கேள்வி
கூட்டுக்குழும ஜெபம் முக்கியமானதாக இருக்கிறதா? தனி ஜெபத்தை விட கூட்டுக்குழும ஜெபம் மிகவும் வலிமை வாய்ந்ததா?
பதில்
சபையின் வாழ்க்கையில் ஆராதனை, ஆரோக்கியமான உபதேசம், திருவிருந்து, மற்றும அந்நியோந்நியத்துடன் கூட்டுக்குழும ஜெபமும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆதித்திருச்சபை அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தது (அப்போஸ்தலர் 2:42). நாம் மற்ற விசுவாசிகளுடன் சேர்ந்து ஜெபிக்கும்போது, அதே அநேக சாதகமான பலன்களை கொண்டுவரும். கூட்டு குழுமஜெபம் நம்மை பக்திவிருத்தி அடையச்செய்வதோடு பிற சக விசுவாசிகளோடு நம்மை இணைக்கிறது. நம் கர்த்தரும் இரட்கருமாகிய இயேசுவை துதிக்கும் சத்தத்தை கேட்கையில், அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் வசிக்கிற பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களை மகிழ்ச்சியாக்குகிறார்.
தனிமையில் இருப்பவர்களும் மற்றும் வாழ்க்கையின் பாரங்களால் வருத்தப்படுகிறவர்களும், தங்களுக்காக மற்றவர்கள் கிருபாசனத்திற்கு முன்பாக ஜெபிக்கும்போது, அது அவர்களுக்கு மிகவும் ஊக்கத்தை அளிக்கிறதாய் இருக்கும். நாம் மற்றவர்களுக்காக பரிந்துபேசும்போது, நமக்குள் அவர்களைக் குறித்த அன்பும் கரிசனையும் பெருகும். அதே சமயத்தில், கூட்டு குழுமஜெபத்தில் பங்குவகித்து ஜெபிக்கிறவர்களின் இருதயங்களை அது பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது. தேவனுக்கு முன்பாக நாம் வரும்போது, நமக்குள் தாழ்மை (யாக்கோபு 4:10), உண்மை (சங்கீதம் 145:18), கீழ்படிதல் (1 யோவான் 3:21,22), நன்றி செலுத்துதல் (பிலிப்பியர் 4:6), மற்றும் தைரியம் (எபிரெயர் 4:16) இருக்க வேண்டும். துக்ககரமான காரியம் என்னவென்றால், கூட்டு குழுமஜெபத்தை தேவனிடம் ஏறெடுக்க வந்திருப்பவர்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கிற வார்த்தைகளாக இல்லாமல் மனிதர்கள் கேட்கவேண்டும் என்பதற்காக ஜெபிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சுபாவமுள்ளவர்களை இயேசு மத்தேயு 6:5-8 வரையிலுள்ள வசனங்களில், “அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்” என்று எச்சரிக்கிறார்.
தனிப்பட்ட ஜெபங்களை விட கூட்டு குழுமஜெபங்கள் மிகவும் வல்லமையுடையது என்று வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அநேக கிறிஸ்தவர்கள் ஜெபம் என்றால் “தேவனிடத்தில் இருந்து ஏதோ சிலவற்றைப் பெறுவதாக” மட்டுமே நிணைக்கிறார்கள், ஆகையால் கூட்டு குழுமஜெபத்திலும் தங்களுக்கு வேண்டியவைகளின் பட்டியலை மனப்பாடமாய் ஒப்புவிக்கிறார்கள். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஜெபங்களில் அநேக பகுதிகள் உண்டு, அவை எல்லா பரிசுத்தம், பரிபூரணம் மற்றும் நீதியும் உள்ள தேவனிடம் நெருங்கிய ஐக்கியம் வைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட தேவன் தமது சிருஷ்டிகளுக்கு செவிசாய்க்கிறார் என்பதே நம்மை அதிகமாய் துதிக்கவும் ஆராதிக்கவும் வைக்கிறது (சங்கீதம் 27:4; 63:1-8), நம்மை மனந்திரும்பவும் அறிக்கை செய்யவும் வைக்கும் (சங்கீதம் 51; லூக்கா 18:9-14), நன்றியுள்ளவர்களாய் தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்த வைக்கும் (பிலிப்பியர் 4:6; கொலோசியர் 1:12), மற்றவர்களுக்காக உண்மையாக பரிந்துபேசவைக்கும் (1 தெசலோனிக்கேயர் 1:11; 2:16).
ஜெபம் என்பது தேவனுக்கு ஒத்துழைத்து அவரின் திட்டத்தை நம்மில் நிறைவேற்ற கொண்டுவருவதாகும், மாறாக நமது திட்டத்திற்கு அவரை அடிபணியவைப்பது அல்ல. நமது விருப்பங்களை முற்றிலும் விட்டுவிட்டு, நமது சூழ்நிலைகளை நன்றாய் அறிந்திருக்கிற மற்றும் நாம் கேட்கும் முன்பதாகவே நமக்கு என்ன வேண்டும் என்று (மத்தேயு 6:8) தெரிந்திருக்கிற தேவனுக்கு நம்மை அற்பணிக்கும் போது நமது ஜெபங்கள் உயர்ந்தநிலையை அடைகிறது. ஆகையால் தேவ சித்தத்திற்கு முற்றிலுமாக அற்பணிக்கப்பட்ட ஜெபங்கள் எப்பொழுதும் தேவனிடம் இருந்து சரியான பதில்களை பெறும், அல்லாமல் அது தனிப்பட்ட ஜெபமாக இருந்தாலும் சரி அல்லது ஆயிரம் பேர்களின் கூட்டு குழுமஜெபமாய் இருந்தாலும் சரி அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.
கூட்டு குழுமஜெபம் தேவனுடைய கரத்தை அசைக்கிறது என்ற கருத்து மத்தேயு 18:19-20 லுள்ள வசனங்களை தவறாக வியாக்கியானம் செய்வதிலிருந்து வருகிறது, “அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.” இந்த வசனங்கள் ஒரு பெரிய வேதப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும், அதாவது பாவம் செய்த ஒரு சபையின் உறுப்பினர் விஷயத்தில் சபை எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கையைக் குறித்து தான் இந்த பகுதி சொல்லுகிறது. இந்த பகுதியை எடுத்து விவாசிகள் எதை குறித்தாகிலும் ஒருமனபட்டு தேவனிடம் கேட்கலாம் என்று வியாக்கியானம் செய்வது, சபை ஒழுக்கத்திற்கு சரிபட்டதாக இருக்காது மற்றும் வேதத்தில் உள்ள மற்ற வசனங்களையும் தேவனுடைய இறையாண்மையை மறுதலிக்கிறதாகவும் இருக்கும்.
அதுமட்டுமன்றி, “இரண்டு மூன்று பேர் கூடி ஜெபிக்கும்போது”, ஏதோ ஒரு மந்திர சக்தி ஜெபத்தை வல்லமை உடையதாக்குகிறது என்ற நம்பிக்கையை வேதாகமம் ஆமோதிக்கிறதில்லை. இருவர் அல்லது மூவர் கூடி ஜெபிக்கும்போது, இயேசு அங்கேயிருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அதேப்போலவே ஒருவர் ஜெபிக்கும்போது அவர் மற்றவர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கல் பிரிந்திருந்தாலும் இயேசு அங்கேயும் வருகிறார். கூட்டு குழுமஜெபம் ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது, அதனால் தான் அது முக்கியமானதாக இருக்கிறது (யோவான் 17:22-23). விசுவாசிகள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் (1 தெசலோனிக்கேயர் 5:11) ஒருவருக்கொருவர் அன்புசெலுத்தி நற்கிரியைகளை செய்யவும் ஒரு முக்கிய அம்சம் வகிக்கிறது (எபிரெயர் 10:24).
English
கூட்டுக்குழும ஜெபம் முக்கியமானதாக இருக்கிறதா? தனி ஜெபத்தை விட கூட்டுக்குழும ஜெபம் மிகவும் வலிமை வாய்ந்ததா?