settings icon
share icon
கேள்வி

ஒரு குழந்தையின் மரணத்தை கிறிஸ்தவ பெற்றோர்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

பதில்


ஒரு குழந்தையை இழப்பதை விட ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தை பெற்றோர்களாகிய நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. எல்லா பெற்றோர்களும் இயல்பாகவே தங்கள் பிள்ளைகள் அவர்களை விட அதிக காலம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய இழப்பு ஒரு அசாதாரண நிகழ்வாகும், அது வலி மற்றும் நீடித்த துக்கத்தின் மிகுந்த உணர்வைக் கொண்டுவருகிறது. இது ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாகும், இது பெற்றோர்கள் தங்கள் குழந்தை இல்லாமல் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முற்படும்போது அவர்களுக்கு தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது.

தங்கள் குழந்தையின் மரணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை பெற்றோர்கள் கூறுவது எவருக்கும் துணிகரமானதாக இருக்கும். எவ்வாறாயினும், நம் சிருஷ்டிகர் மீது உண்மையான மற்றும் நேர்மறையான நம்பிக்கை இல்லாதவர்களை விட, தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணிப்பவர்கள் அத்தகைய இழப்பிலிருந்து அதிக இயல்பான உணர்வுடன் மீள்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை நாம் அறிவோம். எனவே, ஒரு குழந்தையின் மரணத்தை கிறிஸ்தவ பெற்றோர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள்? வேதாகமம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறதா, அப்படியானால், எந்த விதத்தில் பேசுகிறது?

முதலில், ஒவ்வொரு நபரும் துக்கத்தை வித்தியாசமாக கையாளுகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். உணர்ச்சிகள் அவற்றின் தீவிரத்தில் பரவலாக வேறுபடுகின்றன. இந்த உணர்வுகள் பொதுவானவை மற்றும் இயல்பானவை. இரண்டாவதாக, ஒரு குழந்தையின் இழப்பிலிருந்து எந்தப் பெற்றோரும் முழுமையாக மீள்வதில்லை. இது நாம் குணமடையும் நோயைப் போன்றது அல்ல. பெரும்பாலான ஆலோசகர்கள் அதை வாழ்க்கையை மாற்றும் சரீர காயத்துடன் ஒப்பிடுகின்றனர். இருப்பினும், இழப்பை நாம் எப்போதும் உணர்ந்தாலும், அதன் தீவிரம் காலப்போக்கில் குறைகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பான மற்றும் எப்போதும் உண்மையுள்ள தேவன் மீதுள்ள நம்பிக்கையே, ஒரு குழந்தையின் இழப்பை சகித்துக்கொள்ளவும், அதிலிருந்து மீளவும் நமக்கு உதவுகிறது, சில சமயங்களில் மற்றவர்கள் குறிப்பிடத்தக்கதாகக் காணும் வழிகளில் இருக்கின்றனர். பிறந்து ஏழு நாட்களுக்குப் பிறகு இறந்த தன் குழந்தையை இழந்ததில் தாவீது இப்படித்தான் இருந்தார் (2 சாமுவேல் 12:18-19). துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கு எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பல மதிப்புமிக்க படிப்பினைகளை வேதத்தின் இந்தப் பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஒன்று, தாவீது தன் குழந்தையின் உயிருக்காக உருக்கமாக ஜெபித்தார் (2 சாமுவேல் 12:16). கடினமான காலங்களில் மட்டுமல்ல இது எல்லாப் பெற்றோருக்கும் எல்லா நேரங்களிலும் உண்மையாக இருக்கிறது. பெற்றோர்கள் எப்போதும் நம் குழந்தைகளுக்காக ஜெபிக்க வேண்டும், அவர்களைக் கவனித்துக் காப்பாற்றும்படி தேவனிடம் கேட்க வேண்டும். அதேபோல், நம் பிள்ளைகள் கர்த்தருடைய வளர்ப்பிலும் அறிவுரையிலும் வளர தேவன் தெய்வீக ஞானத்தையும் வழிநடத்துதலையும் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஜெபிக்க வேண்டும் (நியாயாதிபதிகள் 13:12; நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:4).

தாவீதிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் மற்றொரு பாடம், அவருடைய குழந்தையின் மரணத்திற்குப் பிறகு அவர் செயல்பட்ட விதம். குழந்தை இறந்துவிட்டதை அறிந்ததும், அவர் “அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய்பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தபோது புசித்தான்” (2 சாமுவேல் 12:20). இந்த பத்தியில் ஆச்சரியம் என்னவென்றால், தாவீது "கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டார்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தாவீது தனது குழந்தையின் மரணத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், தேவனைப் பணிந்துகொள்ளுவதில் காரியத்தைக் கொடுத்தார். சோதனை அல்லது நெருக்கடியின் போது தேவனைப் பணிந்துகொண்டு மதிக்கும் திறன், நம் தேவன் மீது நமக்குள்ள ஆவிக்குரிய நம்பிக்கையின் சக்திவாய்ந்த நிரூபணமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் நமது இழப்பின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் இப்படித்தான் வாழ தேவன் நம்மை விடுவிக்கிறார்.

அடுத்த பாடம் மிகவும் வெளிப்படையானது. பொறுப்புக்கூறும் வயதை அடையும் முன் இறக்கும் குழந்தைகள் பரலோகம் செல்வார்கள் என்பது அறிவின் மீதான நம்பிக்கை. தனது குழந்தையின் மரணம் குறித்த தனது எதிர்வினையை கேள்வி கேட்பவர்களுக்கு தாவீது அளித்த பதில், கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளை இழந்த விசுவாசிகளான பெற்றோருக்கு எப்போதுமே ஆறுதலளிக்கிறது: “அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்" (2 சாமுவேல் 12:23). தாவீது தன் மகனைப் பரலோகத்தில் சந்திப்பார் என்று முழு நம்பிக்கையுடன் இருந்தார். இவ்வுலகை விட்டுச் செல்லும் சிறு குழந்தைகள் பரலோகத்திற்குச் செல்வார்கள் என்பதற்கு இந்தப் பகுதி ஒரு உறுதியான அடையாளமாகும்.

ஒரு குழந்தையை இழந்த துக்கம் இருதயத்தை உலுக்கும் பயணமாகும். நமது துக்கத்தை எப்படிக் கையாள்வது என்பதை நமக்குக் கற்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், ஆலோசகர்கள் மற்றும் குழந்தையின் இழப்பை அனுபவித்தவர்கள் சில பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்:

• நீங்கள் தனியாக இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். உங்களிடம் தேவன் இருக்கிறார். கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் மீது சாய்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ இருக்கிறார்கள்.

• உங்கள் மீண்டுவருவதற்கான கால வரம்புகளை வைக்க வேண்டாம். உங்கள் குழந்தையைப் பற்றி சிந்திக்காமல் இருக்கும் ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் அதை விரும்பவும் கூடாது.

• உங்கள் குழந்தையைப் பற்றி பேசுங்கள். உங்கள் குழந்தையின் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம்.

• உங்களையும் உங்கள் மற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களும் அவதிப்படுகின்றனர். அவர்கள் ஒரு உடன்பிறந்தவரின் இழப்பால் துக்கப்படுகிறார்கள், மேலும் தங்கள் பெற்றோரை துக்கத்தில் காணும் கூடுதல் அசௌகரியம் அவர்களுக்கு இருக்கிறது.

• குறைந்தபட்சம் முதல் வருடத்திற்காவது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

• ஒரு சிறு குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து பல "முதல்கள்"-அதாவது முதல் பிறந்தநாள், முதல் கிறிஸ்துமஸ், முதலியன-மிகவும் வலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக, ஒரு குழந்தையை இழந்த கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையின் மகத்தான மற்றும் உண்மையுள்ள வாக்குறுதியைக் கொண்டுள்ளனர்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது" (வெளிப்படுத்துதல் 21:4).

English



முகப்பு பக்கம்

ஒரு குழந்தையின் மரணத்தை கிறிஸ்தவ பெற்றோர்கள் எவ்வாறு கையாள வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries