கேள்வி
நாம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதற்கு வயது வரம்பு உள்ளதா?
பதில்
ஆதியாகமம் 6:3 ஐ மனிதகுலத்தின் ஆயுசு காலம் 120 வயது வரம்பாக பலர் புரிந்துகொள்கிறார்கள், “அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.” இருப்பினும், ஆதியாகமம் 11 ஆம் அதிகாரத்தில் அநேகர் 120 வயதைத் தாண்டி வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆதியாகமம் 6:3ஐ சிலர் ஒரு பொது விதியாக, மக்கள் இனி 120 வயதைத் தாண்டி வாழ மாட்டார்கள் என்று விளக்குகிறார்கள். ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, ஆயுட்காலம் வியத்தகு முறையில் சுருங்கத் தொடங்கியது (ஆதியாகமம் 5 ஐ ஆதியாகமம் 11 உடன் ஒப்பிடுக) இறுதியில் 120 க்கு கீழே சுருங்கியது (ஆதியாகமம் 11:24). ஆதியாகமம் 11 க்குப் பிறகு, ஒரு மனிதன் அதாவது மோசே 120 வயதுவரை வாழ்ந்ததைப் பற்றிய குறிப்பு நமக்குள்ளது, ஆனால் அந்த 120 வயதைக் கடந்த எவரும் வாழ்ந்ததாக எந்த பதிவும் இல்லை.
இருப்பினும், மற்றொரு விளக்கம், அதன் பின்னணியில் பொருந்தக்கூடியதாக தோன்றுகிறது, அதாவது ஆதியாகமம் 6:3 என்பது தேவனுடைய அறிவிப்பிலிருந்து 120 ஆண்டுகள் கழித்து ஜலப்பிரளயம் ஏற்படும் என்பதாகும். மனுக்குலத்தின் நாட்கள் முடிவடைவது மனிதகுலமே ஜலப்பிரலயத்தில் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. ஆதியாகமம் 5:32-ல் நோவாவுக்கு 500 வயதும், ஜலப்பிரளயம் வரும்போது நோவாவுக்கு 600 வயதும் இருந்தபோது, பேழையை கட்டும்படி தேவன் நோவாவிடம் கட்டளையிட்டதால் சிலர் இந்த விளக்கத்தை மறுக்கிறார்கள் (ஆதியாகமம் 7:6); 100 ஆண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டது, 120 ஆண்டுகள் அல்ல. ஆயினும், ஆதியாகமம் 6:3-ல் காண்கிற தேவன் அறிவிக்கும் அறிவிப்பின் நேரம் கொடுக்கப்படவில்லை. மேலும், பேழையை கட்டும்படி தேவன் நோவாவிடம் கட்டளையிட்ட நேரம் ஆதியாகமம் 5:32 அல்ல, மாறாக நோவா தனது மூன்று குமாரர்களின் தந்தையாக ஆன வயது. 120 ஆண்டுகளில் ஜலப்பிரளயம் ஏற்பட வேண்டும் என்று தேவன் தீர்மானித்து, பின்னர் பேழையைக் கட்டும்படி நோவாவிடம் கட்டளையிடுவதற்கு பல வருடங்கள் காத்திருந்தார் என்பது முற்றிலும் நம்பத்தகுந்த விஷயம் அல்ல. எது எப்படியிருந்தாலும், ஆதியாகமம் 5:32 க்கும் மற்றும் 7:6 க்கும் இடையிலான 100 ஆண்டுகள் ஆதியாகமம் 6:3 ல் குறிப்பிடப்பட்டுள்ள 120 ஆண்டுகளுக்கு எந்த வகையிலும் முரண்படுவதில்லை.
ஜலப்பிரளயம் உண்டாகி பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மோசே இப்படியாக அறிவித்தார், “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்” (சங்கீதம் 90:10). ஆதியாகமம் 6:3 மற்றும் சங்கீதம் 90:10 ஆகியவை தேவனால் நிர்ணயிக்கப்பட்ட மனிதர்களின் வயது வரம்புகள் அல்ல. ஆதியாகமம் 6:3 என்பது ஜலப்பிரலயதிற்கான கால அட்டவணையின் கணிப்பு ஆகும். சங்கீதம் 90:10 வெறுமனே ஒரு பொது விதியாக, மக்கள் 70-80 ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்பதாகும் (இது இன்று உண்மையாயிருக்கிறது).
English
நாம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதற்கு வயது வரம்பு உள்ளதா?