனுபவிக்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்குமா? இல்லை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாததால் இவைகள் வெறும் மாயையா? இதிலே எந்த ஒரு தெரிந்தெடுத்தலும் சரியானதன்று. மாயையைப் பற்றி பார்க்கும்போது, பாவம் மிகவும் யதார்த்தமான ஒன்றாய் நமக்கு காணப்படுவதால் அதனை மாயை என்று எளிதில் தள்ளிவடமுடியாது. பாவசுபாவத்தைப் பற்றி கவனிக்கும்போது, நேர்மையாக நாம் நம்மை ஆராய்ந்திட்டால் நாமெல்லாரும் பாவம் செய்துள்ளோம் என்பதை அறிந்துகொள்வோம். மன்னிப்பைக் குறித்து கவனிக்கும்போது, எந்தவொரு விலைக்கிரயமுமின்றி பாவத்தை அப்படியே மன்னிப்பது பாவத்தை ஒரு பொருட்டென்று கருதாதது போலாகிவிடும். அது தவறு என்று நாம் அறிந்திருக்கிறோம். மோட்சத்தை பற்றிய விஷயத்தில், பாவம் நுழைவதற்கான வாசல் அடைபடும் வரையில் மோட்சம் மோட்சமாகவே இராது. ஆகவே கர்மம் அல்லது முன்வினையின் தராசு நம்மை பாவ இருதயமுள்ளவர்ளாயும், சரி மற்றும் தவறு என்பவைகளின் மதிப்பீடுகளை மீறினவர்களாயும் விட்டுவிடுகிறது. கடைசியில், ஒன்று மோட்சம் நம்மை ஏற்றுக்கொள்ளக்கூடது, அப்படியும் உள்ளே வருவதற்கு அது இடங்கொடுத்தாலும் அது ஒரு பூரணமான இடமாய் அமையாது.

கிறிஸ்தவத்திலோ, எல்லா பாவங்களுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. அது எப்படியெனில், சிலுவையில் தன்னை பலியாய் கொடுத்த கிறிஸ்து நம்முடைய ஒட்டுமொத்த பாவத்தின் தண்டனையை தன்மீது ஏற்று அக்கடனைத் தீர்த்தார். தேவன் மனிதனானார், பூரணமான வாழ்க்கையை வாழ்ந்தார், நமக்கு வரவேண்டிய பாவத்தண்டனையை சிலுவை மரணத்தில் அவர் ஏற்றார். நம் சார்பாக, நமக்கு பதிலாக, நம்மை மூடும்படிக்கு, பரிகாரபலியாக அவர் சிலுவையில் அறையப்பட்டார். மரணமும் அவரை ஜெயிக்கமுடியாது என்பதனை நிரூபிக்கும் வகையில் அவர் மரணத்திலிருந்து உயிருடன் எழுந்தார். மேலும், நித்திய ஜீவனுக்கேதுவான அதே உயிர்த்தெழுதலை தன்னை தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு அவர்மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் வாக்களிக்கிறார் (ரோமர் 3:10, 23, 6:23, 8:12, 10:9-10, எபேசியர் 2:8-9, பிலிப்பியர் 3:21)

நிறைவாக, கிறிஸ்தவத்தில் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துள்ளோம். ஒரு நொடிப்பொழுது அனுபவத்திலோ, நம்முடைய நற்பணிகளின் கொண்டுவரும் புண்ணியத்திலோ, பக்திமிகு தியானத்திலோ, “இருப்பதாய் நம்புகிறேன்” என்று நம்முடைய விசுவாசத்தை பொய்யான தெய்வத்தின்மீதோ நாம் வைக்கவேண்டிதில்லை. உண்மையானவரும் உயிரோடிருக்கிற தேவனும், வரலாற்றில் வேரூன்றியுள்ள விசுவாசமும், தேவனைக் குறித்த நிலையான, சோதிக்கத்தக்க வெளிப்பாடும் (வேதவசனம்), நெறிசார்ந்த வாழ்க்கையை பற்றிய இறையியல் அடிப்படையும், மோட்சலோகத்தில் (பரலோகத்தில்) தேவனோடு வாசம்பண்ணக்கூடிய ஒரு நிலையான வசிப்பிடமும் நமக்கு உண்டு.

அப்படியானால், இது உங்களுக்கு என்னவாய் தோன்றுகிறது? இயேசுவே முழுமுதல் சத்தியம், பூரணமான யதார்த்தம்! இயேசுவே நம்முடைய பாவங்களுக்கான பூரணமான பலி. அவருடைய சிநேகிதர்களாகிய நமக்கு தன் ஜீவனையே கொடுத்த இயேசுவை நமது இரட்சகர் என்று விசுவாசித்து, அவர் நமக்கு அருளும் வெகுமதியை (யோவான் 1:12) அப்படியே பெற்றுக்கொள்ளும்போது தேவன் நமக்கு மன்னிப்பையும், இரட்சிப்பையும் அளிக்கிறார். உங்களுடைய நம்பிக்கையை இயேசுவின்மேல் வைத்து, உங்களுடைய ஒரே இரட்சகராக அவரை ஏற்றுக்கொள்ளும்போது, பரலோகத்தில் நித்திய மகிழ்ச்சிக்கான முழு நிச்சயத்தை பெறுவீர்கள். தேவன் உங்கள் பாவங்களை மன்னித்து, உங்கள் ஆத்துமாவை சுத்தமாக்கி, உங்கள் ஆவியை புதுப்பித்து இப்பூவுலகில் பரிபூரணமான வாழ்க்கையையும், மறுஉலகில் நித்திய சந்தோஷத்தையும் உங்களுக்கு அருளுவார். இப்பேர்ப்பட்ட விலையேறப்பெற்ற வெகுமதியை நாம் எப்படி புறக்கணிக்கலாம்? தம்மையே பலியாய் கொடுத்து நம்மேல் அன்புவைத்த தேவனுக்கு நாம் எப்படி நம்முடைய முதுகை காட்டலாம்?

ஒரு வேளை, இப்போதும் நீங்கள் நம்புவதை குறித்த ஒரு நிச்சயம் உங்களுக்கு இல்லையெனில், பின்வரும் பிரார்த்தனையை ஏறெடுக்கம்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம், “தேவனே, உண்மை எதுவோ அதை நான் அறிந்துகொள்ள எனக்கு உதவிடும், தவறானதை வகையறுக்க உதவிடும். இரட்சிக்கப்படுவதற்கான சரியான வழியை தெரிந்தெடுக்க உதவிடும்.” அப்படிப்பட்ட பிரார்த்தனையை தேவன் எப்போதும் கனப்படுத்துவார்.

இயேசு கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்பினால், வார்த்தைகளை கொண்டோ உள்ளத்தின் உணர்வுகளைகொண்டோ தேவனிடம் பேசுங்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் வெகுமதியை பெற்றுக்கொள்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். ஒரு பிரார்த்தனையை நீங்கள் ஏறெடுக்க விரும்பினால், இதோ உங்களுக்கான மாதிரி: “தேவனே, நீங்கள் என்மீது காட்டின அன்பிற்காய் நன்றி. எனக்காக உங்களையே பலியாய் தந்தமைக்காய் நன்றி. எனக்கு மன்னிப்பையும் இரட்சிப்பையும் அளித்ததற்காய் நன்றி. இயேசுவின் நாமத்தில் இரட்சிப்பின் வெகுமதியை நான் பெற்றுக்கொள்கிறேன். இயேசுவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன், ஆமென்!

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

நான் ஒரு இந்து, நான் எதற்காக கிறிஸ்தவனாகவேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries