settings icon
share icon
கேள்வி

தேவனுடைய பண்புகள் யாவை? தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?

பதில்


தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம், தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்றும் அவர் எப்படிப்பட்டவராக இல்லை என்றும் கூறுகிறது. வேதாகமத்தின் அதிகாரத்திற்குட்பட்ட நிலையில் அல்லாமல் தேவனுடைய பண்புகளை விளக்க முயற்சிக்கும் அனைத்து முயற்சிகளும் வெறுமனே ஒரு அபிப்ராயம் அல்லது கருத்து மட்டுமே ஆகும். இது பெரும்பாலும் சரியானதாக இருப்பதில்லை, குறிப்பாக தேவனைக்குறித்து அறிந்துகொள்கிற விஷயத்தில் இந்த அபிப்ராயங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவுகின்றன (யோபு 42:7). தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்பது முக்கியமான காரியம் என்று சொல்வோமானால், அதிலே மாபெரும் குறையரை இருக்கிறது. அப்படி அந்த முயற்சியில் நாம் தோற்றுபோய்விட்டால், அது நம்மை தேவனல்லாதவைகளை பின்பற்றி போய் சோரம்போவதற்கும் தேவனுடைய சித்தத்திற்கு எதிராக செயல்படுவதற்கும் வழிவகுத்துவிடும் (யாத்திராகமம் 20:3-5).

தேவன் தம்மைக்குறித்து எந்தெந்த காரியங்களை வெளிப்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொண்டாரோ அந்த காரியங்களை மட்டுமே அறிந்துகொள்ள முடியும். தேவனுடைய பண்புகளில் அல்லது குணங்களில் ஒன்று "ஒளி", அர்த்தம் அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்தி அவரைக்குறித்ததான தகவலை அறிவிக்கிறார் (ஏசாயா 60:19; யாக்கோபு 1:17). தேவன் தம்மைக் குறித்த அறிவை வெளிப்படுத்தினதை நாம் அலட்சியப்படுத்தி புறக்கணிக்க கூடாது (எபிரெயர் 4:1). சிருஷ்டி, வேதாகமம், மற்றும் மாம்சமாகிய வார்த்தை (இயேசு கிறிஸ்து) இவை மூன்றும் தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள உதவி செய்யும்.

முதலாவதாக தேவன் நமது சிருஷ்டிகர் மற்றும் நாம் அவருடைய சிருஷ்டிப்பில் ஒரு அங்கம் என்பதிலும் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் போன்ற காரியங்களை புரிந்துகொள்வதில் தொடங்குவோம் (ஆதியாகமம் 1:1; சங்கீதம் 24:1). தேவன் சிருஷ்டித்த எல்லா சிருஷ்டிகளிலும் மனிதனை மேலானவனாகவும் சகலத்தையும் ஆண்டுகொள்ளும்படியாகவும் அவனை வைத்தார் (ஆதியாகமம் 1:26-28). மனிதனுடைய வீழ்ச்சியினாலே சிருஷ்டியானது கேடுத்துப்போட பட்டாலும், தேவனுடைய கிரியைக்குறித்த ஒரு பார்வையை இது கொடுக்கிறது (ஆதியாகமம் 3:17-18; ரோமர் 1:19-20). சிருஷ்டிப்பின் இந்த பரந்தநிலை, அதிலுள்ள எண்ணற்ற சிக்கல்கள், அதன் அழகு, மற்றும் அதின் ஒழுங்குகள் ஆகியவற்றை நிதானித்துப்பார்க்கும்போது, தேவன் ஒரு திகிலை கிளப்பி அச்சமூட்டுகிற நிலையிலுள்ள ஒரு அற்புதமானவர் என்கிற உணர்வு நமக்கு உண்டாயிருக்கும்.

தேவனுடைய சில பெயர்களை நாம் கவனித்துப் பார்ப்போமானால் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிற தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்னும் ஆய்வுக்கு உதவியாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை கவனியுங்கள்:

ஏலோஹிம் – வலிமை வாய்ந்தவர், தெய்வீகமானவர் (ஆதியாகமம் 1:1)
அடோனாய் – கர்த்தர், எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையேயுள்ள உறவை காண்பிக்கிறது (யாத்திராகமம் 4:10, 13)
ஏல் ஏலியோன் - உன்னதமானவர், மகா வலிமை வாய்ந்தவர் (ஆதியாகமம் 14:20)
ஏல் ரோயீ – என்னை காண்கிற வலிமை வாய்ந்தவர் (ஆதியாகமம் 16:13)
ஏல் ஷடாய் – சர்வவல்லமையுள்ள தேவன் (ஆதியாகமம் 17:1)
ஏல் ஓலாம் - அநாதி தேவன் (ஏசா 40:28)
யாவே – கர்த்தர் “இருக்கிறேன்”, அர்த்தம் நித்தியகாலமாக தாமாகவே ஜீவித்துக்கொண்டிருக்கிற நித்திய தேவன் (யாத் 3:13, 14).

தேவன் நித்தியமானவர், அர்த்தம் அவருக்கு ஆரம்பம் இல்லை மற்றும் அவர் ஜீவித்திருக்கிற நிலைக்கு முடிவும் வராது. அவர் சாவாமையுள்ளவர் மற்றும் எல்லையற்றவர் (உபாகமம் 33:27; சங்கீதம் 90:2; 1 தீமோத்தேயு 1:17). தேவன் மாறாதவர், அர்த்தம் அவர் மாற்றமே இல்லாதவர்; அதாவது அவர் முற்றிலும் நம்பகத்தன்மையுள்ள மற்றும் நம்பகமானவர் (மல்கியா 3:6; எண்ணாகமம் 23:19; சங்கீதம் 102:26-27). தேவன் ஒப்பில்லாதவர்; செயலிலும் தன்மையிலும் அவரைப்போல ஒருவரும் இல்லை. அவர் இணையற்றவர் மற்றும் பரிபூரணமானவர் (2 சாமுவேல் 7:22; சங்கீதம் 86:8; ஏசாயா 40:25; மத்தேயு 5:48). தேவன் புரிந்துகொள்ள முடியாதவர், ஆழ்ந்து அறியமுடியாதவர், ஆராய்ந்து அறிய முடியாதவர் மற்றும் அவரை முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாதபடி அதற்கும் அப்பாற்பட்டவர் (ஏசாயா 40:28; சங்கீதம் 145:3; ரோமர் 11:33, 34).

தேவன் நீதியுள்ளவர்; மனிதர்களை கண்டு அவர்களில் சிலரை பிரியப்படுத்த ஒருவருக்கொருவர் பாரபட்சம் காண்பிக்கிறவர் அல்ல (உபாகமம் 32:4; சங்கீதம் 18:30). தேவன் சர்வவல்லமையுள்ளவர்; அவர் சர்வ வல்லவர், அவர் விரும்புகிற எல்லாவற்றையும் செய்ய வல்லமையுள்ளவர், ஆனாலும் தனது சுபாவ தன்மை மற்றும் குணாதிசயத்திற்கு எதிராக அவர் எதுவும் செய்வதில்லை (வெளிப்படுத்துதல் 19:6; எரேமியா 32:17, 27). தேவன் சர்வ வியாபி, அர்த்தம் அவர் எங்கும் இருக்கிறார். அதற்காக எங்குமுள்ள எல்லாமே தேவன் என்கிற அர்த்தமல்ல (சங்கீதம் 139:7-13, எரேமியா 23:23). தேவன் சர்வஞானி, அர்த்தம் இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் உள்ள அனைத்து காரியங்களையும் அறிந்தவர், நம்முடைய சிந்தைகளையும் ஒவ்வொரு தருணத்தின் அசைவையும் அறிந்தவர் (சங்கீதம் 139:1-5; நீதிமொழிகள் 5:21).

தேவன் ஒருவரே; அவரையன்று வேறு தேவனல்ல என்பதுமட்டுமல்ல, அவர் ஒருவரே சகலவற்றிற்கும் போதுமானவரும் பாத்திரருமாய் இருக்கிறார். தேவன் ஒருவரே நமது ஆராதனை மற்றும் தியானத்திற்கு பாத்திரராய் இருக்கிறார் (உபாகமம் 6:4). தேவன் நீதியுள்ளவர், அர்த்தம் தேவன் அநீதியான காரியங்களை விரும்பாதவர் மற்றும் செய்யாதவர். அவர் நீதியும் நியாயமும் உள்ள தேவனாக இருக்கிறபடியினால், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு வேண்டி, இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்தார், தேவனுடைய கோபாக்கினை அவர்மேல் வந்தது (யாத்திராகமம் 9:27; மத்தேயு 27:45-46; ரோமர் 3:21-26).

தேவன் பரமாதிகாரி, அர்த்தம் அவர் உன்னதமானவர். அவர் செய்கின்ற காரியங்களை ஒட்டுமொத்த சிருஷ்டியும் ஒருமித்து வந்தாலும் தடைசெய்யவோ இடையூராகவோ இருக்க முடியாது (சங்கீதம் 93:1; 95:3; எரேமியா 23:20). தேவன் ஆவியாய் இருக்கிறார், அர்த்தம் அவரை நாம் காணமுடியாது (யோவான் 1:18; 4:24). தேவன் திரித்துவமுள்ளவர். திருத்துவம் என்றால் மூன்றில் ஒன்றானவர் என்பதாகும். அதே சமயம் தன்மையில் மூவரும் சமமானவர்கள். மகிமையிலும் வல்லமையிலும் சமமானவர்கள். தேவன் உண்மையுள்ளவர், அவர் பொய்சொல்கிறவரும் அல்ல அவர் கறைபட்டவரும் அல்ல (சங்கீதம் 117:2; 1சாமு 15:29).

தேவன் பரிசுத்தர், எல்லாவித தார்மீக அசுத்தங்களுக்கும் நீங்கலானவரும் அவைகளை வெறுக்கிரவருமாய் இருக்கிறார். அவர் அநீதீக்கு விலகுகிறவரும் அதை வெறுக்கிறவருமாய் மட்டுமல்லாமல் அவர் தீமையைக்கண்டு கோபம் கொள்கிற தேவனாகவும் இருக்கிறார். தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார் என வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 6:3; ஆபகூக் 1:13; யாத்திராகமம் 3:2, 4-5; எபிரெயர் 12:29). தேவன் கிருபை உள்ளவர், அவரது கிருபையானது நற்குணம், தயவு, கருணை மற்றும் அன்பு போன்றவைகளோடு ஒருங்கிணைந்தது ஆகும். ஆவர் கிருபை உள்ளவராக இல்லை என்றால், நாம் அவருடைய சமுகத்தில் ஒருநாளும் பிரவேசிக்க கூடாதபடி நம்மை அவரை விட்டு விலக்கியிருக்கும் அவரது பரிசுத்தம். ஆனால் அப்படியில்லாமல், நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையிலே அறிய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் (யாத்திராகமம் 34:6; சங்கீதம் 31:19; யோவாவான் 3:16; 17:3).

தேவன் ஒரு எல்லையற்றவர் மற்றும் முடிவில்லாதவர் என்பதால், தேவனளவு உள்ள இந்த கேள்விக்கு எந்த மனிதனும் முழுமையாக பதில் சொல்ல முடியாது, ஆனால் தேவனுடைய வார்த்தையின் உதவியால், தேவன் யார் என்பதையும் அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதையும் குறித்து நாம் அதிகம் புரிந்துகொள்ள முடியும். நாம் யாவரும் முழு இருதயத்தோடு அவரைத் தொடர்ந்து தேடுவோமாக! (எரேமியா 29:13).

English



முகப்பு பக்கம்

தேவனுடைய பண்புகள் யாவை? தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries