கேள்வி
புத்திரசுவிகாரம் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
புத்திரசுவிகாரத்திற்காக குழந்தைகளை விட்டுக்கொடுப்பது பெற்றோருக்கு ஒரு அன்பான மாற்றாக இருக்கலாம், காரணம் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் சொந்த குழந்தைகளை பராமரிக்க முடியாமல் இருக்கின்ற நிலையில் அப்படி செய்யக்கூடும். சொந்தமாக குழந்தைகளைப் பெற முடியாத பல தம்பதிகளுக்கு அவர்களுக்கான ஜெபத்திற்கு இது ஒரு பதிலாகவும் இருக்கலாம். புத்திரசுவிகாரம் என்பது, சிலருக்கு, உயிரியல் ரீதியாக, சொந்தமில்லாத குழந்தைகளுடன் தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பெற்றோர்களாக தங்கள் தாக்கத்தை பெருக்க அழைப்பு விடுப்பதாகும். புத்திரசுவிகாரம் வேதாகமம் முழுவதும் சாதகமாகப் பேசப்படுகிறது.
பிறக்கும் எபிரேய ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் பார்வோன் கட்டளையிட்டிருந்த காலத்தில், ஒரு மகனைப் பெற்றெடுத்த யோகெபேத் என்ற எபிரேய பெண்ணின் கதையை யாத்திராகமம் புத்தகம் சொல்லுகிறது (யாத்திராகமம் 1:15-22). யோகெபேத் ஒரு கூடையை எடுத்து, அதை நீர்ப்புகாதபடி செய்து, குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் இறக்கி அனுப்பினார். பார்வோனின் மகள்களில் ஒருவர் கூடையை கண்டுபிடித்து குழந்தையை மீட்டெடுத்தார். அவள் அவனை அரச குடும்பத்தில் புத்திரசுவிகாரம் எடுத்து மோசே என்ற பெயரைக் கொடுத்தாள். அவர் பின்னாளில் தேவனுடைய உண்மையுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட ஊழியராக மாறினார் (யாத்திராகமம் 2:1-10).
எஸ்தரின் புத்தகத்தில், எஸ்தர் என்ற அழகான பெண், அவளுடைய பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு அவளுடைய உறவினரால் தத்தெடுக்கப்பட்டாள், பிறகு ராஜ்யத்தின் ஒரு ராணியாகிவிட்டாள், யூத மக்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும்படி தேவன் அவளைப் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்து ஒரு மனிதனின் வித்தில்லாமல் அதற்குப்பதிலாக பரிசுத்த ஆவியின் மூலமாக கருத்தரிக்கப்பட்டார் (மத்தேயு 1:18). அவர் "தத்தெடுக்கப்பட்டு" வளர்க்கப்பட்டார், அவருடைய தாயின் கணவர் யோசேப்பு, இயேசுவை தனது சொந்த குழந்தையாக எடுத்துக் கொண்டார்.
நம்முடைய இருதயங்களை கிறிஸ்துவுக்குக் கொடுத்து, இரட்சிப்பிற்காக அவரை மட்டுமே நம்பும்போது, நாம் அவருடைய குடும்பத்தின் ஒரு அங்கமாகி விடுகிறோம் என்று தேவன் கூறுகிறார்-மனித சித்தத்தினால் இயல்பான செயல்முறையின் மூலம் அல்ல, ஆனால் தத்தெடுப்பின் மூலமாகும். “அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). இதேபோல், ஒரு நபரை தத்தெடுப்பதன் மூலம் ஒரு குடும்பத்திற்குள் கொண்டுவருவது தேர்வு மற்றும் அன்பினால் செய்யப்படுகிறது. அதேபோல இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்மை தேவனிடத்தில் கொண்டுவருவதன் மூலம் நம்மை அவருடைய சொந்த குடும்பத்தில் தத்தெடுப்பதே அவருடைய மாறாத திட்டம், இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்” (எபேசியர் 1:5). கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்பவர்களை அவருடைய ஆவிக்குரிய குடும்பத்தில் தேவன் ஏற்றுக்கொள்வதால், குழந்தைகளை நம் சொந்த சரீரப்பிரகாரமான குடும்பங்களில் தத்தெடுப்பதை நாம் அனைவரும் ஜெபத்துடன் பரிசீலிக்க வேண்டும்.
சரீரப்பிரகாரமான அர்த்தத்திலும் ஆவிக்குரிய ரீதியிலும் தத்தெடுப்பு என்பது வேதத்தில் சாதகமான வெளிச்சத்தில் காட்டப்பட்டுள்ளது. தத்தெடுப்பவர்கள் மற்றும் தத்தெடுக்கப்பட்டவர்கள் இருவரும் மகத்தான ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள், இது தேவனின் குடும்பத்தில் நாம் தத்தெடுக்கப்படுவதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது.
English
புத்திரசுவிகாரம் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?