settings icon
share icon
கேள்வி

தகனம் செய்வது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்களை தகனம் செய்ய வேண்டுமா?

பதில்


தகனம் செய்வது பற்றி வேதாகமம் எந்த குறிப்பிட்ட போதனையையும் கொடுக்கவில்லை. பழைய ஏற்பாட்டில் ஜனங்கள் எரிக்கப்படுவதற்கும் (1 ராஜா. 16:18; 2 ராஜா. 21:6) மற்றும் மனித எலும்புகள் எரிக்கப்பட்டதற்கும் (2 ராஜா. 23:16-20) சில நிகழ்வுகள் உள்ளன, ஆனால் இவை தகனத்திற்கு எடுத்துக்காட்டுகள் அல்ல. 2 ராஜா. 23:16-20-ல், மனித எலும்புகளை ஒரு பலிபீடத்தின் மீது எரிப்பது பலிபீடத்தை இழிவுபடுத்தியது என்பது சுவாரஸ்யமானது. அதே சமயம், இறந்த மனித உடலை எரிக்கக்கூடாது என்று பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் எங்கும் கட்டளையிடவில்லை, தகனம் செய்யப்படும் ஒருவர் மீது எந்த சாபத்தையும் தீர்ப்பையும் இணைக்கவில்லை.

தகனம் செய்தல் வேதாகம காலங்களில் நடைமுறையில் இருந்தது, ஆனால் அது பொதுவாக இஸ்ரவேலர்களால் மற்றும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளால் நடைமுறையில் கைக்கொள்ளவில்லை. வேதாகம கால கலாச்சாரங்களில், ஒரு கல்லறையிலோ, குகையிலோ அல்லது தரையிலோ அடக்கம் செய்வது ஒரு மனித உடலை அப்புறப்படுத்துவதற்கான பொதுவான வழியாகும் (ஆதியாகமம் 23:19; 35: 9; 2 நாளாகமம் 16:14; மத்தேயு 27:60-66 ). அடக்கம் செய்வது பொதுவான நடைமுறையாக இருந்தபோதிலும், ஒரு உடலை அப்புறப்படுத்த அனுமதிக்கப்பட்ட ஒரே முறையாக அடக்கம் செய்தல் என வேதாகமம் எங்கும் கட்டளையிடவில்லை.

தகனம் செய்தல் என்பது ஒரு கிறிஸ்தவர் கருத்தில் கொள்ளக்கூடிய ஒன்றா? மீண்டும், தகனத்திற்கு எதிராக வெளிப்படையான வேதப்பூர்வ கட்டளை எதுவும் இல்லை. சில விசுவாசிகள் தகனம் செய்வதை எதிர்க்கிறார்கள், காரணம் ஒரு நாள் தேவன் நம் சரீரங்களை உயிர்த்தெழப்பண்ணுவார், அவற்றை நம்முடைய ஆத்மா / ஆவியுடன் மீண்டும் ஒன்றிணைப்பார் என்பதை அங்கீகரிக்கவில்லை (1 கொரிந்தியர் 15:35-58; 1 தெசலோனிக்கேயர் 4:16). இருப்பினும், ஒரு உடல் தகனம் செய்யப்பட்டது என்பதால் தேவனுக்கு அந்த உடலை உயிர்த்தெழுப்புவது கடினம் என்பது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கிறிஸ்தவர்களின் உடல்கள் இப்போது முற்றிலும் தூசுகளாக மாறிவிட்டன. இது அவர்களின் உடல்களை உயிர்த்தெழுப்ப முடியாமல் தேவனை எந்த வகையிலும் தடுக்காது. அவர்தான் அவற்றை முதலில் படைத்தார்; ஆகையால் தேவன் அவற்றை மீண்டும் உருவாக்குவதில் அவருக்கு சிரமம் இருக்காது. தகனம் ஒரு உடலை தூசியாக மாற்றுவதற்கான செயல்முறையை "விரைவுபடுத்துவதை" தவிர வேறு எதுவும் செய்யாது. தகனம் செய்யப்படாத ஒரு நபரின் சரீரத்தை போலவே தகனம் செய்யப்பட்ட ஒரு நபரின் சரீரத்தையும் தேவன் ஒன்றுபோலவே சமமாக உயிர்த்தெழப் பண்ணமுடியும். அடக்கம் அல்லது தகனம் பற்றிய கேள்வி கிறிஸ்தவ சுதந்திரத்தின் எல்லைக்குள் உள்ளது. இந்த சிக்கலைக் கருத்தில் கொண்ட ஒரு நபர் அல்லது குடும்பத்தினர் ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும் (யாக்கோபு 1:5) மற்றும் அதன் விளைவாக வரும் நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும்.

English



முகப்பு பக்கம்

தகனம் செய்வது பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவர்களை தகனம் செய்ய வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries