கேள்வி
இயேசு கிறிஸ்துவின் பரமேறிச் செல்லுதலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?
பதில்
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த இயேசு பிறகு, அவர் "அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்" (அப். 1:3) அதாவது கல்லறைக்கு அருகில் இருந்த பெண்களுக்கு (மத்தேயு 28:9-10), அவருடைய சீஷர்களுக்கு (லூக்கா 24:36-43), மற்றும் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் (1 கொரிந்தியர் 15:6) என அநேகருக்கு தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிந்தைய நாட்களில், இயேசு தனது சீஷர்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்பித்தார் (அப். 1:3).
உயிர்த்தெழுந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு அருகிலுள்ள ஒலிவ மலைக்குச் சென்றனர். அங்கு, சீஷர்கள் விரைவில் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள் என்று இயேசு வாக்குறுதி அளித்தார், மேலும் ஆவியானவர் வரும் வரை எருசலேமில் இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் இயேசு அவர்களை ஆசீர்வதித்தார், அவர் ஆசி வழங்கியபோது, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க அவர் பரலோகத்திற்கு ஏறிப்போகத் தொடங்கினார். லூக்கா 24:50-51 மற்றும் அப்போஸ்தலர் 1:9-11 ஆகிய வேதப்பகுதிகளில் இயேசுவினுடைய பரமேறுதலின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இயேசுவின் பரமேறுதல் என்பது பரலோகத்திற்கு சரீரத்தில் ஏறிப்போவது என்பது வேதத்திலிருந்து மிகத்தெளிவாக விளங்குகிறது. அவர் படிப்படியாக மற்றும் வெளிப்படையாக தரையில் இருந்து உயரே எழும்பி பரலோகத்திற்கு ஏறிப்போனார், பலரும் அதை மிகவும் ஆர்வமாக பார்த்தனர். சீஷர்கள் இயேசுவின் இறுதிக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு மேகம் அவரை அவர்களின் பார்வையில் இருந்து மறைத்தது, அப்போது இரண்டு தேவதூதர்கள் தோன்றி, “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்" (அப்போஸ்தலர் 1:11).
இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல் பல காரணங்களுக்காக மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது:
1) அது அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் முடிவைக் குறிக்கிறது. பிதாவாகிய தேவன் தனது குமாரனை பெத்லகேமில் அன்புடன் உலகிற்கு அனுப்பினார், இப்போது குமாரன் பிதாவிடம் திரும்பிச் செல்கிறார். அவரது மனித தன்மையின் வரம்பின் காலம் முடிவடைந்தது.
2) அது அவருடைய பூமிக்குரிய கிரியையில் வெற்றியைக் குறிக்கிறது. அவர் செய்ய வந்த அனைத்தையும் அவர் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
3) இது அவரது பரலோக மகிமைக்கு மீண்டுமாய் திரும்புவதைக் குறிக்கிறது. இயேசுவின் மகிமை அவர் பூமியில் இருந்த காலத்தில் மறைக்கப்பட்டது, ஒரு சிறிய விதிவிலக்காக மறுரூப மலையில் மட்டும் அவர் மகிமையில் தோன்றும் காட்சி மூன்று சீஷர்களால் காணப்பட்டது (மத்தேயு 17:1-9).
4) இது பிதாவாகிய தேவனால் உயர்த்தப்படும் அவரது மேலான மேன்மையை அடையாளப்படுத்துகிறது (எபேசியர் 1:20-23). பிதா பிரியமாய் இருந்தவர் (மத்தேயு 17:5) இப்போது கௌரவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு எல்லா நாமத்திற்கும் மேலாக ஒரு நாமம் கொடுக்கப்பட்டது (பிலிப்பியர் 2:9).
5) நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தும்படிக்கு அது அவரை அனுமதித்தது (யோவான் 14:2).
6) பிரதான ஆசாரியராக (எபிரெயர் 4:14-16) மற்றும் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக (எபிரெயர் 9:15) அவரது புதிய கிரியையின் தொடக்கத்தை அது சுட்டிக்காட்டுகிறது.
7) அது அவர் மீண்டுமாய் திரும்பி வருவதற்கான மாதிரியை அமைத்தது. இயேசு ராஜ்யத்தை அமைக்க மீண்டுமாய் வரும்போது, அவர் சென்றபடியே மீண்டுமாய் திரும்புவார் அதாவது மெய்யாகவே சரீரத்தில், மற்றும் மேகங்களில் தோன்றி வருவார் (அப். 1:11; தானியேல் 7:13-14; மத்தேயு 24:30; வெளிப்படுத்துதல் 1:7).
தற்போது, கர்த்தராகிய இயேசு பரலோகத்தில் இருக்கிறார். வேதம் அடிக்கடி அவரைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பதாக சித்தரிக்கிறது, அது அவருக்குள்ள கனம் மற்றும் அதிகாரத்தைக் குறிக்கிறது (சங்கீதம் 110:1; எபேசியர் 1:20; எபிரேயர் 8:1). கிறிஸ்து திருச்சபையில் தலையாக இருக்கிறார் (கொலோசெயர் 1:18), ஆவிக்குரிய வரங்களை வழங்குபவராக இருக்கிறார் (எபேசியர் 4:7-8), மற்றும் அனைத்தையும் நிரப்புபவர் (எபேசியர் 4:9-10). கிறிஸ்துவின் பரமேறுதல் இயேசுவை அவரது பூமிக்குரிய ஊழியத்திலிருந்து அவருடைய பரலோக ஊழியத்திற்கு மாற்றிய நிகழ்வு ஆகும்.
English
இயேசு கிறிஸ்துவின் பரமேறிச் செல்லுதலின் பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?