settings icon
share icon
கேள்வி

இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார், ஆனால் அதை ஒழிக்கவில்லை என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


“நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:17-18) என்று இயேசு சொன்னார். நம்முடைய கர்த்தருடைய இந்த முக்கியமான கூற்று, அவருடைய பணி மற்றும் தேவனுடைய வார்த்தையின் தன்மை பற்றிய நுண்ணறிவை நமக்குத் தருகிறது.

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் என்று இயேசு அறிவித்ததில், ஒன்றில் இரண்டு அறிக்கைகள் அடங்கியுள்ளன. இயேசு செய்த ஒன்று மற்றும் அவர் செய்யாத ஒன்று என இரண்டு அடங்கியிருக்கின்றன. அதே சமயம், தேவனுடைய வார்த்தையின் நித்திய தன்மையையும் இயேசு வலியுறுத்துகிறார்.

தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்காக இயேசு தம் வழியிலிருந்து வெளியேறுகிறார். பரிசேயர்கள் என்ன குற்றம் சாட்டினாலும், நியாயப்பிரமாணத்தை ஒழிக்க அவர் வரவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையில், நியாயப்பிரமாணத்தை துல்லியமாக கற்பிப்பவர்களுக்கும் அதை பயபக்தியுடன் வைத்திருப்பவர்களுக்கும் இயேசு ஒரு பாராட்டுடன் தனது அறிக்கையைத் தொடர்கிறார்: "ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்" (மத்தேயு 5:19) .

"நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகளும்" என்று குறிப்பிடப்படும் தேவனுடைய வார்த்தைக்கு இயேசு கற்பிக்கும் குணங்களைக் கவனியுங்கள்: 1) வார்த்தை நித்தியமானது; அது இயற்கை உலகத்தை விஞ்சும் ஒன்றாக இருக்கிறது. 2) வார்த்தையானது நோக்கத்துடன் எழுதப்பட்டது; அது நிறைவேற்றப்பட வேண்டும். 3) வார்த்தைக்கு முழுமையான அதிகாரம் உள்ளது; அதன் மிகச்சிறிய உறுப்பாக இருந்தாலும் கூட அதுவும் நிறுவப்பட்டுள்ளது. 4) வார்த்தை உண்மையுள்ளதும் நம்பகமானதும் ஆகும்; அது உரைக்கும் “யாவும்” நிறைவேற்றப்படும். மலைப்பிரசங்கத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்கும் எவருக்கும் வேதவசனங்களுக்கான அவருடைய உறுதிப்பாட்டை சந்தேகிக்க முடியாது.

இயேசு தம்முடைய ஊழியத்தில் செய்யாதது என்ன என்பதைக் கவனியுங்கள். மத்தேயு 5:17-ல், நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் என்று இயேசு கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசுவின் நோக்கம் வார்த்தையை ரத்து செய்யவோ, கலைக்கவோ அல்லது செல்லாததாக மாற்றவோ அல்ல என்பதாகும். தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்படும்; நியாயப்பிரமாணம் அது வழங்கப்பட்ட நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றும் (ஏசாயா 55:10–11 ஐக் காண்க).

அடுத்து, இயேசு என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். நியாயப்பிரமாணத்தையும் தீதீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றவே தான் வந்ததாக இயேசு கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வார்த்தையை நிலைநிறுத்துவதும், அதை உருவாக்குவதும், எழுதப்பட்ட அனைத்தையும் அப்படியே முழுமையாக நிறைவேற்றுவதும் இயேசுவின் பிரதான நோக்கமாக இருந்தது. "கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்" (ரோமர் 10:4). மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசிகளின் கணிப்புகள் இயேசுவில் நிறைவேறும் மற்றும் சரியாக உணரப்படும்; நியாயப்பிரமாணத்தின் புனிதத் தரம் கிறிஸ்துவால் முழுமையாக ஆதரிக்கப்படும், தனிப்பட்ட முறையில் கீழ்ப்படிய வேண்டிய கடுமையான தேவைகள் மற்றும் சடங்கு அனுசரிப்புகள் இறுதியாகவும் முழுமையாகவும் திருப்தி அளிக்கும்.

இயேசு கிறிஸ்து தமது முதல் வருகையின்போது மட்டும், அவர் தன்னைப் பற்றிய நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார் (உதாரணமாக, மத்தேயு 1:22; 13:35; யோவான் 19:36; லூக்கா 24:44). இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை குறைந்தது இரண்டு வழிகளில் நிறைவேற்றினார்: ஒரு போதகராகவும், அவைகளின்படி செய்பவராகவும் நிறைவேற்றினார். நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 22:35-40; மாற்கு 1:44), அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தார் (யோவான் 8:46; 1 பேதுரு 2:22). ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்வதில், இயேசு தார்மீக சட்டங்களை நிறைவேற்றினார்; தியாகபலியாக கொடுத்த தமது மரணத்தின் மூலமாக இயேசு சடங்கு சட்டங்களை நிறைவேற்றினார். கிறிஸ்து பழைய மத முறையை அழிக்க அல்ல, அதன் மீது கட்டியெழுப்ப வந்தார்; அவர் பழைய உடன்படிக்கையை முடித்து புதியதை நிறுவ வந்தார்.

இயேசு நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க அல்ல, அவற்றை நிறைவேற்றுவதற்காகவே வந்தார். உண்மையில், பழைய உடன்படிக்கையின் சடங்குகள், பலிகள் மற்றும் பிற கூறுகள் இனி “வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது” (எபிரெயர் 10:1). ஆசரிப்புக்கூடாரமும் தேவாலயமும் “கைகளால் செய்யப்பட்ட பரிசுத்த ஸ்தலங்கள்”, ஆனால் அவை ஒருபோதும் நிரந்தரமாக இருக்கக்கூடாது; அவை “உண்மையான விஷயங்களின் பிரதிகள்” (எபிரெயர் 9:24) மட்டுமேயாகும். நியாயப்பிரமாணம் ஒரு புதிய காலாவதி தேதியைக் கொண்டிருந்தது, அது "புதிய ஒழுங்கின் காலம் வரை பொருந்தும் வெளிப்புற விதிமுறைகள்" (எபிரெயர் 9:10) ஆகும்.

நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றுவதில், இயேசு நம்முடைய நித்திய இரட்சிப்பைப் பெற்றார். பலியிடுவதற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்கும் ஆசாரியர்கள் தேவையில்லை (எபிரெயர் 10:8-14). இயேசு அதை நமக்காக, ஒரு முறை செய்துள்ளார். விசுவாசத்தின் மூலம் கிருபையால், நாம் தேவனோடு சரியானவர்களாக இருக்கிறோம்: "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோசெயர் 2:14).

இயேசு நியாயப்பிரமாணத்தை "ஒழிக்கவில்லை" என்பதால், நியாயப்பிரமாணம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்று சிலர் வாதிடுகிறார்கள் – அதாவது, நியாயப்பிரமாணமானது புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் மீது இன்னும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் இனி நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை என்று பவுல் தெளிவாக இருக்கிறார்: “ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம். இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.” (கலாத்தியர் 3:23-25). நாம் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, ஆனால் “கிறிஸ்துவின் பிரமாணத்தின்” கீழாக இருக்கிறோம் (கலாத்தியர் 6:2 ஐக் காண்க).

நியாயப்பிரமாணமானது இன்றும் நம்மீது தனது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறதென்றால், அது இன்னும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றர்த்தமாகிவிடும் – அதாவது அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாகிவிடும். நியாயப்பிரமாணம், ஒரு சட்ட அமைப்பாக, இன்றும் நம்மீது பிணைக்கப்பட்டிருந்தால், அதை நிறைவேற்றுவதாக மற்றும் நிறைவேற்றினதாக இயேசு கூறுவது பொய் என்றும், சிலுவையில் அவர் செய்த தியாகம் (பலி) காப்பாற்ற போதுமானதாக இல்லை என்றும் அர்த்தமாகிவிடும். தேவனுக்கு நன்றி, இயேசு முழு நியாயப்பிரமாணத்தையும் நிறைவேற்றினார், இப்போது அவருடைய நீதியை ஒரு இலவச பரிசாக நமக்கு அளிக்கிறார். "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள், ஆனால் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் ஒருவர் நீதிமானாக முடியும். ஆகவே, நாமும், கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறோம், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் அல்ல, கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுவோம், ஏனென்றால் நியாயப்பிரமாணத்தின் செயல்களால் யாரும் நீதிமானாக்கப்பட மாட்டார்கள்” (கலாத்தியர் 2:16).

English



முகப்பு பக்கம்

இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார், ஆனால் அதை ஒழிக்கவில்லை என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries