கேள்வி
நான் விவாகரத்தானவன் / விவாகரத்தானவள். வேதாகமத்தின்படி நான் மறுமணம் செய்துக்கொள்ளலாமா?
பதில்
கீழ்க்காணும் கேள்விகள் அடிக்கடி நம்மிடத்தில் கேட்கப்படுகின்றன. அதாவது, “இன்னின்ன காரணத்தினால் நான் விவாகரத்து பெற்று இருக்கிறேன். நான் மறுமணம் செய்துகொள்ளலாமா? “நான் இரண்டு முறை விவாகரத்து பெற்றவள் — முதல்முறை என் கணவன் வேசித்தனத்தில் ஈடுபட்டப்படியால் விவாகரத்து பெற்றேன், இரண்டாவது முறை எங்களுக்கிடையே இருந்த கருத்துவேறுபாடுகளினால் விவாகரத்து அடைந்தேன். இப்போது நான் ஒரு நபரோடு டேட்டிங்கில் இருக்கிறேன் அவர் மூன்று முறை விவாகரத்து பெற்றவர்— முதல் முறை கருத்துவேறுபாடு, இரண்டாவது முறை அவரின் வேசித்தனம், மூன்றாவது முறை அவரது மனைவியின் வேசித்தனத்தினால் விவாகரத்து பெற்றவர். நாங்கள் இருவரும் மறுமணம் செய்துகொள்ளலாமா?” இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிகவும் கடினமானது, ஏனென்றால் விவாகரத்திற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்வதைப் பற்றிய விவரங்கள் வேதாகமத்தில் இல்லை.
நாம் நிச்சயமாக அறிந்திருக்கிற தேவ திட்டம் என்னவென்றால், திருமணமான தம்பதியினர் அவர்கள் உயிரோடிருக்கும் வரையும் இணைந்து தான் வாழவேண்டும் என்பதாகும் (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:6). வேசித்தன முகாந்திரம் ஒன்றுமட்டுந்தான் விவாகரத்து செய்யலாம் என்பதற்கு காரணமாக வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது (மத்தேயு 19:9), ஆனால் இதையும் கிறிஸ்தவர்கள் விவாதிக்கின்றார்கள். அடுத்தப்படியாக உள்ள காரணம் என்னவெனில், ஒரு அவிசுவாசியான கணவன் அல்லது மனைவி தன்னை விட்டு போனால் (1 கொரிந்தியர் 7:12—15) அந்த நபர் மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதாகும். ஆனாலும் இந்த வேதப்பகுதி மறுமணம் செய்துகொள்வதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை; மாறாக அந்த திருமணத்திற்கு உட்பட்டிருப்பதைக் குறித்து மட்டுமே சொல்லுகிறது. சரீரபிரகாரமான, பாலியல் உறவில், அல்லது மனோரீதியாக கொடுமைப்படுத்தபடுகிற காரியங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதற்கு போதுமானவைகளாக இருக்கின்றன, ஆனால் இந்த பாவங்களைக் குறித்து விவாகரத்து அல்லது மறுமணம் செய்துகொள்வதற்கு காரணங்களாக வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இரண்டு காரியங்கள் நமக்கு மிக நன்றாகத் தெரியும். தள்ளிவிடுதலை (விவாகரத்தை) தேவன் வெறுக்கிறார் (மல்கியா 2:16), மற்றும் தேவன் கிருபையுள்ளவரும் மன்னிக்கிறவருமாக இருக்கிறார். எல்லா விவாகரத்தும் பாவத்தினால்தான் உண்டாகின்றன, ஒன்று கணவனோ அல்லது மனைவியோ செய்த பாவம், அல்லது இருவரும் செய்த பாவமாக இருக்கலாம். தேவன் விவாகரத்தை மன்னிப்பாரா? நிச்சயமாக மன்னிப்பார்! மற்ற பாவங்களைக் காட்டிலும் விவாகரத்து மன்னிக்க முடியாத பாவம் அல்ல. எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுவது போல, விவாகரத்தையும் தேவன் மன்னிப்பார். கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (மத்தேயு 26:28; எபேசியர் 1:7). தேவன் விவாகரத்தை மன்னிப்பதினால், நீங்கள் மறுமணம் செய்துகொள்ள சுதந்திரம் உண்டு என்பதாக அர்த்தமா? அப்படி இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. சிலரை தேவன் தனித்திருக்க அழைத்திருக்கிறார் (1 கொரிந்தியர் 7:7-8). திருமணம் செய்துகொள்ளாமல் தனித்திருப்பதை ஒரு சாபமாகவோ அல்லது தண்டனையாகவோ கருதக்கூடாது, அது தேவனை இன்னும் முழு உள்ளத்தோடு சேவிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 7:32-36). வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம் என்று வேதம் சொல்லுகிறது (1 கொரிந்தியர் 7:9). இந்த வார்த்தை விவாகரத்திற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்வதற்கும் பொருந்தலாம்.
ஆகவே, நீங்கள் மறுமணம் செய்துக்கொள்ளலாமா / வேண்டுமா? நாம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. அது, உங்களுக்கும், நீங்கள் மறுமணம் செய்ய இருக்கும் நபருக்கும் சம்பந்தப்பட்டது, மற்றும் மிக முக்கியமாக தேவனுக்கும் சம்மந்தபட்ட காரியம். நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்வதற்கான ஞானத்தைப் பெற்றுக்கொள்ள ஜெபியுங்கள் (யாக்கோபு 1:5). திறந்த மனதோடே ஜெபியுங்கள் மற்றும் தேவனுடைய விருப்பங்களை மட்டும் அவர் உங்கள் இருதயத்தில் வைக்கும்படி அவரிடம் உண்மையாய் கேளுங்கள் (சங்கீதம் 37:4). கர்த்தருடைய சித்தத்தை நாடுங்கள் (நீதிமொழிகள் 3:5-6) மற்றும் அவர் நடத்துதலைப் பின்பற்றுங்கள்.
English
நான் விவாகரத்தானவன் / விவாகரத்தானவள். வேதாகமத்தின்படி நான் மறுமணம் செய்துக்கொள்ளலாமா?