கேள்வி
இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று 1 பேதுரு 3:21 போதிக்கிறதா?
பதில்
எந்தவொரு ஒற்றை வசனம் அல்லது வேதப்பகுதியுடனும், வேதாகமத்தின் மீதமுள்ள பகுதிகளில் அதைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றின் மூலம் முதலில் வேதாகமம் என்ன கூறுகிறது என்பது நாம் கண்டறிவதன் மூலம் நாம் அவற்றை சரியாகப் புரிந்துகொள்கிறோம். ஞானஸ்நானம் மற்றும் இரட்சிப்பின் விஷயத்தில், ஞானஸ்நானம் உட்பட எந்தவிதமான கிரியைகளினாலும் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்து மீதான விசுவாசத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு என்பதை வேதாகமம் மிகத் தெளிவாக கூறுகிறது (எபேசியர் 2:8-9). எனவே, ஞானஸ்நானம் அல்லது வேறு எந்த செயலும் இரட்சிப்புக்கு அவசியம் என்ற முடிவுக்கு வரும் எந்த விளக்கமும் தவறான விளக்கமாகும். மேலும் கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் இணையதள வலைப்பக்கத்தில் "இரட்சிப்பு விசுவாசத்தால் மட்டுமா, அல்லது விசுவாசம் மற்றும் கிரியைகளினாலா?"
இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று நம்புபவர்கள் உடனடியாக 1 பேதுரு 3:21 ஐ அதற்கு "ஆதார வசனம்" என்று பயன்படுத்துகிறார்கள், ஏனென்றால் அது "ஞானஸ்நானமானது இப்பொழுது உங்களை இரட்சிக்கிறது" என்று கூறுகிறது. ஞானஸ்நானம் பெறுவதே நம்மை இரட்சிக்கிறது என்று பேதுரு மெய்யாகவே கூறினாரா? அவர் அப்படி கூறி இருந்தால், ஞானஸ்நானம் பெறாமலே அல்லது ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே ஜனங்கள் இரட்சிக்கப்படுவதை (அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறுவதன் மூலம்) தெளிவாகக் காட்டும் வேதத்தின் பல பகுதிகளுக்கு அவர் முரண்படுவார். ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு இரட்சிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு நல்ல உதாரணம் அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில் வருகிற கொர்நேலியு மற்றும் அவரது வீட்டார். அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே இரட்சிக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் இரட்சிப்பின் சான்றாக பரிசுத்த ஆவியைப் பெற்றனர் (ரோமர் 8:9; எபேசியர் 1:13; 1 யோவான் 3:24). பேதுரு அவர்களை ஞானஸ்நானம் பெற அனுமதித்ததற்கான காரணமே அவர்களின் இரட்சிப்பின் சான்றாகும். வேதாகமத்தின் எண்ணற்ற பகுதிகள் ஒருவர் சுவிசேஷத்தை விசுவாசித்தால் இரட்சிப்பு வருகிறது என்று தெளிவாகக் கற்பிக்கிறது, அந்த சமயத்தில் அவன் அல்லது அவள் "வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்படுகிறார்கள் (எபேசியர் 1:13).
அதிர்ஷ்டவசமாக, இந்த வசனத்தில் பேதுரு என்ன அர்த்தம் கொண்டார் என்று நாம் யூகிக்க வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் "மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து" என்ற சொற்றொடரை பயன்படுத்தி நமக்கு தெளிவுபடுத்துகிறார். பேதுரு ஞானஸ்நானத்தை இரட்சிப்புடன் இணைக்கும் போது, அவர் குறிப்பிடுவது ஞானஸ்நானம் பெறும் செயல் அல்ல (மாம்சத்திலிருந்து அழுக்கை அகற்றுவது அல்ல). தண்ணீரில் மூழ்குவது அழுக்கை கழுவுவதைத் தவிர வேறொன்றும் செய்யாது. பேதுரு குறிப்பிடுவது என்னவென்றால், ஞானஸ்நானம் எதை பிரதிபலிக்கிறது, அதுதான் நம்மை இரட்சிக்கிறது (இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேதுரு ஞானஸ்நானத்தை விசுவாசத்துடன் இணைக்கிறார். மூழ்குவதால் ஈரமாகும் பகுதியினால் அல்ல இரட்சிக்கப்படுவது; மாறாக, ஞானஸ்நானத்தால் குறிக்கப்படும் "தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை" தான் நம்மை இரட்சிக்கிறது. தேவனிடம் செய்யும் முறையீடு எப்போதும் முதலில் வருகிறது. முதலில் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதல், பின்னர் தான் ஞானஸ்நானம் கிறிஸ்துவை பகிரங்கமாக அடையாளப்படுத்த வருகிறது.
இந்த வேதப்பகுதியின் சிறந்த விளக்கம் டாக்டர் கென்னத் வூஸ்ட் அவர்கள் எழுதிய கிரேக்க புதிய ஏற்பாட்டில் உள்ள வார்த்தைகளின் ஆய்வுகள் (Word Studies in the Greek New Testament) என்னும் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. "தண்ணீர் ஞானஸ்நானம் தெளிவாக அப்போஸ்தலரின் மனதில் உள்ளது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அல்ல, ஏனென்றால் அவர் வெள்ளத்தின் தண்ணீரிலிருந்து பேழையில் இருந்தவர்கள் இரட்சிக்கப்படுவதைப் பற்றியும், இந்த வசனத்தில், விசுவாசிகளைக் இரட்சிப்பது பற்றியும் பேசுகிறார். ஆனால் அது அவர்களை ஒரு எதிர்வசமாக மட்டுமே இரட்சிக்கிறது என்று அவர் கூறுகிறார். அதாவது, தண்ணீர் ஞானஸ்நானம் என்பது யதார்த்தத்தின், இரட்சிப்பின் பிரதியாகும். இது ஒரு அச்சாக மட்டுமே இரட்சிக்க முடியும், உண்மையில் அல்ல. பழைய ஏற்பாட்டு பலிகள் யதார்த்தத்தின் பிரதிநிதிகள் ஆகும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உண்மை. அவர்கள் உண்மையில் விசுவாசியைக் காப்பாற்றவில்லை, அது ஒரு மாதிரி ஒப்பணை மட்டுமே. இந்த பலிகள் கிறிஸ்தவ தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு ஒப்பானவை என்று இங்கு வாதிடப்படவில்லை. ஆசிரியர் அவற்றை 'எதிர் பகுதி' என்ற வார்த்தையின் பயன்பாட்டின் விளக்கமாகப் பயன்படுத்துகிறார்.
"எனவே தண்ணீர் ஞானஸ்நானம் விசுவாசியை மட்டுமே இரட்சிக்கிறது. பழைய ஏற்பாட்டு யூதர்கள் அவர் பலியை கொண்டுவருவதற்கு முன்பே இரட்சிக்ப்பட்டார்கள். அந்த பலி அவர்கள் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் மீது நம்பிக்கை வைத்தார்கள் என்பதற்கான வெளிப்புற சாட்சி மட்டுமே. தண்ணீர் ஞானஸ்நானம் என்பது விசுவாசியின் உள்ளான விசுவாசத்தின் வெளிப்புற சாட்சியாகும். அந்த நபர் கர்த்தராகிய இயேசுவின்மேல் நம்பிக்கை வைக்கும் தருணத்தில் இரட்சிக்ப்படுகிறார் அவர் ஞானஸ்நான மறுபிறப்பைப் பற்றி போதிக்கவில்லை, அதாவது ஞானஸ்நானத்திற்கு அடிபணிவதால் ஒருவர் மறுபடியும் பிறக்கிறார் என்று கூறவில்லை மாறாக கர்த்தராகிய இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கும் தருணத்தில் இரட்சிக்ப்படுகிறார் என்று தனது வாசகர்களுக்குத் தெரிவிப்பதில் கவனமாக இருக்கிறார், ஏனெனில் அவர் ‘ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்' என்று கூறுகிறார். ஞானஸ்நானமானது, சரீரத்துக்கான குளியல் போன்ற நேரடி அர்த்தத்தில் அல்லது ஆத்துமாவை தூய்மைப்படுத்துவது போன்ற ஒரு உருவக அர்த்தத்தில் மாம்சத்தின் அழுக்கை கழுவவில்லை என்று பேதுரு விளக்குகிறார். எந்த சடங்குகளும் உண்மையில் மனசாட்சியை பாதிக்காது. ஆனால் அவர் என்ன வரையறுக்கிறார் அவர் இரட்சிப்பின் மூலம், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது என்ற வார்த்தைகளில், இது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை விளக்குகிறார், அதாவது, 'இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம்,' அந்த உயிர்த்தெழுதலில் விசுவாசிக்கும் பாவி அவருடன் அடையாளம் படுத்திக் கொள்கிறார்.”
இந்த வேதப்பகுதியில் உள்ள குழப்பத்தின் ஒரு பகுதி, பல வழிகளில், ஞானஸ்நானத்தின் நோக்கம் ஒருவரின் கிறிஸ்துவின் விசுவாசத்தை பகிரங்கமாக அறிவிப்பது மற்றும் அவருடன் அடையாளம் காண்பது "கிறிஸ்துவுக்காக ஒரு முடிவை எடுப்பது" அல்லது "பாவியின் ஜெபத்தை" ஜெபிப்பதன் மூலம் மாற்றப்படுகிறது. ஞானஸ்நானம் பின்னர் செய்யப்படும் ஒன்றுக்குத் தள்ளப்பட்டது. ஆயினும், பேதுருவுக்கு அல்லது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் ஒருவருக்கு, ஒரு நபர் கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொள்வார் மற்றும் விரைவில் ஞானஸ்நானம் பெற மாட்டார் என்ற எண்ணம் கேள்விப்படாத ஒன்றாக இருந்திருக்கும். எனவே, பேதுரு ஞானஸ்நானம் இரட்சிப்புடன் நெருக்கமாக இணைந்திருப்பதைப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆயினும் பேதுரு இந்த வசனத்தில் இரட்சிப்பது சடங்கு அல்ல, ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் நாம் கிறிஸ்துவுடன் ஐக்கியமாக இருக்கிறோம் என்ற உண்மையை தெளிவுபடுத்துகிறார், "தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது" (1 பேதுரு 3:21).
ஆகையால், பேதுரு ஞானஸ்நானம் நம்மை இரட்சிக்கிறது என்று சொல்லும், அநீதியுள்ள பாவியை நியாயப்படுத்தும் கிறிஸ்துவின் பாவப்பரிகார பலியின் மீது விசுவாசம் வைப்பதைக் குறிக்கிறது (ரோமர் 3:25-26; 4:5). ஞானஸ்நானம் என்பது தேவன் "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்" என்பதன் வெளிப்புற அடையாளமாகும் (தீத்து 3:5).
English
இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று 1 பேதுரு 3:21 போதிக்கிறதா?