கேள்வி
உடன்படிக்கைப் பெட்டி என்றால் என்ன?
பதில்
தேவன் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களுடன் ஒரு உடன்படிக்கையை (நிபந்தனை உடன்படிக்கை) செய்தார். அவர்கள் அவருக்கும் அவருடைய நியாயப்பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிந்தால் அவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் தலைமுறை தலைமுறையாக நன்மை செய்வதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணினார்; ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமல் போனால் நிராசை, தண்டனை மற்றும் சிதறடித்தல் குறித்து அவர் எப்போதும் அவர்களை எச்சரித்தார். அவருடைய உடன்படிக்கையின் அடையாளமாக, அவர் இஸ்ரவேலர்களை தமது சொந்த வடிவமைப்பின்படியே ஒரு பெட்டியை உருவாக்கும்படிச் செய்தார், அதில் பத்து கட்டளைகள் அடங்கிய கல் பலகைகளை வைக்க வேண்டும். இது உடன்படிக்கைப் “பெட்டி" என்று அழைக்கப்பட்டது மற்றும் பொன்னால் மூடப்பட்ட சீத்திம் மரத்தால் செய்யப்பட்டது. பெட்டி வனாந்தரத்தில் உள்ள ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும்படியாக அமைக்கப்பட்டது, பின்னாட்களில் தேவாலயம் எருசலேமில் கட்டப்பட்டபோதும், இந்த பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும்படியாக அமைக்கப்பட்டது. இந்த சிறிய பெட்டி, உடன்படிக்கைப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது.
உடன்படிக்கைப் பெட்டியின் உண்மையான முக்கியத்துவம், "கிருபாசனம்" என்று அழைக்கப்படும் பெட்டியின் மூடியை உள்ளடக்கியதாக இருந்தது. ‘கிருபாசனம்' என்ற வார்த்தை எபிரேய வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது "மூடுதல், சமாதானப்படுத்துதல், கோபத்தை தணித்தல், சுத்தப்படுத்துதல், ரத்து செய்தல் அல்லது பாவப்பரிகாரம் செய்தல்" என்பதாகும். இங்குதான் பிரதான ஆசாரியர், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே (லேவியராகமம் 16), உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, அவருடைய பாவங்களுக்காவும் இஸ்ரவேலர்களின் பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்தார். கடந்த கால பாவங்களுக்காக தேவனுடைய சினத்தையும் கோபத்தையும் தணிக்க ஆசாரியன் பலியிடப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை கிருபாசனத்தின் மீது தெளிப்பான். உலகில் இந்த பாவப்பரிகாரம் நடக்கக்கூடிய ஒரே இடம் இதுதான்.
உடன்படிக்கைப் பெட்டியின் மீதுள்ள கிருபாசனம் அனைத்து பாவங்களுக்குமான இறுதியான பலியின் அடையாளமாக இருந்தது—பாவங்களை மன்னிப்பதற்காக கிறிஸ்துவின் இரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு முன்னாள் பரிசேயரும், பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்தவருமானவர், ரோமர் 3:24-25ல் கிறிஸ்து பாவத்தை மூடுபவராக இருப்பதைப் பற்றி எழுதியபோது இந்தக் கருத்தை நன்கு அறிந்திருந்தார்: “...கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்." பழைய ஏற்பாட்டில் பாவ நிவர்த்திக்கு என்று ஒரே ஒரு இடம் இருந்தது போல—அதாவது உடன்படிக்கைப் பெட்டியின் கிருபாசனம்—புதிய ஏற்பாட்டிலும் தற்போதைய காலத்திலும்—இயேசு கிறிஸ்துவின் சிலுவை மட்டுமே ஒரே ஒரு இடமாக உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம் இனி உடன்படிக்கைப் பெட்டியை நோக்கிப் பார்க்காமல், கர்த்தராகிய இயேசுவையே நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாகவும் நிவர்த்தியாகவும் பார்க்கிறோம்.
English
உடன்படிக்கைப் பெட்டி என்றால் என்ன?