கேள்வி
கர்த்தருடைய ஜெபம் என்றால் என்ன? நாம் அந்த ஜெபத்தை செய்ய வேண்டுமா?
பதில்
கர்த்தருடைய ஜெபம் என்பது மத்தேயு 6:9-13 மற்றும் லூக்கா 11:2-4 ஆகிய வேதப்பகுதிகளில், இயேசு தமது சீஷர்களுக்கு எப்படி ஜெபிக்கவேண்டும் என்று கற்றுகொடுத்த ஜெபமாகும். மத்தேயு 6:9-13 சொல்லுகிறது, “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.” அநேகர் இந்த ஜெபத்தை நாம் மனப்பாடம் செய்து, அதை அப்படியே ஒரு வார்த்தையையும் விட்டுவிடாமல் சொல்லி ஜெபிக்க வேண்டும் என்று தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் கர்த்தருடைய ஜெபத்தை ஒரு மந்திர சூத்திரத்தைப்போல நினைத்து கொண்டு, அந்த வார்த்தைகளில் ஏதோ குறிப்பிட்ட வல்லமை அல்லது தேவனுடைய தாக்கம் இருப்பதாக எண்ணிகொண்டு அதை உபயோகிக்கிறார்கள்.
வேதாகமம் இதற்கு நேர் எதிராக நமக்குப் போதிக்கிறது. நாம் ஜெபம் செய்யும்போது, தேவன் நமது வார்த்தைகளில் விருப்பம் காண்பிப்பதை விட நம் இருதயத்த்தில் தான் பிரியமுள்ளவராக இருக்கிறார் “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்” (மத்தேயு 6:6-7). ஜெபிக்கும்போது, நம் இருதயதயங்களை தேவனிடத்தில் ஊற்ற வேண்டும் (பிலிபியர் 4:6-7), அதைவிடுத்து வெறுமனே மனப்பாடம் செய்த வார்த்தைகளை தேவனிடத்தில் கூறுவதில் ஒரு பயனுமில்லை.
கர்த்தருடைய ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஜெபத்தில் இருக்க வேண்டிய “மூலப்பொருட்களைக்” காண்பிக்கிறது. கீழ்கண்டவாறு இவற்றைப் பிரித்து ஆராயலாம்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்பது நாம் யாரிடம் ஜெபம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறது — பிதாவானவரிடம். “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” — இது நாம் தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அறிந்து அவரை துதித்து ஆராதிக்க வேண்டும் என்று சொல்லுகிறது. “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்கிற சொற்றொடர் நாம் நமது வாழ்வில் மற்றும் உலகத்தின்மேல், நம் திட்டத்தையல்ல, தேவன் வைத்துள்ள திட்டம் நடந்தேறும்படிக்கு ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது. நாம் தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபிக்கவேண்டும், நம்முடைய விருப்பங்கள் அல்ல. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” — நமது தேவைக்கு தேவனிடத்தில் கேட்க வேண்டும் என்று உணர்த்துகிறது “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்கிற வார்த்தைகள் நமது பாவங்களை நாம் தேவனிடத்தில் அறிக்கைச் செய்யவேண்டும் என்றும் நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்றும் நம்மை ஞாபகப்படுத்துகிறது. ஜெபத்தின் முடிவுரையாக “எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்,” என்கிற வார்த்தைகள் நாம் பாவத்தின்மேல் வெற்றிக்கொள்ளும்படி தேவனுடைய உதவிக்காகவும் பிசாசின் தாக்குதல்கள் நம்மை அனுகாமல் பாதுகாப்பாக இருக்கிறதற்காகவும் தேவனிடம் செய்யும் வேண்டுதல் ஆகும்.
ஆகவே, கர்த்தருடைய ஜெபம் என்பது ஏதோ மனப்பாடம் செய்துகொண்டு தேவனிடத்தில் ஒப்புவிக்கின்ற ஒன்றல்ல. அது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்கிற மாதிரி மட்டுமேயாகும். ஆப்படியானால், கர்த்தருடைய ஜெபத்தை மனப்பாடம் செய்வது தவறா? நிச்சயமாக இல்லை! அப்படியானால், கர்த்தருடைய ஜெபத்தை நாம் தேவனிடத்தில் சொல்லி ஜெபிப்பது தவறா? அந்த வார்த்தைகள் மெய்யாகவே உங்கள் இருந்து வந்து, நீங்களும் அதை அப்படியே அர்த்தம் கொண்டீர்களானால், நிச்சயமாக தவறல்ல. தேவன் எப்பொழுதுமே நாம் அவரிடத்தில் உறவாடி ஜெபிக்கும்போது, அந்த வார்த்தைகள் நமது உள்ளத்திலிருந்து வருகிறதா என்று மட்டும் தான் அதிக கவனமுள்ளவராய் இருக்கிறாரேயன்றி, நாம் உபயோகிக்கிற வார்த்தைகளில் அல்ல. பிலிப்பியா் 4:6-7 சொல்லுகிறது, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”
English
கர்த்தருடைய ஜெபம் என்றால் என்ன? நாம் அந்த ஜெபத்தை செய்ய வேண்டுமா?