settings icon
share icon
கேள்வி

இயேசு எப்படி, யாருக்கு நம்முடைய மீட்கும் பொருளின் விலைக்கிரயத்தைச் செலுத்தினார்?

பதில்


ஒரு மீட்கும் பொருளின் விலைக்கிரயம் என்பது சிறைப்பிடிக்கப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக செலுத்தப்படும் ஒன்றாகும். பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும், நரகத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக இயேசு நம் மீட்கும் பொருளின் விலைக்கிரயத்தை செலுத்தினார். யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகிய புத்தகங்கள் முழுவதும் தேவனுடைய பலிகளுக்கான தேவைகள் காணப்படுகின்றன. பழைய ஏற்பாட்டு காலங்களில், தேவன் இஸ்ரவேலர்களுக்கு மாற்றுப் பரிகாரத்திற்காக மிருகங்களின் பலிகளைச் செலுத்தும்படி கட்டளையிட்டார்; அதாவது, ஒரு நபரின் மரணத்திற்குப் பதிலாக ஒரு மிருகத்தின் மரணம் நடந்தது, பாவத்திற்கான தண்டனையே மரணமாகும் (ரோமர் 6:23). யாத்திராகமம் 29:36 கூறுகிறது, "பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட வேண்டும்."

தேவன் பரிசுத்தத்தைக் கோருகிறார் (1 பேதுரு 1:15-16). தேவனுடைய நியாயப்பிரமாணம் பரிசுத்தத்தை கோருகிறது. நாம் செய்யும் பாவங்களின் காரணமாக தேவனுக்கு முழு பரிசுத்தத்தை கொடுக்க முடியாது (ரோமர் 3:23); எனவே, தேவன் தனது நியாயப்பிரமாணத்தை திருப்தி செய்ய வேண்டும். அவருக்கான பலிகள் தேவைகளை பூர்த்தி செய்தன. இங்குதான் இயேசு வருகிறார். எபிரேயர் 9:12-15 நமக்கு சொல்கிறது, "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.”

மேலும், ரோமர் 8:3-4 கூறுகிறது, "மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்."

தெளிவாக, இயேசு நம் ஜீவனுக்கான மீட்கும் பொருளின் விலைக்கிரயத்தை தேவனிடத்தில் செலுத்தினார். அந்த மீட்பு அவருடைய சொந்த ஜீவன், அவரது சொந்த இரத்தம் சிந்துதல், பலியாக இருந்தது. அவரது பலி மரணம் காரணமாக, பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் பரிகாரத்தின் ஈவை ஏற்றுக்கொள்ளவும் தேவனால் மன்னிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அவருடைய மரணம் இல்லையென்றால், தேவனுடைய நியாயப்பிரமாணம் இன்னும் நம்முடைய சொந்த மரணத்தால் திருப்திப்படுத்தப்பட வேண்டும்.

English



முகப்பு பக்கம்

இயேசு எப்படி, யாருக்கு நம்முடைய மீட்கும் பொருளின் விலைக்கிரயத்தைச் செலுத்தினார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries