settings icon
share icon
கேள்வி

ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா?

பதில்


ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் அவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? ஆம், மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் தேவனோடு ஒரு உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள்; இந்த உறவு அவர்களுடைய இரட்சிப்பை நித்தியமாக எப்பொழுதுமே பாதுகாக்கப்பட்ட ஒன்றாக உத்திரவாதம் அளிக்கிறது. இன்னும் விளக்கமாக கூறவேண்டுமானால், இரட்சிப்பு என்பது கிறிஸ்துவுக்காக “எடுக்கிற தீர்மானம்” அல்லது ஏறெடுக்கப்படுகிற ஜெபத்தைக்காட்டிலும் மேலானதாகும்; இரட்சிப்பு என்பது தேவனுடைய இறையாண்மையின் செயலாகும், அதாவது மறுஜென்மம் அடையாத பாவியை கழுவி, புதுப்பித்து, பரிசுத்த ஆவியானவராலே மறுபடியும் பிறக்கச்செய்கிற செயலாகும் (யோவான் 3:3; தீத்து 3:5). இரட்சிக்கப்படுகிற வேளையில், தேவன் மன்னிக்கப்பட்ட பாவிக்கு ஒரு புதிய இருதயம் மற்றும் புதிய ஆவியை அவனில் நல்குகிறார் (எசேக்கியேல் 36:26). ஆவியானவர் இரட்சிக்கப்பட்ட மனிதனை தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும்படி செய்வார் (எசேக்கியேல் 36:26-27; யாக்கோபு 2:26). இந்த இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானது மற்றும் இது தேவனுடைய செயல் என்னும் உண்மையை பல வேத பகுதிகள் அறிவிக்கின்றன:

(a) “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று ரோமர் 8:30 கூறுகிறது. கர்த்தர் நம்மைத் தெரிந்துகொண்ட அந்த கணப்பொழுதிலிருந்தே பரலோகத்தில் அவருடைய பிரசன்னத்தில் மகிமையடைச்செய்தது போல் இந்த வசனம் கூறுகிறது. விசுவாசி ஒரு நாள் மகிமையில் பிரவேசிப்பதை எதுவும் தடைசெய்ய முடியாது ஏனென்றால் கர்த்தர் இதை முன்னதாகவே பரலோகத்தில் திட்டம் பண்ணியிருக்கிறார். ஒருவர் நீதிமானாக்கப்பட்டால் அவரது இரட்சிப்புக்கு உத்திரவாதம் உண்டு – அவருக்கு இருக்கும் பாதுகாப்பு. அவர் ஏற்கனவே பரலோகத்தில் மகிமைப்பட்டுவிட்டது போன்றது.

(b) ரோமர் 833-34ல் பவுல் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார்: “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே”. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? ஒருவருமில்லை. ஏனென்றால் கிறிஸ்துவே நம்முடைய மத்தியஸ்தர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? ஒருவருமில்லை. ஏனெனில் நமக்காக மரித்த கிறிஸ்துவே நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர். நமக்காகப் பரிந்து பேசுகிறவரும், நம்மை நியாயந்தீர்க்கிறவரும் நம் இரட்சகரே.

(c) விசுவாசிகள் விசுவசிக்கும்போது மறுபடியும் பிறக்கிறார்கள் (மறுபடியும் ஜெனிப்பிக்கப்படுதல்) (யோவான் 3:3; தீத்து 3:5). ஒரு கிறிஸ்தவர் இரட்சிப்பை இழப்பதற்கு, அவர் மறுபடி ஜெனிப்பிக்கப்படாமலிருக்க வேண்டும். மறுபடியும் பிறத்தல் எடுத்துக்கொள்ளப்படும் என்பதற்கு வேதாகமத்தில் எந்த சான்றும் இல்லை.

(d) பரிசுத்த ஆவியானவர் எல்லா விசுவாசிகளுக்குள்ளும் தங்கி வாசம் பண்ணுகிறார் (யோவான் 14:17; ரோமர் 8:9); எல்லா விசுவாசிகளையும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஸ்நானப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 12:13). ஒரு விசுவாசி இரட்சிக்கப்படாதவர்களாக மாறவேண்டுமானால், அவரில் இருந்து ஆவியானவர் “வாசம் பண்ணப்படாமலும்”, கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டும் இருக்கவேண்டும்.

(e) யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு “நித்திய ஜீவன்” உண்டு என்று யோவான் 3:15 கூறுகிறது. நீங்கள் இன்று கிறிஸ்துவில் விசுவாசித்து நித்திய ஜீவனைப்பெற்றுக்கொண்டு, நாளை அதை இழந்துவிடுவீர்களானால், அது “நித்தியமானதாக” ஒருபோதும் இருக்க முடியாது. ஆகவே நீங்கள் இரட்சிப்பை இழந்தால் வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்த வாக்குத்தத்தங்கள் பிழையாக இருக்கும்.

(f) இந்த விவாதத்தின் இறுதியான முடிவு என்னவென்பதை வேதபகுதியே சிறந்த விளக்கத்தை அளிக்கிறது, “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 8:38-39). உங்களை இரட்சித்த தேவனே உங்களை காக்கவும் வல்லவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் ஒருமுறை இரட்சிக்கப்பட்டோமானால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவர்களாகவே இருப்போம். எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி, நம்முடைய இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பாக இருக்கிறது!

English



முகப்பு பக்கம்

ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries