கேள்வி
இன்று நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு என்ன?
பதில்
தேவனால் மனிதகுலத்திற்கு அளிக்கப்பட்ட எல்லா வரங்களிலிருந்தும் பரிசுத்த ஆவியானவரின் சமுகம் நமக்கு அளிக்கப்பட்டது போல வேறொரு ஈவு இந்த உலகில் இல்லை. ஆவியானவருக்கு பல செயல்பாடுகள், பாத்திரங்கள், மற்றும் செயல்களும் உள்ளன. முதலாவதாக, எல்லா இடங்களிலும் உள்ள அனைவரின் இதயத்திலும் அவர் வசித்து ஒரு வேலையை செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் என்று இயேசு சீஷர்களிடம் கூறினார் (யோவான் 16:7-11). ஒப்புக்கொள்வார்களோ இல்லையோ எல்லோருக்கும் ஒரு "தேவ சுயநினைவு" உள்ளது. தேவனுடைய சத்தியங்களை மனதனுடைய மனங்களுக்கு ஆவியானவர் அளித்து போதுமான ஆதாரங்களுடன் அவர்கள் பாவிகள் என்று (அவர்களுடைய பாவங்களைக்) கண்டித்து உணர்த்துகிறார். இந்த கண்டித்து உணர்த்துதலுக்கு செவிகொடுப்பவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிறது.
ஒருமுறை நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுக்குச் சொந்தமானவர்களாய் இருக்கிறோம் என்றால், ஆவியானவர் நம் இருதயத்தில் என்றென்றும் வசித்து, முத்திரையிட்டு உறுதிப்படுத்தி, சான்றளித்து, நம்முடைய நித்தியத்தின் உறுதியை அவருடைய பிள்ளைகளாக உறுதிப்படுத்துகிறார். நமக்கு உற்ற துணையாக இருந்து நம்மை ஆறுதல் படுத்தி தேற்றி நடத்தும்படியாக ஆவியானவரை அனுப்புவேன் என்று இயேசு கூறினார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோவான் 14:16). இங்கே மொழிபெயர்த்திருக்கும் கிரேக்க வார்த்தை "ஆலோசகர்" என்பது "ஒன்றாகக் கூட இருக்கும்படி அழைக்கப்பட்டவர்" என்று பொருள்படுகிறது, மேலும் ஆறுதலளித்து அறிவுறுத்துகிற ஒருவர் என்கிற அர்த்தமாகவும் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளின் இதயங்களில் நிரந்தரமாக வாழ்கிறார் (ரோமர் 8: 9; 1 கொரிந்தியர் 6: 19-20, 12:13). இயேசு அவருடனான தனிப்பட்ட செயல்களிலிருந்தே செய்வதற்காக அவருடைய ஸ்தானத்தில் இருப்பதற்காக ஆவியானவரை கொடுத்தார்.
அந்த செயல்பாடுகள் மத்தியில் சத்தியத்தை வெளிப்படுத்துகிறதும் ஒன்றாகும். தேவனுடைய வார்த்தையை வியாக்கியானம் செய்து புரிந்துகொள்ள நமக்கு ஆவியானவரின் தூண்டுதல் நமக்கு உதவுகிறது. இயேசு தம் சீஷர்களிடம், “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:13) என்றார். வழிபாடு, கோட்பாடு மற்றும் கிறிஸ்தவ வாழ்வு சம்பந்தமாக தேவனுடைய முழு ஆலோசனையையும் அவர் நம் மனதில் வெளிப்படுத்துகிறார். அவரே முடிவான வழிகாட்டி, முன்னாக சென்று, வழிநடத்தி, தடைகளை நீக்கி, புரிதலைத் திறந்து, எல்லா விஷயங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள உதவி செய்கிறார். நாம் அனைத்து ஆவிக்குரிய காரியங்களுடனும் செல்ல வேண்டும் என்பதற்கு வழி வகுக்கிறார். அத்தகைய வழிகாட்டி இல்லாவிட்டால், நாம் பிழைக்குள் வீழ்ந்திருப்போம். சத்தியத்தின் முக்கியமான பாகம் அவர் வெளிப்படுத்துவது, இயேசு தான் யாரென்று என்று அவர் கூறினார் என்பதாகும் (யோவான் 15:26; 1 கொரிந்தியர் 12:3). கிறிஸ்துவின் தெய்வீகம் மற்றும் மனித அவதாரம், மேசியா, அவருடைய துன்பம் மற்றும் மரணம், அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரலோகம், தேவனின் வலது பாரிசத்தில் உன்னதத்தில் அமர்ந்தார், மற்றும் அனைவருக்கும் நியாயாதிபதியாக இருப்பவர் என்று ஆவியானவர் நம்மை உணர்த்துகிறார். அவர் எல்லாவற்றிலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார் (யோவான் 16:14).
பரிசுத்த ஆவியானவரின் பாத்திரங்களில் இன்னொன்று வரங்களை கொடுப்பவர். 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் நாம் பூமியில் கிறிஸ்துவின் சரீரமாக செயல்படுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வரங்களை விவரிக்கிறது. சிறிதும் பெரிதுமான இந்த எல்லா வரங்களும், இவ்வுலகத்தில் நாம் அவருடைய ஸ்தானபதிகளாகவும், அவருடைய கிருபையை வெளிப்படுத்தி, அவரை மகிமைப்படுத்துவதற்காகவும் ஆவியானவராலே இந்த வரங்கள் அளிக்கப்பட்டிருக்கிறோம்.
ஆவியானவர் நம் வாழ்வில் கனியை உற்பத்தி செய்கிறவராக செயல்படுகிறார். அவர் நம்மில் வசித்து நம் வாழ்வில், நம்முடைய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றின் விளைவை அறுவடை செய்கிறார் (கலாத்தியர் 5:22-23). இவைகள் நம் மாம்சத்தின் கிரியைகள் அல்ல, ஏனென்றால் மாம்சத்தால் இது போன்ற கனியை உற்பத்தி செய்ய இயலாது, இவைகள் நம் வாழ்வில் ஆவியானவரின் பிரசன்னத்தை காண்பிக்கிறது.
தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் வசிக்கிறார் என்பதை அறிந்திருப்பது, அவர் இந்த அதிசய செயல்களைச் செய்கிறார், அவர் என்றென்றும் நம்முடன் வசிக்கிறார், அவர் ஒருபோதும் நம்மை விட்டு விடமாட்டார் என்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தையும் ஆறுதலையும் தருகிறது. நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதும் செயல்படுவதுமான இந்த அருமையான ஈவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
English
இன்று நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு என்ன?