கேள்வி
சபையில் ஆராதனை எவ்வளவு முன்னுரிமையுள்ளதாக இருக்க வேண்டும்?
பதில்
யாராவது நம் உயிரைக் காப்பாற்றினால், நன்றியுணர்வே அதற்கு நம் பதிலாக இருக்கும். நம்மால் ஒருபோதும் அடையமுடியாத ஒரு பரிசு நமக்கு வழங்கப்படும்போது, நாம் அதற்கு நம் பாராட்டைத் தெரிவிக்கிறோம். ஆராதனை என்பது தேவனுக்கு நம் நன்றியுணர்வின் மற்றும் பாராட்டுதலின் வெளிப்பாடாகும். இயேசு நம்மை இரட்சித்தார். தேவனுடைய அன்பு நிபந்தனையற்றது. நமது ஆராதனை, நமது பிரபஞ்சத்தின் சிருஷ்டிகராகவும், நம் ஆத்துமாக்களின் இரட்சகராகவும் இருக்கும் அவரது அதிகாரத்தை அங்கீகரிக்கிறது. எனவே, ஆராதனை என்பது விசுவாசிக்கும், சபைக்கும் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
மதங்களிடையே கிறிஸ்தவம் தனித்துவமானதாகும், அது தேவனுடனான தனிப்பட்ட உறவை அடிப்படையாகக் கொண்டது. யாத்திராகமம் 34:14 கூறுகிறது, "கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்." நம் நம்பிக்கையின் மையமானது சிருஷ்டிகருடனான நம்முடைய தனிப்பட்ட உறவு ஆகும்.
ஆராதனை என்பது அந்த தனிப்பட்ட உறவைக் கொண்டாடும் ஒரு செயலாகும். ஆராதனையின் மூலம், நாம் நம்முடைய தேவனுடன் தொடர்பு கொள்கிறோம். ஆராதனையின் மூலம், அவருடைய தெய்வீகத்தன்மை மற்றும் கர்த்தத்துவத்தை நாம் ஒப்புக்கொள்கிறோம். இசை, கூக்குரலிடுதல், ஜெபம் அல்லது வேறு வழிகளில் வெளிப்படுத்தினாலும், ஆராதனை அதன் மையத்தில், தேவனோடுள்ள நெருக்கத்தின் வெளிப்பாடு ஆகும். நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும், ஆனால் அது அவர் விரும்பும் குளிரான, மனமற்ற கீழ்ப்படிதல் அல்ல. உபாகமம் 6:5 கூறுகிறது, "நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக."
இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு வழங்கப்பட்ட கிருபையைப் பயன்படுத்தி, தேவனுடைய நாமத்தை தொழுதுகொள்ளும் அனைவரின் கூட்டமாக சபை உள்ளது. நாம் சீடர்களை உருவாக்கி தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழச் சொல்கிறோம். 1 யோவான் 3:24 கூறுகிறது, "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்." சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் தேவனை வணங்க அழைக்கப்படுகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் தேவனிடம் இருதயத்திலிருந்து பேசிக்கொண்டு ஜெபத்தில் நேரத்தை செலவிட வேண்டும். வேதாகமத்தில் அவருடைய வார்த்தைகளை நாம் வாசித்து அவற்றை நம் இருதயத்தில் தியானிக்க வேண்டும். நமது தனிப்பட்ட ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு தனிப்பட்ட வழிபாட்டு நேரங்கள் அவசியம். விசுவாசிகளின் ஒரு அமைப்பாக, நாம் பாடுவதன் மூலமும், ஜெபத்தின் மூலமும், வார்த்தையின் அறிவைப் பெறுவதன் மூலமும், சபையின் நன்மைக்காக நமது ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து ஆராதனையில் ஈடுபட வேண்டும். ஆராதனையானது சபையின் அதிக முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
English
சபையில் ஆராதனை எவ்வளவு முன்னுரிமையுள்ளதாக இருக்க வேண்டும்?