கேள்வி
கால்வினிசம் என்றால் என்ன, அது வேதாகமத்தின்படியானதா? கால்வினிசத்தின் ஐந்து புள்ளிகள் யாவை?
பதில்
கால்வினிசத்தின் ஐந்து புள்ளிகளை TULIP (டுலிப்) என்ற எழுத்துக்களின் சுருக்கத்தால் சுருக்கமாகக் கூறலாம். T என்பது முழுமையான சீரழிவையும் (total depravity), U நிபந்தனையற்ற தேர்ந்தெடுத்தலையும் (unconditional election), L வரையறுக்கப்பட்ட பாவப்பரிகாரத்தையும் (limited atonement), I தவிர்க்கமுடியாத கிருபையும் (irresistible grace), P என்பது பரிசுத்தவான்களின் விடாமுயற்சியையும் (perseverance of the saints) குறிக்கிறது. கால்வினிஸ்டுகள் தங்கள் நம்பிக்கைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் வரையறைகள் மற்றும் வேதக் குறிப்புகள் இங்கே:
முழுமையான சீரழிவு - ஆதாமின் வீழ்ச்சியின் விளைவாக, முழு மனிதகுலமும் பாதிக்கப்படுகிறது; மீறுதல்கள் மற்றும் பாவங்களில் அனைத்து மனிதகுலமும் மரித்துவிட்டது. மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது (ஆதியாகமம் 6:5; எரேமியா 17:9; ரோமர் 3:10-18).
நிபந்தனையற்ற தேர்ந்தெடுத்தல் - மனிதன் பாவத்தில் மரித்துவிட்டதால், அவனால் தேவனுக்குப் பதில் கொடுக்க முடியவில்லை; எனவே, கடந்த நித்தியத்தில் தேவன் இரட்சிப்புக்கு சில ஜனங்களைத் தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்தல் மற்றும் முன்னறிதல் நிபந்தனையற்றது; அவை மனிதனின் பதிலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல (ரோமர் 8:29-30;9:11; எபேசியர் 1:4-6, 11-12) ஏனெனில் மனிதனால் பதிலளிக்க இயலாது, அல்லது அவன் விரும்பவில்லை.
வரையறுக்கப்பட்ட பாவப்பரிகாரம் - தேவனுடைய நிபந்தனையற்ற தேர்ந்தெடுத்தலின் விளைவாக குறிப்பிட்ட சிலரை இரட்சிக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்ததால், அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து மரிக்கவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். தேவன் தேர்ந்தெடுத்த மற்றும் கிறிஸ்து மரித்த அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் (மத்தேயு 1:21; யோவான் 10:11; 17:9; அப்போஸ்தலர் 20:28; ரோமர் 8:32; எபேசியர் 5:25).
தவிர்க்கமுடியாத கிருபை - தேவன் யாரைத் தேர்ந்தெடுத்தாரோ அவர்களை அவர் தவிர்க்கமுடியாத கிருபை மூலம் தன்னிடமாய் இழுத்துக்கொள்கிறார். தேவன் மனிதனை தம்மிடம் வரச் சித்தங்கொள்கிறார். தேவன் அழைக்கும்போது, மனிதன் பதிலளிக்கிறான் (யோவான் 6:37, 44; 10:16).
பரிசுத்தவான்களின் விடாமுயற்சி - தேவன் தேர்ந்தெடுத்து பரிசுத்த ஆவியின் மூலம் தம்மிடம் இழுத்துக்கொண்ட குறிப்பிட்ட துல்லியமானவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பார்கள். தேவன் தேர்ந்தெடுத்த எவரும் இழக்கப்பட மாட்டார்கள்; அவர்கள் நித்தியமாக பாதுகாப்பானவர்கள் (யோவான் 10:27-29; ரோமர் 8:29-30; எபேசியர் 1:3-14).
இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் வேதாகம அடிப்படையைக் கொண்டிருந்தாலும், பலர் அவற்றில் அனைத்தையும் அல்லது சிலவற்றை நிராகரிக்கின்றனர். "நான்கு-புள்ளி கால்வினிஸ்டுகள்" என்று அழைக்கப்படுபவர்கள் முழுமையான சீரழிவு, நிபந்தனையற்ற தேர்ந்தெடுத்தல், தவிர்க்கமுடியாத கிருபை மற்றும் பரிசுத்தவான்களின் விடாமுயற்சி ஆகியவற்றை வேதாகமக் கோட்பாடுகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். மனிதன் நிச்சயமாக பாவம் செய்பவன், அவனே தன்னிச்சையாக தேவனை விசுவாசிக்க முடியாதவன். தேவன் தமது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே ஜனங்களைத் தேர்ந்தெடுக்கிறார் - தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் எந்த தகுதியின் அடிப்படையிலும் தேர்ந்தெடுத்தல் இல்லை. தேவன் தேர்ந்தெடுத்த அனைவரும் விசுவாசத்திற்குள் வருவார்கள். மெய்யாகவே மறுபடியும் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பார்கள். இருப்பினும், வரையறுக்கப்பட்ட பாவப்பரிகாரத்தைப் பொறுத்தவரை, நான்கு-புள்ளி கால்வினிஸ்டுகள் பாவப்பரிகாரம் வரம்பற்றது என்று நம்புகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பாவங்களுக்காக மட்டும் அல்ல, மாறாக முழு உலகத்தின் பாவங்களுக்காக இயேசு மரித்தார் என்று வாதிடுகின்றனர். "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்" (1 யோவான் 2:2). வரையறுக்கப்பட்ட பாவப்பரிகாரத்திற்கு எதிரான மற்ற வசனங்கள் யோவான் 1:29; 3:16; 1 தீமோத்தேயு 2:6; மற்றும் 2 பேதுரு 2:1.
இருப்பினும், ஐந்து-புள்ளி கால்வினிஸ்டுகள், நான்கு-புள்ளி கால்வினிசத்தில் உள்ள சிக்கல்களைக் காண்கிறார்கள். முதலில், அவர்கள் வாதிடுகின்றனர், முழுமையான சீரழிவு உண்மையாக இருந்தால், வரம்பற்ற பாவப்பரிகாரம் உண்மையாக இருக்க முடியாது, ஏனென்றால், ஒவ்வொரு நபரின் பாவங்களுக்காகவும் இயேசு மரித்தார் என்றால், அவருடைய மரணம் ஒரு நபருக்கு பொருந்துமா இல்லையா என்பது அந்த நபர் கிறிஸ்துவை "ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தது.” ஆனால், முழுமையான சீரழிவு பற்றிய மேற்கூறிய விளக்கத்திலிருந்து நாம் பார்த்தது போல, மனிதனுக்கு அவனது இயற்கையான நிலையில் தேவனைத் தேர்ந்தெடுக்கும் திறன் இல்லை, அல்லது அவன் விரும்புவதும் இல்லை. கூடுதலாக, வரம்பற்ற பாவப்பரிகாரம் உண்மையாக இருந்தால், கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அந்த நபர்களால் நரகம் நிறைந்துள்ளது. அவர்களுக்காக அவர் தனது இரத்தத்தை வீணாக சிந்தினார். ஐந்து புள்ளி கால்வினிஸ்டுக்கு, இது நினைத்துப் பார்க்க முடியாதது. தயவுசெய்து கவனிக்கவும்: இந்தக் கட்டுரை கால்வினிசத்தின் ஐந்து புள்ளிகளின் சுருக்கமான சுருக்கம் மட்டுமே. மேலும் ஆழமான பார்வைக்கு, பின்வரும் பக்கங்களைப் பார்வையிடவும்: முழுமையான சீரழிவு, நிபந்தனையற்ற தேர்ந்தெடுத்தல், வரையறுக்கப்பட்ட பாவப்பரிகாரம், தவிர்க்கமுடியாத கிருபை மற்றும் பரிசுத்தவான்களின் விடாமுயற்சி.
English
கால்வினிசம் என்றால் என்ன, அது வேதாகமத்தின்படியானதா? கால்வினிசத்தின் ஐந்து புள்ளிகள் யாவை?