settings icon
share icon
கேள்வி

தேவனிடம் ஏமாற்றத்தை உணர்வது தவறா?

பதில்


தேவனிடம் ஏமாற்றம் என்பது தவறாகவோ அல்லது பாவமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, இது மனித நிலையின் ஒரு பகுதியாகும். ஏமாற்றம் என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒருவரின் நம்பிக்கைகள், ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது ஏற்படுகிற அதிருப்தி உணர்வு" ஆகும். தேவன் நம் நம்பிக்கையை பூர்த்தி செய்யத் தவறினால் அல்லது நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதபோது, ஏமாற்றம் தவிர்க்க முடியாமல் வரும். நாம் நினைக்கும் விதத்தில் தேவன் செயல்படவில்லை என்றால், நாம் அவர் மீது ஏமாற்றமடைந்து அவருடைய செயலில் அதிருப்தி அடைவோம். இது தேவன், குறிப்பாக அவரது ராஜ்யபாரம் மற்றும் அவரது நற்குணத்தின் மீது இருக்கும் விசுவாசத்தை அசைக்க வழிவகுக்கும்.

தேவன் செயல்பட வேண்டும் என்று நாம் நினைக்கும் போது அவர் அவ்வாறு செயல்படாதது, அவரால் அதைச் செய்ய முடியாததால் அல்ல. மாறாக, அவர் வெறுமனே வேண்டாம் என்று தேர்வு செய்கிறார். இது அவரின் தன்னிச்சையான அல்லது சலன புத்தியுள்ள செயலாகத் தோன்றினாலும், உண்மையானது அதற்கு நேர் எதிராகும். தேவன் தனது நேர்மையான நோக்கங்களைக் கொண்டுவருவதற்காக அவருடைய பரிபூரணமான மற்றும் பரிசுத்தமான சித்தத்தின்படி செயல்பட அல்லது செயல்படத் தேர்வு செய்கிறார். தேவனுடைய திட்டத்திற்கு வெளியே எதுவும் நடக்காது. பிரபஞ்சத்தில் மிதக்கும் ஒவ்வொரு மூலக்கூறையும் அவர் கட்டுப்படுத்துகிறார், மேலும் தேவனுடைய விருப்பம் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரும் எடுக்கும் ஒவ்வொரு செயலையும் முடிவையும் உள்ளடக்கியது ஆகும். ஏசாயா 46:11 ல் அவர் நமக்குச் சொல்லுகிறார், “உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்." பறவைகள் கூட அவருடைய முன்கூட்டிய தீர்மானித்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், அவருடைய திட்டங்களை நமக்குத் தெரியப்படுத்த அவர் தேர்ந்தெடுக்கும் நேரங்களும் உள்ளன (ஏசாயா 46:10), அவர் அப்படிச் செய்யாத நேரங்களும் உள்ளன. சில நேரங்களில் அவர் என்ன செய்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்; சில நேரங்களில் நம்மால் புரிந்துகொள்ளமுடிவதில்லை (ஏசாயா 55:9). ஒரு காரியம் மட்டும் நமக்கு உறுதியாகத் தெரியும்: நாம் அவருக்குச் சொந்தமானவர்களானால், அவர் என்ன செய்தாலும் அதை நாம் புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் அது நமக்குப் பயனளிக்கும், (ரோமர் 8:28).

தேவனுடனான ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரியம் என்னவென்றால், நம்முடைய விருப்பங்களை அவருடைய சித்தத்திற்கு விட்டுவிடுவது மற்றும் எல்லா விஷயங்களிலும் அவருடைய சித்தத்திற்கு அடிபணிவதே ஆகும். அவ்வாறு செய்வது தேவனால் நம்மை ஏமாற்றமடையச் செய்வதோடு மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி முறுமுறுப்பதையும் குறை சொல்வதையும் தடுக்கிறது. தேவன் செங்கடலைப் பிளந்தபோது அவரது வல்லமையின் அற்புதக் காட்சிகள், வனாந்திரத்தில் மன்னா மற்றும் காடையை வழங்குதல் மற்றும் தேவனின் மகிமையை அக்கினி தூணின் வடிவத்தில் பார்த்த போதிலும், வனாந்திரத்தில் இஸ்ரவேலர்கள் தேவனை பல சமயங்களில் இறுக்கி முறுமுறுத்து கலகம் பண்ணினார்கள் (யாத்திராகமம் 15-16; எண்கள் 14:2-37). தேவன் தமது மக்களுக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதிலும், அவர்கள் நினைத்தபடி அவர் செயல்படவில்லை என்பதால் அவர்கள் தேவனிடத்தில் முறுமுறுத்தனர் மற்றும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். அவருடைய விருப்பத்திற்கு அடிபணிந்து அவரை நம்புவதை விட, அவர்கள் தொடர்ந்து கலகம் மற்றும் குழப்பத்தில் இருந்தனர்.

நாம் தேவனுடைய சித்தத்துடன் நமது விருப்பங்களை சீரமைக்கும் போது, "என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று இயேசுவினோடு சேர்ந்து கூறும்போது (லூக்கா 22:42), 1 தீமோத்தேயு 6:6-10 மற்றும் பிலிப்பியர் 4:11-12 இல் பவுல் பேசிய மனரம்மியத்தைக் காண்கிறோம். தேவன் தமது வழியில் அனுப்பியதில் திருப்தி அடைய பவுல் கற்றுக்கொண்டார். அவர் தேவனை நம்பினார் மற்றும் அவருடைய சித்தத்திற்கு அடிபணிந்தார், ஒரு பரிசுத்தமான, நீதியுள்ள, பரிபூரணமான, அன்பான, மற்றும் இரக்கமுள்ள தேவன் தமது நன்மைக்காக எல்லாவற்றையும் செய்வார் என்பதை அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் வாக்குறுதியளித்ததே அதுதான். அந்த வெளிச்சத்தில் நாம் தேவனைக் காணும்போது, நாம் அவரிடம் ஏமாற்றம் அடைய முடியாது. மாறாக, நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு அவருடைய விருப்பம் சரியானது என்பதையும், அவர் நம் வாழ்வில் நிறைவேற்றும் அனைத்தும் நம்முடைய நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் இருப்பதை அறிந்தும் மனப்பூர்வமாக சமர்ப்பிக்கிறோம்.

English



முகப்பு பக்கம்

தேவனிடம் ஏமாற்றத்தை உணர்வது தவறா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries