settings icon
share icon
கேள்வி

இயேசுவும் சாத்தானும் சகோதரர்களா?

பதில்


இல்லை, இயேசுவும் சாத்தானும் சகோதரர்கள் அல்ல. இயேசு தேவன் மற்றும் சாத்தான் அவரது சிருஷ்டிப்புகளில் ஒன்று. இயேசுவும் சாத்தானும் சகோதரர்கள் அல்ல என்பது மட்டுமல்ல, இரவும் பகலும் வித்தியாசமானது போல அவர்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள். இயேசு மாம்சத்தில் வந்த தேவன் அவதாரமாக இருக்கிறார்—நித்தியமானவர், அனைத்தையும் அறிந்தவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர், சாத்தான் தேவனுடைய நோக்கங்களுக்காக தேவனால் உருவாக்கப்பட்ட ஒரு விழுந்துபோன தேவதூதன். இயேசுவும் சாத்தானும் “ஆவி சகோதரர்கள்” என்ற போதனை மோர்மன்களின் (பிந்தைய நாள் புனிதர்கள்) பல தவறான போதனைகளில் ஒன்றாகும், மேலும் ஓரளவிற்கு யெகோவாவின் சாட்சிகளும் கூட இதில் உட்பட்டவர்கள் தான். இந்த இரண்டு குழுக்களும் முறையாக தவறான சமய வழிபாட்டு முறைகள் என்று முத்திரை குத்தப்படுகின்றன, ஏனெனில் அவை மிகவும் முக்கியமான கிறிஸ்தவ கோட்பாட்டை மறுக்கின்றன. அவர்கள் இயேசு, தேவன் மற்றும் இரட்சிப்பு போன்ற கிறிஸ்தவ சொற்களைப் பயன்படுத்துகையில், அவர்கள் மிக அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மதங்களுக்கு எதிரான கருத்துக்களையும் போதனைகளையும் கொண்டுள்ளனர். (இன்றைய பெரும்பாலான மோர்மன்கள் இயேசுவையும் சாத்தானையும் சகோதரர்கள் என்று நம்புவதை கடுமையாக மறுப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், இந்த போதனையானது ஆரம்பகால மோர்மன்களின் நம்பிக்கையாக இருந்தது).

இயேசுவும் சாத்தானும் "ஆவி சகோதரர்கள்" என்ற போதனை, மோர்மன்களின் தவறான புரிதல் மற்றும் வேதாகமத்தின் திரிபு மற்றும் அவர்கள் அதிகாரம் வாய்ந்ததாகக் கருதும் வேதாகமத்திற்கு அப்பாற்பட்ட சில போதனைகளிலிருந்து பிறந்ததாகும். எளிமையாகச் சொல்வதென்றால், நீங்கள் எந்த விதமான தெளிவான விளக்கக் கொள்கைகளைப் பயன்படுத்தி வேதாகமத்தைப் படித்து, இயேசுவும் சாத்தானும் “ஆவி சகோதரர்கள்” என்கிற எண்ணத்தை விட்டுவிட முடியாது. மோர்மன்கள் அல்லது பிற வழிபாட்டு முறைகள் நம்புவது போல், இயேசு முழுமையான தேவன் என்று வேதம் தெளிவாக கூறுகிறது. தேவன் தம் சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவர் என்று வேதம் மிகத் தெளிவாகக் கூறுகிறது, அதாவது சிருஷ்டிகராகிய கிறிஸ்துவுக்கும் அவருடைய சிருஷ்டிப்பான சாத்தானுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை.

இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கு அவருடைய பல மனைவிகளில் ஒருவருடன் பரலோகத்தில் பிறந்த முதல் "ஆவி குழந்தை" என்று மோர்மன்கள் நம்புகிறார்கள். இயேசுவை ஒரே மெய்யாயான தேவன் என்று ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு நாள் தேவர்களாக மாறுவதைப் போலவே, அவர் தேவனாக மாறினார் என்று அவர்கள் நம்புகிறார்கள். மோர்மன் கோட்பாட்டின் படி, தேவனுடைய "ஆவி குழந்தைகளில்" முதன்மையானவராக, இயேசுவின் இரண்டாவது "தேவனுடைய" மற்றும் "ஆவி சகோதரர்" சாத்தான் அல்லது லூசிபர் மீது முதன்மையானவர். அவர்கள் கொலோசெயர் 1:15 ஐ தங்கள் “ஆதார நூல்களில்” ஒன்றாகப் பயன்படுத்துவது முரண்பாடாக உள்ளது: “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.” ஆயினும், அவர்கள் வசனம் 16 ஐப் புறக்கணிக்கிறார்கள், அங்கு "அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.” சிங்காசனங்கள், கர்த்தத்துவங்கள், துரைத்தனங்கள், அதிகாரங்கள் எல்லாவற்றிலும் சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் அடங்கும்.

சாத்தானும் இயேசுவும் "ஆவிக்குரிய சகோதரர்கள்" என்று நம்புவதற்கு, வேதத்தின் தெளிவான போதனைகளை ஒருவர் மறுக்க வேண்டும். எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு கிறிஸ்து என்றும், திரியேகத் தேவனின் இரண்டாவது நபரான கிறிஸ்து முழுமையாகவும் தனித்துவமாகவும் தேவன் என்று வேதம் மிகவும் தெளிவாக உள்ளது. வேதாகமத்தின் பல பத்திகளில் இயேசு தன்னை தேவன் என்று கூறினார். யோவான் 10:30 இல் இயேசு, "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார். இயேசு தன்னை மற்றொரு சிறிய தேவன் என்று கூறவில்லை. அவர் முழுமையான தேவன் என்று அறிவித்தார். யோவான் 1:1-5 ல் இயேசு ஒரு சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பதும் அவரே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பதும் தெளிவாகிறது. "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" (யோவான் 1:3). இது எவ்வளவு தெளிவாக இருக்கிறது? "எல்லாம்" என்பது அது என்னக் கூறுகிறது என்பதை தெளிவாகக் குறிக்கிறது, அதாவது மற்ற தேவதூதர்கள் மற்றும் பிசாசுகளைப் போலவே சாத்தான் ஒரு தேவதூதனாகத் தானும் உருவாக்கப்பட்டது இதில் அடங்கும். சாத்தான் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்த ஒரு வீழ்ந்துபோன தேவதூதன் என்றும் இயேசுவை தேவன் என்றும் வேதம் வெளிப்படுத்துகிறது. சாத்தானுக்கும் இயேசுவுக்கும் இடையே இருக்கும் ஒரே உறவு, சிருஷ்டிகர் மற்றும் சிருஷ்டிப்பு, இயேசு கிறிஸ்து நீதியுள்ள நியாயாதிபதி மற்றும் சாத்தான் பாவமுள்ளவனாக உருவாக்கப்பட்டவன்.

மோர்மன்களைப் போலவே, யேகோவாவின் சாட்சிகளும் இயேசுவும் சாத்தானும் ஆவிக்குரிய சகோதரர்கள் என்று கற்பிக்கிறார்கள். சில மோர்மன்களும் யேகோவாவின் சாட்சிகளும் சில சமயங்களில் இந்த போதனையை புறக்கணிக்க முயற்சி செய்யலாம், ஏனெனில் இது வேதாகமம் உண்மையில் என்ன சொல்கிறதோ அதற்கு எதிரானது, இருப்பினும் இது இந்த அமைப்புகள் நம்புவது மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ கோட்பாட்டின் ஒரு பகுதியாகும்.

இயேசுவும் லூசிஃபரும் "ஏலோஹிமின் ஆவிக்குரியப் பிள்ளைகள்" என்பது மட்டுமல்லாமல், மனிதர்களும் ஆவிக்குரியக் குழந்தைகள் என்று மோர்மோன்கள் நம்புகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "தேவன், தேவதூதர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே வகை, ஒரு பெரிய குடும்பம்" என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் தாங்களும் ஒரு நாள் இயேசுவைப் போல அல்லது பிதாவாகிய தேவனாக மாறுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். தேவனுக்கும் அவருடைய சிருஷ்டிப்புக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டை வேதத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு நாள் தாங்களாகவே தேவனாக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். நிச்சயமாக இது ஏதேன் தோட்டத்தில் இருந்து சாத்தான் நமக்கு சொல்லி வரும் அதே பழைய பொய் (ஆதியாகமம் 3:15). தேவனுடைய சிங்காசனத்தை அபகரிக்கும் ஆசை மனிதர்களின் இருதயங்களில் உள்ளது.

மத்தேயு 16:15-ல் இயேசு முக்கியமான கேள்வியைக் கேட்டார்: "நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" இது இரட்சிப்புக்கு இன்றியமையாத ஒரு கேள்வி மற்றும் மோர்மோன்களும் யேகோவாவின் சாட்சிகளும் இதைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். இயேசு சாத்தானின் ஆவி சகோதரன் என்ற அவர்களின் பதில் தவறானது. இயேசு தேவனுடைய குமாரன், அவரில் தெய்வீகத்தின் முழுமையாக சரீரத்தில் வாசம்பண்ணுகிறது (கொலோசெயர் 2:9). அவர் சாத்தானை உருவாக்கினார், ஒரு நாள் அவர் தேவனுக்கு எதிரான கலகத்திற்காக நியாயமான தண்டனையாக சாத்தானை அக்கினிக் கடலில் தள்ளுவார். துரதிர்ஷ்டவசமாக அந்த நியாயத்தீர்ப்பு நாளில் சாத்தானின் பொய்களில் வீழ்ந்தவர்களும் சாத்தானுடனும் அவனுடைய பிசாசுகளுடனும் அக்கினிக் கடலிலேத் தள்ளப்படுவார்கள். மோர்மோன்கள் மற்றும் யேகோவாவின் சாட்சிகளின் தேவன் தன்னை வேதத்தில் வெளிப்படுத்திய தேவன் அல்ல. அவர்கள் மனந்திரும்பி, ஒரே உண்மையான தேவனைப் புரிந்துகொண்டு வணங்காத வரை, அவர்களுக்கு இரட்சிப்பின் நம்பிக்கை இல்லை.

English



முகப்பு பக்கம்

இயேசுவும் சாத்தானும் சகோதரர்களா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries