கேள்வி
சீயோன் என்றால் என்ன? சீயோன் மலை என்றால் என்ன? சீயோனின் வேதாகம அர்த்தம் என்ன?
பதில்
சங்கீதம் 87:2-3 கூறுகிறது, “கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்.” வேதாகமத்தில் 150 தடவைகளுக்கு மேல் வரும் “சீயோன்” என்ற வார்த்தையானது அடிப்படையில் “வலுவூட்டல்” என்று பொருள்படும். வேதாகமத்தில், சீயோன் என்பது தாவீது நகரம் மற்றும் தேவனுடைய நகரம். வேதாகமம் முன்னேறும்போது, “சீயோன்” என்ற சொல் முதன்மையாக ஒரு பௌதீக நகரத்தைக் குறிப்பதிலிருந்து அதிக ஆவிக்குரிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
வேதாகமத்தில் “சீயோன்” என்ற வார்த்தையின் முதல் குறிப்பு 2 சாமுவேல் 5:7: “ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.” ஆகையால், சீயோன் முதலில் எருசலேம் நகரில் உள்ள பண்டைய எபூசியர்களின் கோட்டையின் பெயர். சீயோன் என்னும் பெயர் கோட்டைக்கு மட்டுமல்ல, கோட்டை நின்ற நகரத்திற்கும் அப்படியே வந்தது. தாவீது “சீயோனின் கோட்டையை” கைப்பற்றிய பிறகு, சீயோன் “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது (1 இராஜாக்கள் 8:1; 1 நாளாகமம் 11:5; 2 நாளாகமம் 5:2).
சாலமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டியபோது, ஆலயத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் சேர்ந்து சீயோன் அர்த்தத்தில் விரிவடைந்தது (சங்கீதம் 2:6, 48:2, 11-12, 132:13). சீயோன் இறுதியில் எருசலேம் நகரம், யூதாவின் தேசம் மற்றும் ஒட்டுமொத்த இஸ்ரவேல் மக்களுக்கும் ஒரு பெயராகப் பயன்படுத்தப்பட்டது (ஏசாயா 40:9; எரேமியா 31:12; சகரியா 9:13).
“சீயோன்” என்ற வார்த்தையின் மிக முக்கியமான பயன்பாடு ஒரு இறையியல் அர்த்தத்தில் உள்ளது. சீயோன் தேவனுடைய மக்களாக இஸ்ரவேலை காண்பிக்கும் அல்லது குறிப்பிடும் வண்ணமாக அடையாளப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது (ஏசாயா 60:14). சீயோனின் ஆவிக்குரிய அர்த்தம் புதிய ஏற்பாட்டில் தொடர்கிறது, அங்கு தேவனுடைய ஆவிக்குரிய ராஜ்யமான பரலோக எருசலேமின் கிறிஸ்தவ அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது (எபிரெயர் 12:22; வெளிப்படுத்துதல் 14:1). பேதுரு கிறிஸ்துவை சீயோனின் மூலைக்கல்லாக குறிப்பிடுகிறார்: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.” (1 பேதுரு 2:6).
English
சீயோன் என்றால் என்ன? சீயோன் மலை என்றால் என்ன? சீயோனின் வேதாகம அர்த்தம் என்ன?