settings icon
share icon
கேள்வி

அப்போஸ்தலனாகிய பவுலின் எழுத்துக்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டதா (1 கொரிந்தியர் 7:12 பார்க்கவும்)?

பதில்


பழமைவாத சுவிசேஷ கிறிஸ்தவத்தின் பெரும்பகுதி வேதாகமத்தின் பேசப்பட்ட சொற்கள் முழுமையாக தேவ ஆவியினால் அருளப்பட்டது என்று அழைக்கப்படுகிறது, அதாவது வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் "சுவாசிக்கப்பட்டது" (2 தீமோத்தேயு 3:16). வேதாகம விமர்சகர்கள் 1 கொரிந்தியர் 7:12 வது வசனமானது தேவ ஆவியினால் அருளப்பட்டதல்ல, மாறாக பவுலின் சொந்த கருத்து என்று கூறினால், தெய்வீக எழுத்தாளரின் கட்டளை அல்ல, மனித எழுத்தாளரின் கருத்து என்று வேறு எந்தப் பகுதிகளை அவர்கள் கூற முடியும்? இந்த பிரச்சினை வேதாகம அதிகாரத்தின் இருதயத்தை தாக்குகிறது.

மிகவும் சீர்கேடு நிறைந்த நகரமான கொரிந்துவில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் குழுவிற்கு பவுல் இந்த கடிதத்தை எழுதினார். அந்த சீர்கேட்டின் ஒரு பகுதி, 1,000-க்கும் மேற்பட்ட கோவில் விபச்சாரிகள் வசிக்கும் அப்ரோடைட் கோவில் இருந்தது. இந்த அமைப்பில்தான் பவுல் கொரிந்து பட்டணத்தில் சபையை நிறுவினார். உண்மையில், சபையில் பலர் ஒழுக்கமற்ற கொரிந்திய வாழ்க்கை முறையிலிருந்து வெளியே வந்தவர்கள். கொரிந்து சபையானது முன்னாள் வேசிமார்க்கத்தார்கள், விக்கிரகாராதனைக்காரர்கள், விபசாரக்காரர்கள், சுயபுணர்ச்சிக்காரர்கள், ஆண்புணர்ச்சிக்காரர்கள், திருடர்கள், பொருளாசைக்காரர்கள், வெறியர்கள், உதாசினர்கள், மற்றும் கொள்ளைக்காரர்கள் ஆகியோர்களால் ஆனது (1 கொரிந்தியர் 6:9-11).

பவுல் தனது கடிதத்தின் 7-வது அதிகாரத்திற்கு வரும்போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான பாலியல் உறவுகள் குறித்து சபையில் எழுந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கிறார். கொரிந்தில் உள்ள சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் விவாகம்பண்ணாமல் இருப்பது நல்லது என்று கொரிந்தியர்கள் நினைத்தனர். விவாகம்பண்ணாமல் இருத்தல் ஒரு நல்ல விஷயம் என்பதை பவுலும் ஒப்புக்கொள்கிறார், மேலும் அவரைப் போலவே அதிகமான மக்கள் விவாகம்பண்ணாமல் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறுகிறார். பவுல் திருமணத்தை குறை கூறவில்லை. விவாகம்பண்ணாமல் தனிமையாக இருப்பதினால் ஊழியத்திற்கு அளிக்கும் வெளிப்படையான நன்மைகளை அவர் வெறுமனே குறிப்பிடுகிறார். இருப்பினும், பவுல் விவாகம்பண்ணாமல் தனிமையில் இருப்பது தேவனின் ஈவு என்று குறிப்பிடுகிறார், இந்த ஈவு அனைவருக்கும் இல்லை (வசனம் 7). தற்போது திருமணமானவர்களுக்கு, பவுல் அவர்களை அப்படியே இருக்கச் சொல்கிறார், மேலும் வசனம் 10 இல் பவுல், "நானல்ல, கர்த்தரே" என்று கூறுகிறார். இதன் பொருள் பவுல் கொரிந்தியர்களுடன் இயேசுவின் நேரடி கட்டளையுடன் தொடர்புபடுத்திக் கூறுகிறார். இந்த கட்டளை நற்செய்தி நூல்களில் இயேசுவின் போதனையிலிருந்து வருகிறது, குறிப்பாக மத்தேயு 5:32.

இறுதியாக, வசனம் 12 இல், பவுல் "கலப்பு திருமணங்கள்"—ஒரு கிறிஸ்தவர் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத அவிசுவாசிக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் குறித்து உரையாற்றுகிறார். நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் அவிசுவாச வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்ய ஆசைப்படலாம், அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களை தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் பவுல் விசுவாசமுள்ளவர்களை அவர்களது அவிசுவாசியான துணைகளுடன் இருக்கும்படி கூறுகிறார், அந்த கட்டளை அவரிடமிருந்து வருகிறது, இயேசுவிலிருந்து அல்ல. ஆனால் பவுல் தனது சொந்த கருத்தை இங்கு வழங்கவில்லை. அவர் கூறுவது என்னவென்றால், இயேசு தனது பூமிக்குரிய ஊழியத்தின் போது இந்தப் பிரச்சினையை நேரடியாக உரையாற்றவில்லை. ஒரு விசுவாசியை மணந்த ஒரு வாழ்க்கைத் துணைவரின் சூழ்நிலையை நிவர்த்தி செய்யும் இயேசுவின் நேரடி போதனை எதுவும் சுவிசேஷப் புத்தகங்களில் இல்லை. இயேசு விவாகரத்துக்கான ஒரு நியாயமான காரணத்தை மட்டுமே கூறினார் (மத்தேயு 5:32; 19:19), ஆனால் அது ஒரு விசுவாசி ஒரு அவிசுவாசியை திருமணம் செய்துகொண்டது குறித்து அல்ல.

எனவே சிறந்த பதில் என்னவென்றால், இயேசு குறிப்பிட்டு குறிப்பாக உரையாற்றாத ஒரு பகுதியில் பவுல் புதிய வெளிப்பாட்டை வழங்கினார். அதனால்தான், "கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது" என்று பவுல் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு அல்ல, நான் உங்களுக்கு இந்த கட்டளையை தருகிறேன், இருப்பினும் இது இயேசு கற்பித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதாகும். இயேசுவின் ஊழியம் எவ்வளவு விரிவானது என்றாலும், அவர் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் அவர் பரலோகத்திற்கு ஏறிப்போன பிறகு அவருடைய ஊழியத்தைத் தொடர அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார், அதனால்தான் நம்மிடம் தேவனுடைய-சுவாசமான வேதாகமம் உள்ளது, அதனால் "தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கவேண்டும்." இறுதியில் அந்த வெளிப்பாடுகள் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்த போதிலும், புதிய வெளிப்பாட்டிற்கு பவுல் மிகவும் பொறுப்பானவராக இருந்தார். பவுல் தனது பல நிருபங்களில், "இரகசியங்களை" வெளிப்படுத்துகிறார். சபையானது யூதர்கள் மற்றும் புறஜாதியினரை உள்ளடக்கியது (ரோமர் 11:25) அல்லது சபை எடுத்துக்கொள்ளப்படுதல் (1 கொரிந்தியர் 15:51-52) ஆகிய இரண்டையும் உள்ளடக்கி, இப்போது வெளிப்படுத்தப்பட்ட சில வெளிப்படுத்தப்படாத சத்தியங்களைக் குறிக்கும் ஒரு பிரத்யேகச் சொல் "இரகசியம்". இயேசு விவரிக்காத திருமணம் தொடர்பான கூடுதல் வெளிப்பாட்டை பவுல் நமக்குத் தருகிறார்.

English



முகப்பு பக்கம்

அப்போஸ்தலனாகிய பவுலின் எழுத்துக்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டதா (1 கொரிந்தியர் 7:12 பார்க்கவும்)?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries