settings icon
share icon
கேள்வி

இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார்?

பதில்


இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார் என்கிற காரியத்தை குறிப்பிடுகிற முக்கியமான வேதபகுதி 1 பேதுரு 3:18-19 கூறுகிறது, “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.” இங்கே “ஆவியிலே” என்று வரும் சொல் கிறிஸ்துவின் ஆவியைக் குறிக்கிறது. இங்கே காணப்படுகிற முரண்பாடானது, இயேசுவின் மாம்சத்திற்கும் அவருடைய ஆவிக்கும் இடையேவாகும், கிறிஸ்துவின் மாம்சத்திற்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையே அல்ல. கிறிஸ்துவின் மாம்சம் மரித்தது ஆனால் அவரது மரியாமல் உயிரோடு இருந்தது. இயேசுவின் சரீரம் கல்லறையில் இருந்தது, அதேநேரம் அவர் மரித்தபோது அவரது ஆவி அவரது சரீரத்தை விட்டு பிரிந்து மூன்று நாட்கள் வேறே இடத்தில இருந்தது (மத்தேயு 27:50).

இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார் என்பதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு சிறிது தகவலை கொடுக்கிறார். KJV வேதாகம மொழிபெயர்ப்பில், இயேசு காவலிலுள்ள ஆவிகளுக்கு “பிரசங்கித்தார்” (1 பேதுரு 3:19) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிற கிரேக்க சொல்லின் சாதாரண அர்த்தம் “செய்தியை பிரகடனப்படுத்தினார்” என்பதாகும். NIV மொழிபெயர்ப்பில் “பறைசாற்றினார்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார், அவருடைய சரீரம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது ஆவி உயிருடன் இருந்தது மற்றும் பிதாவினிடத்தில் வழங்கப்பட்டது (லூக்கா 23:46). அப்போஸ்தலனாகிய பேதுருவினுடைய கூற்றின் பிரகாரம், இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே இருந்த நாட்களில், காவலில் வைக்கப்பட்டுள்ள ஆவிகளிடத்தில் ஒரு விசேஷித்த செய்தியை பறைசாற்றினார் என்பதாகும்.

இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே சென்று பேசின இந்த ஆவிகள் எங்கே காவல் பண்ணப்பட்டு இருந்தனர்? வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலும் இயேசு நரகத்திற்கு சென்றதாக குறிப்பிடப்படவில்லை. இயேசு அவரது பாடுகளை தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர் நரகத்திற்கு சென்றார் என்று கூறுகிற கருத்து வேத பூர்வமானது அல்ல; சிலுவையில் அறையப்பட்ட இயேசு “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று மொழிந்தபோது அவரது பாடுகளும் முற்றுபெற்றுவிட்டன. NASB மொழிபெயர்ப்பு இயேசு ஹேடேஸ்க்கு போனார் என்று கூறுகிறது, ஆனால் ஹேடேஸ் என்பது நரகம் அல்ல. ஹேடேஸ் என்னும் கிரேக்கச்சொல் மரித்தவர்கள் இருக்கிற ஒரு பொதுவான இடத்தை குறிப்பிடுகிறது. இந்த இடம் கடைசி நியாயத்தீர்ப்பு வரையிலும் இருக்கத்தக்கதாக ஒரு தற்காலிக இடமாகும். வெளி. 20:11-15 வரையிலுள்ள வேதபகுதி NASB மற்றும் NIV மொழிபெயர்ப்புகளில் ஹேடேஸ் என்னும் சொல்லுக்கும் அக்கினி கடலுக்கும் இடையே உள்ள வேறுபாடு சரியாக கொண்டு வரப்பட்டுள்ளது. அக்கினி கடல் என்பது நித்தியமான இடமும் கடைசி நியாயத்தீர்ப்பில் தீர்ப்படைந்து அவிசுவாசிகள் அனைவரும் அதிலே பங்கடைவார்கள். ஹேடேஸ் என்பது தற்காலிகமான ஒரு இடமும் மரித்தவர்களாகிய பழைய ஏற்பாட்டு அவிசுவாசிளும் விசுவாசிகளும் இருக்கும் இடமாகும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு தமது ஆவியை பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார், மாம்சத்திலே மரித்தார், அருகில் சிலுவையிலறையப்பட்ட கள்ளனிடம் வாக்கு பண்ணின பரதீசுவில் பிரவேசித்தார் (லூக்கா 23:43). மரணத்திற்கு பிறகுள்ள ஒரு குறிப்பிட்ட கால அளவில் இயேசு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆவிகளிடத்தில் சென்று செய்தியை பறைசாற்றினார், அது ஒருவேளை விழுந்துபோன தூதர்களாக இருக்கலாம் (யூதா 1:6). இந்த ஆவிகள் காவலில் வைக்கப்படுவதற்கான காரணம், அவைகள் நோவாவின் காலகட்டத்தில் தேவனுக்கு கீழ்படியாமல் அவருக்கு விரோதமாக மிகப்பெரிய பாவத்தை செய்ததினால் ஆகும் (1 பேதுரு 3:20). இங்கே பேதுரு இயேசு எதை அறிவித்தார் என திட்டவட்டமாக மற்றும் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த அறிவிப்பு மீட்பின் செய்தியாக இருந்திருக்காது என்பதை திட்டவட்டமாக கூறலாம், காரணம் தூதர்கள் மீண்டுமாக இரட்சிக்கப்படுவதில்லை (எபிரெயர் 2:16). இயேசு எதை இங்கே அறிவித்திருப்பார் என்றால், அது சாத்தானின் மேலும் அவனுடைய சேனையின் மேலும் இயேசுவிற்கு உண்டாயிருந்த வெற்றியை பிரகடனம் பண்ணியிருப்பார் (1 பேதுரு 3:22; கொலோசெயர் 2:15).

எபேசியர் 4:8-10 வரையுள்ள வேத பாகம் இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார் என்பதைக் குறித்து நமக்கு வேறொரு குறிப்பை அளிக்கிறது. சங்கீதம் 68:18ஐ மேற்கொள்காண்பித்து, பவுல் இயேசுவைக்குறித்து இப்படியாக கூறுகிறார்: “அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்” (எபேசியர் 4:8). ESV மொழிபெயர்ப்பு கிறிஸ்து “சேனையை சிறைபடுத்தி” என்று குறிப்பிடுகிறது. இது வேதாகமத்தில் வேறே எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத காரியம் மற்றும் இயேசு மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் இருந்த பரதீசுவிற்கு சென்று அங்கெ அவர்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு நித்தியமான வீட்டிற்கு அதாவது பரலோகத்திற்கு சென்றார் என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர்களுடைய இரட்சிப்பை தமது சிலுவை மரணத்தினால் உறுதி செய்து ஆபிரகாம், தாவீது, யோசுவா, தானியேல், பிச்சைக்காரனாகிய லாசரு, சிலுவையில் மரித்த கள்வன் உட்பட விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்ட அனைவரையும் பரதீசுவில் இருந்து அதாவது ஹேடேஸில் இருந்து அவர்களுடைய புதிய ஆவிக்குரிய வீட்டிற்கு கொண்டு போனார்.

ஆக, இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே இருந்த மூன்று நாட்களில் என்ன செய்தார் என்று வேதாகமத்தில் முழுவதும் தெளிவாக இல்லை என்றே நாம் சொல்லமுடியும். இயேசு என்ன செய்தார் என்பதாக இரண்டு காரியங்களை நாம் சொல்லலாம்: மரித்த பரிசுத்தவான்களை ஆற்றிதேற்றி அவர்களை நித்திய வீட்டிற்கு கொண்டுவந்தார், அடுத்தபடியாக விழுந்துபோன தூதர்கள் அதாவது இப்பொழுது காவலில் வைக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு அவர்கள்மேலுள்ள தமது வெற்றியைப் பிரசங்கித்தார் என்பதாகும். இரட்சிக்கப்படுவதற்காக யாருக்கும் இயேசு இரண்டாம் வாய்ப்பு கொடுப்பதில்லை என்பதை நாம் உறுதியாக அறிந்துகொள்ளலாம்; மேலும் மரணத்திற்கு பின்பு நாம் நியாயத்தீர்ப்பை சந்திக்க வேண்டும் (எபிரேயர் 9:27). மேலும் இயேசு நரகத்தில் வேதனையை அனுபவிக்கவில்லை; அவருடைய இரட்சிப்பின் வேலை சிலுவையில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

English



முகப்பு பக்கம்

இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries