settings icon
share icon
கேள்வி

மிகாவேல் மற்றும் சாத்தான் மோசேயின் சரீரம் மீது ஏன் சண்டையிட்டனர் (யூதா 9)?

பதில்


யூதாவின் புத்தகத்திலுள்ள வசனம் 9 என்பது வேதத்தில் வேறெங்கும் காணப்படாத ஒரு நிகழ்வைக் குறிக்கிறதாய் இருக்கிறது. மோசேயின் சரீரத்தைக் குறித்து மிகாவேல் சாத்தானுடன் தர்க்கித்துப்பேச அல்லது சண்டையிட வேண்டியிருந்தது, ஆனால் அது என்ன என்பதை விவரிக்கவில்லை. மற்றொரு தேவதூதனின் போராட்டம் தானியேலோடு தொடர்புடையது, அவர் ஒரு தேவதூதனை ஒரு தரிசனத்தில் வருவதை விவரிக்கிறார். தானியேல் 8:16 மற்றும் 9:21 இல் காபிரியேல் என்று பெயரிடப்பட்ட இந்த தேவதூதன், தேவதூதன் மிகாவேல் உதவிக்கு வரும் வரை "பெர்சியாவின் பிரபு" என்ற பிசாசினால் "எதிர்க்கப்பட்டார்" என்று தானியேலிடம் கூறுகிறார் (தானியேல் 10:13). எனவே தேவதூதர்கள் மற்றும் பிசாசுகள் மனிதர்கள் மற்றும் தேசங்களின் ஆத்துமாக்களுக்கு எதிராக ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடுவதையும், பிசாசுகள் தேவதூதர்களை எதிர்த்து, தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதைத் தடுக்க முயற்சிப்பதையும் தானியேல் புஸ்தகத்தில் இருந்து கற்றுக்கொள்கிறோம். மோசே இறந்த பிறகு தேவனே புதைத்த மோசேயின் சரீரத்தை ஏதோ ஒரு வகையில் சமாளிக்க மிகாவேல் தேவனால் அனுப்பப்பட்டார் என்று யூதா சொல்லுகிறார் (உபாகமம் 34:5-6).

மோசேயின் சரீரம் குறித்த இந்த போராட்டம் எதற்கு என்று பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, சாத்தான் தேவனுடைய ஜனங்களைக் குற்றம் சாட்டுபவன் (வெளிப்படுத்துதல் 12:10), மேரிபாவில் மோசேயின் பாவம் (உபாகமம் 32:51) மற்றும் எகிப்தியரின் கொலை ஆகியவற்றின் அடிப்படையில் மோசேயை நித்திய ஜீவனுக்கு உயர்த்துவதை எதிர்த்திருக்கலாம் (யாத்திராகமம் 2:12).

யூதாவில் உள்ள குறிப்பு சகரியா 3:1-2-ல் உள்ளதைப் போன்றது என்று சிலர் கருதுகின்றனர், “அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக!” ஆனால் இது ஒரே சம்பவமாக இருப்பதற்கான ஆட்சேபனைகள் வெளிப்படையானவை: (1) இரண்டு பத்திகளுக்கிடையேயான ஒரே ஒற்றுமை, "கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக" என்ற வெளிப்பாடு மட்டுமே. (2) "மிகாவேல்" என்ற பெயர் சகரியாவில் உள்ள பத்தியில் வரவில்லை. (3) சகரியாவில் "மோசேயின் சரீரம்" குறித்து எந்த குறிப்பும் இல்லை, அதற்கு ஒத்த வேறே குறிப்பும் இல்லை.

இந்த கணக்கைக் கொண்ட ஒரு தள்ளுபடியாகம புத்தகத்தை யூதா மேற்கோள் காட்டுகிறார் என்றும், அந்த கணக்கு உண்மை என்பதை உறுதிப்படுத்த யூதா அர்த்தங்கொண்டார் என்றும் கருதப்படுகிறது. ஆரம்பகால கிறிஸ்தவ அறிஞரும் இறையியலாளருமான ஒரிகன் (சுமார். 185-254), மோசேயின் சரீரத்தைக் குறித்து மிகாவேல் மற்றும் பிசாசுக்கு இடையே நடந்த சண்டையின் விவரத்தை உள்ளடக்கிய "தி அஸ்ஸம்ஷன் ஆஃப் மோசஸ்" (“The Assumption of Moses”) என்ற புத்தகம் அவரது காலத்தில் இருந்தது என்று குறிப்பிடுகிறார். அந்த புத்தகம், இப்போது தொலைந்துவிட்டது, ஒரு யூத கிரேக்க புத்தகம், மற்றும் ஒரிகன் இது யூதா மேற்கோள் காட்டிய கணக்கின் ஆதாரம் என்று கருதினார்.

அப்படியானால், கதை "உண்மையா" என்பது மட்டுமே இங்கே பொருள் சார்ந்த கேள்வி. கணக்கின் தோற்றம் எதுவாக இருந்தாலும், யூதா உண்மையில் மிகாவேலுக்கும் பிசாசுக்கும் இடையிலான வாக்குவாதத்தை உண்மை என்று குறிப்பிடுவது போல் தெரிகிறது. அவர் மோசேயின் மரணம் அல்லது பாறையை அடித்ததைப் பற்றி பேசியிருந்தால் அவர் எப்படிச் செய்திருப்பார் என்பதைப் போலவே அவர் அதைப் பற்றியும் பேசுகிறார். அது உண்மை இல்லை என்பதை யார் நிரூபிக்க முடியும்? அது இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? தேவதூதர்களுக்கு வேதாகமத்தில் பல குறிப்புகள் உள்ளன. தேவதூதன் மிகாவேல் உண்மையானவர் என்பதை நாம் அறிவோம்; பிசாசைப் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது; மேலும், பூமியில் நடக்கும் முக்கியமான பரிவர்த்தனைகளில் தீய மற்றும் நல்ல தேவதூதர்கள் பணியாற்றுவதாக ஏராளமான உறுதிமொழிகள் உள்ளன. மோசேயின் சரீரம் குறித்த இந்த குறிப்பிட்ட சர்ச்சையின் தன்மை முற்றிலும் அறியப்படாததால், யூகம் பயனற்றது. சரீரத்தை வைத்திருத்தல், சரீரத்தை அடக்கம் பண்ணுதல் அல்லது வேறு ஏதாவது ஒரு காரியத்தைக் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதா என்பது நமக்குத் தெரியாது.

எவ்வாறாயினும், இந்த இரண்டு விஷயங்கள் நமக்குத் தெரியும்: முதலில், வேதம் பிழையற்றது. வேதத்தின் பிழையற்ற நிலை கிறிஸ்தவ நம்பிக்கையின் தூண்களில் ஒன்றாகும். கிறிஸ்தவர்களாக, வேதத்தை பயபக்தியுடனும் ஜெபத்துடனும் அணுகுவதே நம்முடைய குறிக்கோள், நமக்குப் புரியாத ஒன்றை நாம் கண்டால், நாம் அதிகமாக ஜெபிக்கிறோம், மேலும் படிக்கிறோம், மற்றும் பதில் இன்னும் நமக்குத் தெரியாமல் போனால்—தேவனுடைய பரிபூரணமாக வார்த்தையை நேரிடும்போது, நம் சொந்த வரம்புகளை மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறோம்.

இரண்டாவதாக, சாத்தான் மற்றும் பிசாசுகளுடன் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் யூதா வசனம் 9 ஆகும். சாத்தானின் மீது சாபத்தை உச்சரிக்க மிகாவேல் மறுக்கும் உதாரணம், பிசாசு சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். விசுவாசிகள் அவர்களை உரையாற்றுவதற்காக அல்ல, மாறாக அவர்களுக்கு எதிராக கர்த்தருடைய தலையிடுவதற்கான சக்தியை நாட வேண்டும். சாத்தானை கையாள்வதில் பலமுள்ள மிகாவேல் கர்த்தரை தலையிட்டு பார்த்துக்கொள்ளும்படி கூறினால், பிறகு நிந்திக்கவோ, துரத்தவோ, அல்லது பிசாசுகளுக்கு கட்டளையிடவோ முயல்வதற்கு நாம் யார்?

English



முகப்பு பக்கம்

மிகாவேல் மற்றும் சாத்தான் மோசேயின் சரீரம் மீது ஏன் சண்டையிட்டனர் (யூதா 9)?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries