கேள்வி
இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றால் என்ன அர்த்தம்?
பதில்
எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் இயேசு மரிக்கவில்லை என்றால், ஒருவருக்கும் நித்திய ஜீவன் இருக்காது. இயேசுவே சொன்னார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6). இந்த அறிக்கையில், இயேசு தனது பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்கான காரணத்தை அறிவிக்கிறார்—அதாவது பாவம் செய்யும் மனிதகுலத்திற்கு பரலோகத்திற்கு செல்லும் வழியை வழங்குதல், இல்லையென்றால் அவர்களால் ஒருபோதும் அங்கு செல்ல முடியாது.
தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தபோது, அவர்கள் எல்லா வகையிலும் பரிபூரணமுள்ளவர்களாக இருந்தனர் மற்றும் எதேன் தோட்டம் என்னும் ஒரு மெய்நிகர் பரலோகத்தில் வாழ்ந்தனர் (ஆதியாகமம் 2:15). தேவன் மனிதனைத் தன் சாயலில் படைத்தார், அதாவது அவர்களும் தங்கள் சொந்த விருப்பப்படி முடிவுகளை எடுக்கவும் சுதந்திரமாக செயல்படும்படி இருக்கிறார்கள். ஆதாம் மற்றும் ஏவாள் சாத்தானின் சோதனைகளுக்கும் பொய்களுக்கும் எப்படி அடிபணிந்தார்கள் என்பதை ஆதியாகமம் 3 ஆம் அதிகாரம் விவரிக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிப்பதன் மூலம் அவர்கள் தேவனுடைய விருப்பத்திற்கு கீழ்ப்படியாமற்ப்போனார்கள்: "தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:16-17). இது மனிதனால் செய்யப்பட்ட முதல் பாவம், இதன் விளைவாக, ஆதாமில் இருந்து பெறப்பட்ட நமது பாவ சுபாவம் காரணமாக அனைத்து மனித இனமும் சரீர மற்றும் நித்திய மரணத்திற்கு ஆளானது.
பாவம் செய்யும் அனைவரும் சரீர ரீதியாகவும் ஆவிக்குரிய நிலையிலும் மரிப்பார்கள் என்று தேவன் அறிவித்தார். இது அனைத்து மனித இனத்திற்கும் விதிக்கப்பட்ட தலைவிதி ஆகும். ஆனால் தேவன், அவருடைய கிருபையிலும் கருணையிலும், சிலுவையில் அவரது பரிபூரண குமாரனின் இரத்தம் சிந்தியதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஒரு போக்கு வழியை வழங்கினார். "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" என்று தேவன் அறிவித்தார் (எபிரேயர் 9:22), ஆகையால் இரத்தம் சிந்துவதன் மூலம், மீட்பு வழங்கப்படுகிறது. மோசேயின் நியாயப்பிரமாணம் (யாத்திராகமம் 20:2-17) தேவனுடைய பார்வையில் மக்கள் "பாவமற்றவர்கள்" அல்லது "சரியானவர்கள்" என்று கருதப்படுவதற்கு ஒரு வழியை வழங்கியது-பாவத்திற்காக பலியிடப்பட்ட விலங்குகளின் பலியே அது. இந்த பலிகள் தற்காலிகமானவை, ஆனால் சிலுவையில் மரித்த கிறிஸ்துவின் பலி பரிபூரணமானதும், ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே பாவத்திற்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவந்தார் (எபிரெயர் 10:10).
இதனால்தான் இயேசு வந்தார், மரித்தார், முடிவான மற்றும் இறுதி பலியை செலுத்தினார், நமது பாவங்களுக்கான சரியான பலி அதுவேயாகும் (கொலோசெயர் 1:22; 1 பேதுரு 1:19). அவர் மூலமாக, தேவனுடன் வாழும் நித்திய ஜீவனின் வாக்குறுதி இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு விசுவாசத்தின் மூலம் பெறும்படி வழங்கினார், "இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது" (கலாத்தியர் 3:22). இந்த இரண்டு வார்த்தைகள் "விசுவாசம்" மற்றும் "நம்பிக்கை" ஆகியவை நம் இரட்சிப்புக்கு முக்கியமானவை. நம் பாவங்களுக்காக கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தை நாம் நம்புவதன் மூலம் நாம் நித்திய ஜீவனைப் பெறுகிறோம். "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8-9).
English
இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றால் என்ன அர்த்தம்?