கேள்வி
பிசாசைக் கடிந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் உள்ளதா?
பதில்
சில கிறிஸ்தவர்கள் பிசாசைக் கடிந்துகொள்ளும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக நம்புவது மட்டுமல்லாமல், தொடர்ந்து அவற்றைக் கடிந்துகொள்ள வேண்டும் என்றும் நம்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கைக்கு வேதாகமத்தில் எந்த அடிப்படையும் இல்லை. சாத்தான், தேவனைப்போல், எங்கும் நிறைந்தவன் அல்ல. அவன் ஒரு நேரத்தில் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க முடியும், மேலும் தனிப்பட்ட கிறிஸ்தவர்களை அவன் தனிப்பட்ட முறையில் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. நிச்சயமாக, அவனுடைய கட்டளையைச் செய்யும் பிசாசுகளின் சேனைகள் அவனிடம் உள்ளன, மேலும் அவை எல்லா இடங்களிலும் விசுவாசிகளின் சாட்சியங்களை அழிக்க முயல்கின்றன. வேதாகமத்தில் உள்ளவர்கள் எவ்வாறு பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்களோ அதே போன்று கிறிஸ்தவர்களுக்கு பிசாசினால் பிடித்து ஆட்கொள்ள முடியாது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய நாம், தீமையின் பிரசன்னத்தின் யதார்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். நம் நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்க நாம் போராடும்போது, நம் எதிரிகள் வெறும் மனித கருத்துக்கள் அல்ல, ஆனால் அந்தகாரத்தின் சக்திகளிலிருந்து வரும் உண்மையான சக்திகள் என்பதை நாம் உணர வேண்டும். வேதாகமம் கூறுகிறது, "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" (எபேசியர் 6:12).
தெளிவாக, தேவன் சாத்தானை பூமியின் மீது கணிசமான அளவு சக்தியையும் செல்வாக்கையும் காண்பிக்க அனுமதித்துள்ளார், குறைந்தபட்சம் இப்போதைக்கு, மற்றும் எப்போதும் தேவனுடைய இறையாண்மையின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று வேதாகமம் சொல்லுகிறது (1 பேதுரு 5:8). தேவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களின் இருதயத்தில் செயல்படும் வல்லமை சாத்தானாக இருக்கிறது (எபேசியர் 2:2). இறையாண்மையுள்ள தேவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத எவரும் பிசாசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 26:18; 2 கொரிந்தியர் 4:4). மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் இனி சாத்தானுக்கு அல்லது பாவத்திற்கு அடிமையாக மாட்டார்கள் (ரோமர் 6:6-7), ஆனால் அவன் நமக்கு முன் வைக்கும் சோதனைகளிலிருந்து நாம் விடுபட்டவர்கள் என்று அர்த்தமல்ல.
பிசாசைக் கண்டிக்கும் அதிகாரத்தை வேதாகமம் கிறிஸ்தவர்களுக்கு வழங்கவில்லை, மாறாக அவனை எதிர்க்கும்படி கூறுகிறது. யாக்கோபு 4:7 கூறுகிறது, "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." சகரியா 3:2 சாத்தானைக் கடிந்துகொள்பவர் கர்த்தர் என்று நமக்குச் சொல்லுகிறது. தேவதூதர்களில் மிகவும் சக்திவாய்ந்த ஒருவரான மிகாவேல் தூதன்கூட சாத்தானைக் குற்றஞ்சாட்டத் துணியவில்லை, மாறாக, "கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக" (யூதா 1:9) என்று கூறினார். சாத்தானின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்துவிடம் முறையிட வேண்டும். பிசாசை தோற்கடிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் (எபிரெயர் 12:2) மேலும் அவர் தீய சக்திகளை தோற்கடிப்பார் என்று நம்ப வேண்டும்.
ஒரு கிறிஸ்தவர் சாத்தானைக் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் தீமைக்கு எதிராக நிற்க தேவன் அவருடைய சர்வாயுத வர்க்கத்தையும் கொடுத்திருக்கிறார் (எபேசியர் 6:10-18 பார்க்கவும்). பிசாசுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் மிகவும் பயனுள்ள ஆயுதங்கள், தேவன் மற்றும் அவருடைய வார்த்தையைப் பற்றிய நமது நம்பிக்கை, ஞானம் மற்றும் அறிவு. கிறிஸ்து, சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவனுக்கு வேதவாக்கியங்களின் மூலம் பதிலளித்தார் (மத்தேயு 4:1-11 ஐப் பார்க்கவும்). ஆவிக்குரிய விஷயங்களில் வெற்றி பெற, நாம் தெளிவான மனசாட்சியைக் காத்து, நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். "நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 10:3-5).
English
பிசாசைக் கடிந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு அதிகாரம் உள்ளதா?