settings icon
share icon
கேள்வி

ஞானஸ்நான மறுஜென்மம் என்றால் என்ன?

பதில்


ஞானஸ்நான மறுஜென்மம் என்பது இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்ற நம்பிக்கையாகும், அல்லது இன்னும் துல்லியமாக கூறவேண்டுமாயின், ஒரு நபர் தண்ணீர் ஞானஸ்நானம் பெறும் வரை மறுபிறப்பு ஏற்படாது என்பதாகும். ஞானஸ்நான மறுஜென்மம் என்பது பல கிறிஸ்தவ பிரிவுகளின் உபதேசமாகும், ஆனால் மறுசீரமைப்பு இயக்கத்தில் உள்ள திருச்சபைகளால், குறிப்பாக கிறிஸ்துவின் சபை (Church of Christ) மற்றும் சர்வதேச கிறிஸ்துவின் சபை (International Church of Christ) ஆகியவற்றால் மிகவும் கடுமையாக ஊக்குவிக்கப்படுகிறது.

ஞானஸ்நான மறுஜென்மத்துக்கு ஆதரவாளர்கள் வேதாகமத்தின் ஆதரவிற்காக மாற்கு 16:16, யோவான் 3:5, அப்போஸ்தலர் 2:38, அப்போஸ்தலர் 22:16, கலாத்தியர் 3:27 மற்றும் 1 பேதுரு 3:21 போன்ற வேத வசனங்களை சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், அந்த வசனங்கள் இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்பதைப் போலக் காட்டுகின்றன. இருப்பினும், ஞானஸ்நான மறுஜென்மத்தை ஆதரிக்காத அந்த வசனங்களுக்கு வேதாகம ரீதியாகவும் சூழ்நிலை ரீதியாகவும் நல்ல விளக்கங்கள் உள்ளன.

ஞானஸ்நான மறுஜென்மத்துக்கு ஆதரவாளர்கள் பொதுவாக இரட்சிப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதற்கான நான்கு-பகுதி சூத்திரத்தைக் கொண்டுள்ளனர். இரட்சிக்கப்படுவதற்கு ஒரு நபர் விசுவாசிக்க வேண்டும், மனந்திரும்ப வேண்டும், அறிக்கைப்பண்ண வேண்டும், மற்றும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த செயல்கள் ஒவ்வொன்றும் இரட்சிப்புக்கு அவசியமானவை என்பதைக் குறிக்கும் வேதாகமப் பகுதிகள் இருப்பதால் அவர்கள் இவ்வாறு நம்புகிறார்கள். உதாரணமாக, ரோமர் 10:9-10 இரட்சிப்பை அறிக்கைப்பண்ணுவதுடன் இணைக்கிறது. அப்போஸ்தலர் 2:38 இரட்சிப்பை மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவற்றுடன் இணைக்கிறது.

இரட்சிப்புக்கு மனந்திரும்புதல் அவசியம் என்பது, வேதாகமத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மனமாற்றம் என்பது மனதினுடைய மாற்றம். இரட்சிப்பு தொடர்பாக மனந்திரும்புதல், கிறிஸ்துவை நிராகரிப்பதில் இருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு உங்கள் மனதை மாற்றுகிறது. இது இரட்சிக்கும் விசுவாசத்திலிருந்து ஒரு தனி படி அல்ல. மாறாக, இது இரட்சிக்கும் விசுவாசத்திற்கான இன்றியமையாத அம்சமாகும். இயேசு கிறிஸ்துவை இரட்சகராக, கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு, அவர் யார், அவர் என்ன செய்தார் என்பது பற்றிய மனமாற்றம் இல்லாமல் ஒருவர் பெற முடியாது.

அறிக்கைப்பண்ணுதல், வெளிப்படையான விசுவாசத்தின் நிரூபணம் என வேதாகமத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு நபர் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவை இரட்சகராகப் பெற்றிருந்தால், அந்த விசுவாசத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பது அதன் விளைவாக இருக்கும். ஒரு நபர் கிறிஸ்துவைப் பற்றி வெட்கப்படுகிறார் மற்றும்/அல்லது நற்செய்தியின் செய்தியைப் பற்றி வெட்கப்படுகிறார் என்றால், அந்த நபர் நற்செய்தியைப் புரிந்துகொண்டதாகவோ அல்லது கிறிஸ்து வழங்கும் இரட்சிப்பை அனுபவித்திருக்கவோ வாய்ப்பில்லை.

ஞானஸ்நானம், கிறிஸ்துவுடன் ஒரு அடையாளம் என வேதாகமத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது. கிறிஸ்தவ ஞானஸ்நானம் கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றுடன் ஒரு விசுவாசியின் அடையாளத்தை விளக்குகிறது (ரோமர் 6:3-4). பாவ அறிக்கையைப் போலவே, ஒரு நபர் ஞானஸ்நானம் பெற விரும்பவில்லை என்றால்-அவரது/அவளது வாழ்க்கை இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டதாக அடையாளம் காண விரும்பவில்லை என்றால்-அந்த நபர் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலம் ஒரு புதிய சிருஷ்டியாக (2 கொரிந்தியர் 5:17) உருவாக்கப்படவில்லை என்றர்த்தமாகும்.

ஞானஸ்நான மறுஜென்மம் மற்றும்/அல்லது இரட்சிப்பைப் பெறுவதற்கான இந்த நான்கு-பகுதி சூத்திரத்திற்காகப் போராடுபவர்கள், இந்தச் செயல்களை இரட்சிப்பைப் பெறும் தகுதியான செயல்களாகக் கருதுவதில்லை. மனந்திரும்புதல், அறிக்கைப்பண்ணுதல் போன்றவை ஒருவரை இரட்சிப்புக்கு தகுதியானவர் ஆக்குவதில்லை. மாறாக, அதிகாரப்பூர்வ கருத்து என்னவென்றால், விசுவாசம், மனந்திரும்புதல், அறிக்கைப்பண்ணுதல் மற்றும் ஞானஸ்நானம் ஆகியவை "கீழ்ப்படிதலுக்கான செயல்கள்", தேவன் இரட்சிப்பை வழங்குவதற்கு முன்பு ஒரு நபர் செய்ய வேண்டியவை. இரட்சிப்பு வழங்கப்படுவதற்கு முன் தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் மட்டுமே தேவை என்பது நிலையான புராட்டஸ்டன்ட் புரிதல் என்றாலும், ஞானஸ்நான மறுஜென்மம் போதனையை வற்புறுத்துபவர்கள் ஞானஸ்நானம்—மற்றும், சிலருக்கு, மனந்திரும்புதல் மற்றும் அறிக்கைப்பண்ணுதல்—தேவன் இரட்சிப்பை வழங்குவதற்கு முன் தேவைப்படும் கூடுதல் காரியங்கள் என்று நம்புகிறார்கள்.

இந்தக் கண்ணோட்டத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இரட்சிப்புக்கான ஒரே தேவை விசுவாசம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் அறிவிக்கும் வேதப் பகுதிகள் உள்ளன. வேதாகமத்தில் மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றான யோவான் 3:16 கூறுகிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." அப்போஸ்தலர் 16:30ல், பிலிப்பிய சிறை அதிகாரி அப்போஸ்தலனாகிய பவுலிடம், “நான் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார். பவுல் நான்கு பகுதி சூத்திரத்தை முன்வைக்க எப்போதாவது ஒரு வாய்ப்பு இருந்தால், இதுதான். பவுலின் பதில் எளிமையானது: "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31). இங்கே ஞானஸ்நானம் இல்லை, அறிக்கைப்பண்ணுதலும் இல்லை, வெறும் விசுவாசம் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் டஜன் கணக்கான வசனங்கள் உள்ளன, அவை இரட்சிப்பை விசுவாசம்/நம்பிக்கை மூலம் மட்டுமே என்று கூறுகின்றன, சூழலில் வேறு எந்தத் தேவையும் குறிப்பிடப்படவில்லை. ஞானஸ்நானம் அல்லது வேறு ஏதாவது இரட்சிப்புக்கு அவசியமானால், இந்த வசனங்கள் அனைத்தும் தவறானவை, மேலும் வேதாகமத்தில் பிழைகள் உள்ளன, எனவே இனி நம் நம்பிக்கைக்கு தகுதியற்றது.

இரட்சிப்புக்கான பல்வேறு தேவைகள் குறித்த புதிய ஏற்பாட்டின் முழுமையான ஆய்வு அவசியமில்லை. இரட்சிப்பைப் பெறுவது ஒரு செயல்முறை அல்லது பல-படி சூத்திரம் அல்ல. இரட்சிப்பு ஒரு முடிக்கப்பட்ட தயாரிப்பு, ஒரு செய்முறை அல்ல. இரட்சிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், நாம் இரட்சிக்கப்படுவோம்.

English



முகப்பு பக்கம்

ஞானஸ்நான மறுஜென்மம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries