settings icon
share icon
கேள்வி

தேவன் இருக்கிறார் என்பதற்கான விவாதம் இருக்கிறதா?

பதில்


தேவன் இருக்கிறார் என்பதற்கான ஒரு உறுதியான வாதம் இருக்கிறதா என்ற கேள்வி வரலாறு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது, விவாதங்களின் இருபுறமும் மிகுந்த திறனுள்ள அறிஞர்கள் உள்ளனர். அண்மைக் காலங்களில், தேவன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிரான வாதங்கள் ஒரு போர்க்குணமிக்க மனநிலையைப் பெற்றுள்ளன, இது தேவனை நம்பத் துணிந்த எவரையும் மாயை மற்றும் பகுத்தறிவற்றது என்று குற்றம் சாட்டுகிறது. தேவனை நம்பும் எவருக்கும் தவறான சிந்தனையை ஏற்படுத்தும் மனநல கோளாறு இருக்க வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தினார். மனநல மருத்துவர் சிக்மண்ட் பிருட் (Sigmund Freud) ஒரு சிருஷ்டிகரான தேவனை நம்பியவர் மாயை மற்றும் "நம்பிக்கை-நிறைவேற்றம்" காரணத்தால் மட்டுமே அந்த நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார், இதை பிருட் நியாயப்படுத்த முடியாத நிலை என்று கருதுகிறார். உண்மை என்ன என்பதை அறிய விரும்பாததற்கு விசுவாசம் சமப்படுத்துகிறது என்று தத்துவஞானி ஃப்ரெட்ரிக் நீட்சே அப்பட்டமாக கூறினார். வரலாற்றில் இருந்து இந்த மூன்று நபர்களின் குரல்கள் (மற்றவர்களுடன் சேர்ந்து) இப்போது ஒரு புதிய தலைமுறை நாத்திகர்களால் மீண்டுமாய் எடுத்துரைக்கப்படுகின்றன, அவர்கள் தேவன் மீதுள்ள நம்பிக்கையானது அறிவுப்பூர்வமற்றது என்று கூறுகின்றனர்.

இது உண்மையா? தேவன் மீது நம்பிக்கை வைப்பது ஒரு பகுத்தறிவு ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையா? தேவன் இருப்பதற்கு ஒரு தர்க்கரீதியான மற்றும் நியாயமான வாதம் இருக்கிறதா? வேதாகமத்தைக் மேற்கோள் காட்டி குறிப்பிடுவதற்கு வெளியே, தேவன் இருப்பதற்கான ஒரு ஆய்வு பழைய மற்றும் புதிய நாத்திகர்களின் நிலைப்பாடுகளை மறுத்து, ஒரு சிருஷ்டிகரை நம்புவதற்கு போதுமான உத்தரவாதத்தை அளிக்க முடியுமா? பதில், ஆம், அது முடியும். மேலும், தேவன் இருப்பதற்கான ஒரு வாதத்தின் செல்லுபடியை நிரூபிப்பதில், நாத்திகத்திற்கான ஆய்வு அறிவுபூர்வமாக பலவீனமாக உள்ளது.

தேவன் இருப்பதற்கான ஒரு வாதம் – ஒன்றுமில்லாதைக் காட்டிலும் இருக்கின்ற ஒன்று

தேவன் இருப்பதற்கான ஒரு வாதத்தை உருவாக்க, நாம் சரியான கேள்விகளைக் கேட்டுத் தொடங்க வேண்டும். நாம் மிக அடிப்படையான மனோதத்துவக் கேள்வியிலிருந்து தொடங்குகிறோம்: "நமக்கு ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று ஏன் இருக்கிறது?" இது இருப்பின் அடிப்படை கேள்வியாகும்—நாம் ஏன் இங்கே இருக்கிறோம்; பூமி ஏன் இங்கே இருக்கிறது; ஒன்றுமில்லாமல் இருப்பதற்குப் பதிலாக பிரபஞ்சம் ஏன் இங்கே இருக்கிறது? இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கும் ஒரு இறையியலாளர், "ஒரு வகையில் மனிதன் தேவனைப் பற்றிய கேள்வியைக் கேட்கவில்லை, அவனது இருப்பு தேவனைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது" என்று கூறுகிறார்.

இந்த கேள்வியை கருத்தில் கொள்ளும்போது, நம்மிடம் ஏன் எதுவும் இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக ஏதோ ஒன்று இருக்கிறது என்பதற்கு நான்கு சாத்தியமான பதில்கள் உள்ளன:

1. யதார்த்தம் ஒரு மாயை.

2. யதார்த்தம் தானாகவே சிருஷ்டிக்கப்பட்டது.

3. யதார்த்தம் தானாகவே உள்ளது (நித்தியம்).

4. யதார்த்தம் என்பது தானாகவே தன்னிலையாய் இருக்கும் ஒன்றால் சிருஷ்டிக்கப்பட்டது.

எனவே, மிகவும் நம்பத்தகுந்த தீர்வு எது? யதார்த்தம் ஒரு மாயையாக இருக்கிறது என்பதிலிருந்து தொடங்குவோம், இதைத்தான் பல கிழக்கத்திய மதங்கள் நம்புகின்றன. இந்த நம்பிக்கையானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே "நான் நினைக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்" என்ற பிரபலமான அறிக்கையை கூறிய தத்துவஞானி ரெனே டெஸ்கார்ட்ஸால் நிராகரிக்கப்பட்டது. டெஸ்கார்ட்ஸ் ஒரு கணிதவியலாளர், அவர் நினைகிறார் எனில், அவர் "இருக்க வேண்டும்" என்று வாதிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "நான் நினைக்கிறேன், எனவே நான் ஒரு மாயை அல்ல." மாயைகளுக்கு மாயையை அனுபவிக்கும் ஒன்று தேவைப்படுகிறது, மேலும், நீங்கள் இருக்கிறதை (உங்கள் இருப்பை) இல்லை என்று நிரூபிக்காத பட்சத்தில் உங்கள் இருப்பை நீங்கள் சந்தேகிக்க முடியாது; இது ஒரு சுய-தோல்வி வாதம் ஆகும். எனவே யதார்த்தம் ஒரு மாயையாக இருப்பதற்கான சாத்தியம் நீக்கப்படுகிறது.

அடுத்தபடியாக யதார்த்தமானது சுயமாக சிருஷ்டிக்கப்பட்டது என்பதாகும். நாம் தத்துவ சாஸ்திரத்தைப் படிக்கும்போது, "பகுப்பாய்வு பொய்யான" அறிக்கைகளைக் கற்கிறோம், அதாவது அவை வரையறையின் படி பொய்யானவை ஆகும். ஏதாவது ஒன்று தனக்கு முன்னால் இருக்க முடியாது என்ற எளிய காரணத்திற்காக யதார்த்தம் சுய-சிருஷ்டிப்பு சாத்தியம் என்கிற வகையான அறிக்கைகளில் ஒன்றாகும். நீங்கள் உங்களை உருவாக்கியிருந்தால், உங்களை உருவாக்குவதற்கு முன்பு நீங்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அது அப்படி இருக்க சாத்தியமில்லை. பரிணாம வளர்ச்சியில் இது சில சமயங்களில் "தன்னிச்சையான தலைமுறை" என்று குறிப்பிடப்படுகிறது அதாவது எதுவுமில்லாமல் வரும் ஒன்று. நீங்கள் ஒன்றிலிருந்து எதையாவது பெற முடியாது என்பதை நியாயமாய் சிந்திக்கிற சில மக்கள் அதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நாத்திகரான டேவிட் ஹியூம் கூட, "காரணம் இல்லாமல் எதுவும் எழலாம் என்கிற ஒரு அபத்தமான கருத்தை நான் வலியுறுத்தவில்லை" என்கிறார். ஆகவே, எதுவுமே ஒன்றுமில்லாமையில் இருந்து வர முடியாது என்பதால், யதார்த்தம் தானாக சிருஷ்டிக்கப்பட்டது என்னும் கருத்தும் நிராகரிக்கப்படுகிறது.

இப்போது நமக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளன அதாவது யதார்த்தம் நித்தியமானது அல்லது நித்தியமாக இருக்கின்ற ஒன்றால் உருவாக்கப்பட்ட நித்தியம்: ஒரு நித்தியமான பிரபஞ்சம் அல்லது ஒரு நித்தியமான சிருஷ்டிகர். 18-ஆம் நூற்றாண்டின் இறையியலாளர் ஜோனாத்தன் எட்வர்ட்ஸ் இந்த குறுக்கு வார்த்தைகளை சுருக்கமாகக் கூறினார்:

• ஏதோ ஒன்று இருக்கிறது.

• ஒன்றுமில்லாமையால் ஒன்றையும் உருவாக்க முடியாது.

• எனவே, ஒரு அவசியமான மற்றும் நித்தியமான "ஒன்று" இருக்கிறது.

நாம் நித்தியமாக இருக்கிற "ஏதோ ஒன்றுக்கு" திரும்பச் செல்ல வேண்டும் என்பதை கவனிக்கவும். தேவனை விசுவாசிக்கும் விசுவாசி நித்தியமான சிருஷ்டிகரை நம்புவதை கேலி செய்யும் நாத்திகர் கூட ஒரு நித்தியமான பிரபஞ்சத்தைத் தழுவிக்கொள்ளக் கூடியவராக இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது; அவர் தேர்வு செய்யக்கூடிய ஒரே வாசல் அது. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், ஆதாரம் எங்கு கொண்டிச் செல்லுகிறது? சான்றானது மனதிற்கு முன் விஷயத்தை அல்லது விஷயத்திற்கு முன் மனதை சுட்டிக்காட்டுகின்றதா?

இன்றுவரை, அனைத்து முக்கிய அறிவியல் மற்றும் தத்துவ சான்றுகள் ஒரு நித்திய பிரபஞ்சத்திலிருந்து மற்றும் ஒரு நித்திய சிருஷ்டிகரை நோக்கி சுட்டிக்காட்டுகின்றன. ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில், நேர்மையான விஞ்ஞானிகள் பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் அந்த ஆரம்பம் எதுவோ அது நித்தியமானது அல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரம்பம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, மேலும் பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்ததானால், பிறகு அதற்கு ஒரு காரணமும் இருந்திருக்கும். பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது என்பது வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதியாகும், 1900-களின் முற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெருவெடிப்பின் கதிர்வீச்சு எதிரொலி, பிரபஞ்சம் விரிவடைகிறது மற்றும் ஒரு தனித்துவமான தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற ஆதாரங்களால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மற்றும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையும் அதே வலியுறுத்துகிறது. அனைத்தும் பிரபஞ்சம் நித்தியமானது அல்ல என்பதை நிரூபிக்கிறது.

மேலும், காரணத்தைச் சுற்றியுள்ள விதிகள் பிரபஞ்சத்திற்கு எதிராகப் பேசுகின்றன, இந்த எளிய உண்மைக்கு நமக்குத் தெரிந்த எல்லாவற்றிற்கும் இறுதி காரணம்: ஒரு விளைவு அதன் காரணத்தை ஒத்திருக்க வேண்டும். இது உண்மையாக இருப்பதால், ஒரு ஆள்தன்மையற்ற, நோக்கமற்ற, அர்த்தமற்ற மற்றும் ஒழுக்கக்கேடான பிரபஞ்சம் தற்செயலாக ஆளுமை நிறைந்த மற்றும் நோக்கம், பொருள் மற்றும் ஒழுக்கத்தில் ஆழ்ந்த உயிரினங்களை (நம்மை) எவ்வாறு உருவாக்கியது என்பதை விளக்க முடியாது. அத்தகைய ஒரு காரணி நிலைப்பாட்டில் இருந்து, இருக்கும் அனைத்தையும் உருவாக்கும் இயற்கை பிரபஞ்சத்தின் கருத்தை முற்றிலும் மறுக்கிறது. எனவே இறுதியில், இந்த நித்திய பிரபஞ்சம் என்கிற கருத்தும் நிராகரிக்கப்படிகிறது.

தத்துவஞானி ஜே. எஸ். மில் (ஒரு கிறிஸ்தவர் அல்ல) என்பவர் நாம் இப்போது எங்கே வந்துள்ளோம் என்பதை சுருக்கமாகச் சொன்னார்: "மனதால் மட்டுமே மனதை உருவாக்க முடியும் என்பது சுய-சான்று." ஒரே ஒரு பகுத்தறிவு மற்றும் நியாயமான முடிவு என்னவென்றால், நித்திய சிருஷ்டிகர் நமக்குத் தெரிந்த யதார்த்தத்திற்குப் பொறுப்பானவர். அல்லது தர்க்கரீதியான அறிக்கைகளின் தொகுப்பில் வைக்க:

• ஏதோ ஒன்று இருக்கிறது.

• ஒன்றுமில்லாமையில் இருந்து நீங்கள் ஒன்றையும் பெறமாட்டீர்கள்.

• எனவே அவசியமான மற்றும் நித்தியமான "ஒன்று" இருக்கிறது.

• நித்தியமான பிரபஞ்சம் மற்றும் நித்தியமான சிருஷ்டிகர் இந்த இரண்டு மட்டுமே தேர்வுகள்.

• விஞ்ஞானமும் தத்துவமும் நித்தியமான பிரபஞ்சம் என்ற கருத்தை நிராகரித்துள்ளன.

• எனவே, ஒரு நித்தியமான சிருஷ்டிகர் இருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இறுதி முடிவுக்கு வந்த முன்னாள் நாத்திகர் லீ ஸ்ட்ரோபெல் இப்படியாக கருத்துரைத்துள்ளார், “அடிப்படையில், நான் ஒரு நாத்திகராக இருப்பதற்கு, எதையும் இல்லாமையால் உருவாக்க முடியாது என்று நான் நம்ப வேண்டும்; உயிரற்றது உயிரை உருவாக்குகிறது; சீரற்ற தன்மை நேர்த்தியை உருவாக்குகிறது; குழப்பம் தகவல்களை உருவாக்குகிறது; மயக்கநிலை நினைவை உருவாக்குகிறது; மற்றும் பகுத்தறிவற்ற நிலை பகுத்தறிவு காரணத்தை உருவாக்குகிறது. விசுவாசத்தின் அந்த பாய்ச்சல்கள் என்னால் எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பெரிதாக இருந்தன, குறிப்பாக தேவன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வின் வெளிச்சத்தில்... வேறு வார்த்தைகளில் கூறுவதானால், என் மதிப்பீட்டில் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம் நாத்திக உலகக் கண்ணோட்டத்தை விட மிகச் சிறந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளது.

தேவன் இருப்பதற்கான ஒரு வாதம் - சிருஷ்டிகரை அறிதல்

ஆனால் நாம் சமாளிக்க வேண்டிய அடுத்த கேள்வி இதுதான்: ஒரு நித்தியமான சிருஷ்டிகர் இருந்தால் (அவர் இருக்கிறார் என்பதை நாங்கள் காண்பித்துள்ளோம்), அவர் எப்படிப்பட்ட சிருஷ்டிகர்? அவர் சிருஷ்டித்தவைகளிலிருந்து அவரைப் பற்றிய விஷயங்களை நாம் ஊகிக்க முடியுமா? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காரணத்தை அதன் விளைவுகளால் நாம் புரிந்து கொள்ள முடியுமா? இதற்கான பதில் ஆம், நாம் புரிந்து கொள்ள முடியும், பின்வரும் குணாதிசயங்களைக் கொண்டு நம்மால் புரிந்துகொள்ள முடியும்:

• அவர் இயற்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் (அவர் நேரத்தையும் இடத்தையும் உருவாக்கியவர் என்னும் நிலையில்).

• அவர் (மிகவும்) சக்திவாய்ந்தவராக இருக்க வேண்டும்.

• அவர் நித்தியமானவராக (சுய-இருப்பு உள்ளவராக) இருக்க வேண்டும்.

• அவர் எங்கும் நிறைந்தவராக இருக்க வேண்டும் (அவர் இடத்தின் விஸ்தாரத்தை உருவாக்கினார் மற்றும் அதனுடன் அவர் மட்டுப்படுத்தப் படவில்லை).

• அவர் காலவரையறைக்கு உட்படாதவராகவும் மாறாதவராகவும் இருக்க வேண்டும் (அவரே காலத்தை உருவாக்கினார்).

• அவர் காலத்தையும் இயற்கையையும் மீறியவர் ஆதலால் அவர் சரீரப்பிரகாரமான உடலற்றவராக இருக்க வேண்டும்.

• அவர் ஆள்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும் (ஆளுமை இல்லாதவர் ஆளுமையை உருவாக்க முடியாது).

• அவர் எல்லையற்றவரும் ஒன்றானவராகவும் இருக்க வேண்டும், ஏனெனில் இரண்டு எல்லையற்றவர்களாக இருக்க முடியாது.

• இயற்கையில் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை இருப்பதால் அவர் பன்முகத்தன்மை உடையவராக இருக்க வேண்டும்.

• அவர் (உச்சநிலையில்) புத்திசாலியாக இருக்க வேண்டும். அறிவாற்றல் இருப்பது மட்டுமே அறிவாற்றல் இருப்பை உருவாக்க முடியும்.

• அவர் எல்லாவற்றையும் வேண்டுமென்றே உருவாக்கியதால் அவர் ஒரு நோக்கமுள்ளவராக இருக்க வேண்டும்.

• அவர் ஒழுக்கமுள்ளவராக இருக்க வேண்டும் (கொடுப்பவர் இல்லாமல் எந்த தார்மீக சட்டமும் இருக்க முடியாது).

• அவர் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் (அல்லது எந்த தார்மீக சட்டங்களும் கொடுக்கப்பட்டிருக்க முடியாது).

இந்த காரியங்கள் உண்மையாக இருப்பதால், உலகில் எந்த மதமாவது அத்தகைய ஒரு சிருஷ்டிகரை விவரிக்கிறதா என்று நாம் இப்போது கேட்கலாம். இதற்கான பதில் ஆம்: வேதாகமத்தின் தேவன் இந்த சுயவிவரத்திற்கு சரியாக பொருந்துகிறார். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர் (ஆதியாகமம் 1:1), சக்திவாய்ந்தவர் (எரேமியா 32:17), நித்தியமானவர் (சங்கீதம் 90:2), எங்கும் நிறைந்தவர் (சங்கீதம் 139:7), காலமற்றவர்/மாறாதவர் (மல்கியா 3:6), பொருள்/உடல் இல்லாதவர் (யோவான் 5:24) ), ஆள்தன்மையுள்ளவர் (ஆதியாகமம் 3:9), அவசியமானவர் (கொலோசெயர் 1:17), எல்லையற்றவர்/ஒன்றானவர் (எரேமியா 23:24, உபாகமம் 6:4), ஒற்றுமையில் வேற்றுமையுள்ளவர் (மத்தேயு 28:19), மகா புத்திசாலி (சங்கீதம் 147:4-5), நோக்கமுள்ளவர் (எரேமியா 29:11), தார்மீக தன்மையுள்ளவர் (தானியேல் 9:14) மற்றும் அக்கறையுள்ளவர் (1 பேதுரு 5:6-7).

தேவன் இருப்பதற்கான ஒரு வாதம் - நாத்திகத்தின் குறைபாடுகள்

தேவனுடைய இருப்பு பற்றிய ஒரு கடைசி விஷயம் என்னவென்றால், நாத்திகரின் நிலைப்பாடு எவ்வளவு நியாயமானது என்பதுதான். நாத்திகர் விசுவாசியின் நிலை சரியானது இல்லை என்று வலியுறுத்துவதால், அந்த கேள்வியைத் திருப்பி அவரிடமே கேட்பதுதான் நியாயமானது. முதலில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நாத்திகர் கூறும் பொதுவான கூற்று—"தேவன் இல்லை" என்பதாகும், அதாவது "நாத்திகர்" என்பது ஒரு தத்துவ நிலைப்பாட்டில் இருந்து தக்கவைக்க முடியாத நிலை ஆகும். சட்ட அறிஞரும் தத்துவஞானியுமான மோர்ட்டிமர் அட்லர் சொல்வது போல், "ஒரு உறுதியான இருத்தலியல் முன்மொழிவை நிரூபிக்க முடியும், ஆனால் எதிர்மறையான இருத்தலியல் முன்மொழிவு அதாவது ஏதாவது ஒன்று இருப்பதை மறுக்கும் ஒன்றை நிரூபிக்க முடியாது." உதாரணமாக, ஒரு சிவப்பு நிறக் கழுகு இருப்பதாக யாராவது கூறலாம் மற்றும் சிவப்பு கழுகுகள் இல்லை என்று வேறு யாராவது கூறலாம். முந்தைய கூற்றை நிரூபிக்க ஒரே வழி ஒரு சிவப்பு கழுகை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் பிந்தையது முழு பிரபஞ்சத்தையும் சீர் செய்ய வேண்டும் மற்றும் உண்மையில் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஒரு சிவப்பு கழுகை எங்காவது மற்றும் சில சமயங்களில் தவறவிடவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதனால்தான் அறிவார்ந்த நேர்மையான நாத்திகர்கள் தேவன் இல்லை என்பதை நிரூபிக்க முடியாது என்று ஒப்புக்கொள்வார்கள்.

அடுத்து, உண்மை கூற்றுகளின் தீவிரத்தன்மையையும், சில முடிவுகளுக்குத் தேவையான ஆதாரங்களின் அளவையும் சுற்றியுள்ள சிக்கலைப் புரிந்துகொள்வதும் அவசியம். உதாரணமாக, யாராவது இரண்டு கன்டெய்னர்கள் எலுமிச்சைப் பழத்தை உங்கள் முன்பாக வைத்து, மற்றொன்றை விட புளிப்பாக இருக்கலாம் என்று சொன்னால், அதிக புளிப்புள்ள பானத்தைப் பெறுவதால் ஏற்படும் விளைவுகள் அவ்வளவு தீவிரமாக இருக்காது, உங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய உங்களுக்கு அதிக அளவு சான்றுகள் தேவையில்லை. எவ்வாறாயினும், ஒருவர் ஒரு கோப்பையில் இனிப்பானைச் சேர்த்தார், ஆனால் மற்றொன்றில் அவர் எலி விஷத்தை சேர்த்திருந்தால், நீங்கள் தேர்வு செய்வதற்கு முன்பு உங்களிடம் நிறைய சான்றுகள் இருக்க வேண்டும்.

நாத்திகத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் இடையில் ஒரு நபர் தீர்மானிக்கும் போது இந்த இடத்தில்தான் அவர் இருக்கிறார். நாத்திகத்தின் நம்பிக்கை சரிசெய்ய முடியாத மற்றும் நித்திய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நாத்திகர்கள் தங்களது நிலைப்பாட்டை ஆதரிக்க அவர்கள் கனமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சான்றுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று தோன்றுகிறது, ஆனால் அது அவர்களால் முடியாது. நாத்திகம் அது செய்யும் குற்றச்சாட்டின் தீவிரத்தன்மைக்கான ஆதாரத்திற்கான சோதனையை வெறுமனே சந்திக்க முடியாது. மாறாக, நாத்திகரும், அவர்களது நிலைப்பாட்டை அவர்களுக்கு உறுதியளிப்பவர்களும் விரல்களைக் கடந்து நித்தியத்திற்குள் சறுக்கி, நித்தியம் உண்மையில் உள்ளது என்ற விரும்பத்தகாத உண்மையை அவர்கள் காணவில்லை என்று நம்புகிறார்கள். மோர்ட்டிமர் அட்லர் சொல்வது போல், "உயிர் மற்றும் அதன் செயலுக்கான அதிக விளைவுகள் வேறு எந்த அடிப்படை கேள்வியையும் விட தேவன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துதல் அல்லது மறுத்தலில் அடங்கியுள்ளது."

தேவன் இருப்பதற்கான ஒரு வாதம் – முடிவுரை

எனவே தேவன்மேல் நம்பிக்கை கொண்டுள்ளது அறிவார்ந்த உத்தரவாதத்தைக் கொண்டிருக்கிறதா? தேவன் இருப்பதற்கு ஒரு பகுத்தறிவு, தர்க்கரீதியான மற்றும் நியாயமான வாதம் இருக்கிறதா? முற்றிலுமாக. பிருட் போன்ற நாத்திகர்கள் தேவனை நம்புபவர்களுக்கு ஒரு ஆசை-நிறைவேறும் ஆசை இருப்பதாகக் கூறினாலும், ஒருவேளை பிருட் மற்றும் அவரது சீடர்கள் உண்மையில் ஆசையை நிறைவேற்றுவதால் பாதிக்கப்படுகின்றனர்: தேவன் இல்லை என்ற நம்பிக்கையும் விருப்பமும் பொறுப்பு இல்லாதது, எனவே நியாயத்தீர்ப்பும் இல்லை. ஆனால் பிருடை மறுப்பது வேதாகமத்தின் தேவன், அவர் இருப்பதை உறுதிப்படுத்துகிறார் மற்றும் அவர் இருக்கிறார் என்ற உண்மையை தங்களுக்குள் அறிந்தவர்களுக்கு ஒரு நியாயதீர்ப்பு வருகிறது ஆனால் அந்த உண்மையை அடக்குகிறார்கள் (ரோமர் 1:20). ஆனால் ஒரு சிருஷ்டிகர் உண்மையில் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களுக்கு பதிலளிப்பவர்களுக்கு, அவர் தனது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பின் வழியை வழங்குகிறார்: "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:12-13).

English



முகப்பு பக்கம்

தேவன் இருக்கிறார் என்பதற்கான விவாதம் இருக்கிறதா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries