கேள்வி
கிறிஸ்துவின் வருகையைக் குறித்து பழைய ஏற்பாட்டில் எங்கே முன்னறிவிக்கப்பட்டுள்ளது?
பதில்
இயேசு கிறிஸ்துப் பற்றிய பல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களின் எண்ணிக்கையை சில உரைபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தெளிவான மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுபவைகள் பின்வருமாறு.
இயேசுவின் பிறப்பைக் குறித்து – ஏசாயா 7:14: "ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்." ஏசாயா 9:6: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” மீகா 5:2: “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.”
இயேசுவின் ஊழியத்தையும் மரணத்தையும் குறித்து – சகரியா 9:9: “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” சங்கீதம் 22:16-18: “நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.”
இயேசுவைப் பற்றிய தெளிவான தீர்க்கதரிசனம் ஏசாயா 53-ம் அதிகாரம் முழுவதுமாகும். ஏசாயா 53:3-7 மிக முக்கியமாக தவறாக கருத முடியாதது: “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.”
தானியேல் 9-ஆம் அதிகாரத்தில் "எழுபது ஏழுகள்" தீர்க்கதரிசனத்தில், மேசியாவாகிய இயேசு "சங்கரிக்கப்படுதல்" குறித்து மிகவும் துல்லியமான தேதியை முன்கூட்டியே முன்னறிவித்தது. இயேசு பெற்றுக்கொண்ட அடிகளை துல்லியமாக விவரிக்கிறது ஏசாயா 50:6. சகரியா 12:10ல், இயேசு சிலுவையில் மரித்தார் என்பதைக் குறிப்பிடுகிறதான மேசியாவைக் "குத்துதல்" முன்னறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று இன்னும் பல உதாரணங்கள் கூறலாம், ஆனால் இவை போதும். பழைய ஏற்பாடு மிக நிச்சயமான நிலையில் மேசியாவாக இயேசு வருவதை முன்னறிவிக்கிறது.
English
கிறிஸ்துவின் வருகையைக் குறித்து பழைய ஏற்பாட்டில் எங்கே முன்னறிவிக்கப்பட்டுள்ளது?