கேள்வி
தேவன் உயிர் வாழ்கிறாரா? தேவன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் உண்டா?
பதில்
தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதும் அல்லது தேவன் இல்லை என்று நிரூபிக்காமல் நிராகரிப்பதும் அரிதான காரியமாகும். தேவன் இருக்கிறார் என்கிற உண்மையை நாம் விசுவாசித்து விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமறை கூறுகிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” (எபிரெயர் 11:6) தேவனில் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நியதி இல்லாதிருக்குமானால், வெறுமனே எளிமையான நிலையில் எல்லோரும் காணும்படி தேவன் தோன்றி தம்மை இருக்கிறவராக இந்த உலகத்திற்கு காண்பித்து நிரூபித்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்திருந்தால், விசுவாசிக்க வேண்டும் என்பதன் அவசியம் இல்லாமற் போயிருக்கும். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.” (யோவான் 20:29)
விசுவாசத்தினால் தேவனை நம்பவேண்டும் என்று சொல்வதனால், அவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று சொல்லிவிட முடியாது. “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்” (சங்கீதம் 19:1-4) என்று வேதாகமம் கூறுகிறது. நாம் நட்சத்திரங்களைக் காண்பதிலும், அகில உலகத்தையம் காண்பதிலும், இயற்கையின் அதிசயங்களைப் கவனிப்பதிலும், சூரியன் மறைவதின் அழகை ரசிப்பதிலும் இவைகளை படைத்த ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரியச்செய்கிறது. இவைகள் எல்லாம் போதுமானதாக இல்லாவிட்டால், நம்முடைய இருதயங்களிலே, அவர் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. பிரசங்கி 3:11 கூறுகிறது, “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்”. நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் ஒரு புரிந்துகொள்ளுதல் இருக்கிறது. அதாவது நம்முடைய வாழ்கைக்குப் பின், இதைவிட மேலான ஒரு வாழ்வு இருக்கிறது என்பது தெரிகிறது. அறிவுப்பூர்வமாக ஒருவேளை இதை நாம் மறுக்கலாம், ஆனால் தேவனுடைய சமூகம் நம்மை சுற்றியும் இருந்துகொண்டிருக்கிறது. சிலர் தேவன் இருக்கிறார் என்பதை மறுக்கிறார்கள், அவர்களை வேதாகமம் கடிந்துகொள்கிறது: “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்” (சங்கீதம் 14:1). வரலாற்றில் முழுவதுமாக பார்க்கும்பொழுது எல்லாக் கலாச்சாரத்திலும், நாகரீக மேம்பாட்டிலும், எல்லாக் கண்டங்களிலும் உள்ளவர்கள் தேவன் இருக்கிறார் என்பதை நம்புகிறார்கள். இவர்கள் தேவன் இருக்கிறார் என்று நம்புவதற்கு ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும்.
தேவன் இருக்கிறார் என்பதற்கு வேதாகமம் கூறுகிற விவாதங்களை அல்லாமல் வேறு விவாதங்களும் உள்ளன. முதலாவதாக, “மெய்ப்பொருள் ஆய்வு விவாதம்” இந்த விவாதம் கருத்துக்களின் அடிப்படையில் தேவன் இருக்கிறார் என்று நிரூபிக்கின்றன. இது தேவனைப்பற்றிய வரையறையுடன் தொடங்குகிறது, “தேவனைத்தவிர வேறொரு பெரியகாரியம் இருக்க முடியாது”. இருப்பது இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் பெரியது. ஆகையால் அந்த பெரியகாரியம் தேவனாகத்தான் இருக்க வேண்டும். தேவன் இல்லாவிட்டால் அந்த பெரியகாரியம் இருந்திருக்க முடியாது. ஆனால் இது முரன்பாடான கடவுளைக்குறித்த விளக்கம்.
இரண்டாவது விவாதம், “நோக்க உளவியல் விவாதம்” ஆகும். உலகம் மிக நன்றாக மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதனால், இதற்கு பின்னால் இதனை உருவாக்கிய அல்லது வடிவமைத்த ஒருவர் நிச்சயமாக இருக்கவேண்டும். உதாரணமாக பூமி தற்போது இருக்கிற அந்த ஸ்தானத்தில் இருந்து சூரியனுக்கு சற்று அருகில் சென்றாலும் அல்லது சற்று தூரமாயிருந்தாலும், பூமியில் வசிக்கிற மக்கள் உட்பட சகல ஜீவராசிகளும் அழிந்துபோய்விடும் ஒருவரும் உயிர்வாழ முடியாது. நம்முடைய தட்ப வெட்ப நிலையில் சில சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பூமியிலிருக்கிற எல்லா உயிரினங்களும் மரித்துப்போய்விடும். நம் உடம்பிலுள்ள ஒரு அணு உருவாகுவதற்கு அனேக புரத அணுக்கள் தேவை. அதாவது ஒரு அணு உருவாக குறைந்தபட்சம் 10243 புரத மூலக்கூறுகள் தேவை. அதாவது பத்தோடு (10) 243 பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு சிறிய உயிரணுவில் மில்லியன் கணக்கான புரத மூலக்கூறுகள் அடங்கியிருக்கின்றன.
தேவன் இருக்கிறார் என்பதற்கான மூன்றாவது விவாதம் “அண்ட அமைப்புசார் விவாதம்” என அழைக்கப்படுகிறது. எந்தஒரு விளைவுக்கும் ஒரு எதிர் விளைவு அல்லது காரணம் இருக்கும். உலகமும் அதில் உள்ளவைகளெல்லாம் ஒரு செயல் எனில் இந்த செயல்களை செயல்படுத்தின அல்லது கொண்டுவந்த வோறொரு செயல் இருக்க வேண்டும். அதாவது இவைகளெல்லாம் உருவாகுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். காரணமாவதற்கு இறுதியாக எல்லாவற்றையும், எல்லா செயல்களுக்கும் காரணமாயிருக்கிற ஒருவர் இருக்கவேண்டும். அவருக்கு மேலே அவரை உருவாக்குவதற்கு காரணமாக யாருமில்லை. தன்னை உருவாக்க ஒருவருமில்லாமல் இருக்கிறவர் தான் தேவன்.
நான்காவது விவாதம், “நெறிமுறை சார் விவாதம்” என அறியப்படுகிறது. இது தார்மீக, ஒழுக்கநெறி மற்றும் நன்னடத்தையைப் பற்றியது ஆகும். வரலாற்றில், எல்லாக் கலாச்சாரத்திலும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறை உண்டு. அனைனருக்குமே சரி அல்லது தவறு குறித்த திறனறிவு உண்டு. கொலை, பொய், திருட்டு, தவறான நடத்தை இவைகளெல்லாம் எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களும் இது தவறு அல்லது இது சரி என்று மறுப்பு அல்லது ஆதரவு தெரிவிக்கிறார்கள். நன்மை எது தீமை எது என்று அறிகிற உணர்வு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. இந்த உணர்வு பரிசுத்தமான தேவனிடத்தில் இருந்து வரவில்லைஎன்றால் பின்னே எங்கே இருந்து வருகிறது?
இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் மக்கள் தேவனை மறுதலிக்கவே செய்வார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்கிறது. “தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்” (ரோமர் 1:25). மேலும் ஜனங்கள் போக்கு சொல்ல இடமில்லை எனவும் வேதாகமம் அறிவுறுத்துகிறது: “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோமர் 1:20). ஆம் இன்று மக்கள் தேவனை நம்பாமல் இருப்பதற்கு, எந்த ஒரு கராணத்தையம் கூற முடியாது.
அறிவியல் பூர்வமாக தேவனை நிரூபிக்க முடியாது என்று அவரை நம்பாமல் இருக்கிறார்கள். மேலும் தேவன் இருக்கிறார் என்பதற்கு சான்றுகள் இல்லாததால் நம்ப மறுக்கிறார்கள். தேவன் இருக்கிறார் என்றால், நாம் செய்கிற ஒவ்வொரு செயல்களுக்கும் அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும். (ரோமர் 3:23; 6:23) தேவன் இல்லையென்றால் நாம் நம் விருப்பப்படி நம் மனம்போல வாழலாம். பரிணாமக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு தேவனை உதாசினப்படுத்தி வாழ்கிற ஒரு கூட்டம் உண்டு. தேவன் உயிரோடிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தேவன் இல்லை என்பதை நிரூபிக்கும் கடுமையான முயற்சியே, தேவன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. தேவன் இருக்கிறார் என்பது நமக்கு எப்படித்தெரியம்? கிறிஸ்தவர்கள் என்கிற நிலையில், நாம் தேவனுடன் தினமும் பேசுவதால், அவர் இருக்கிறார் என்பதை அதினால் அறிகிறோம். அவர் பேசுவதை நான் சத்தமாகக் கேட்பதில்லை ஆனால் அவர் பிரசன்னம், வழிநடத்துதல், அன்பு மற்றும் கிருபையை ஆகியவற்றை உணர்கிறோம். நமது வாழ்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு விளக்கம் கொடுக்கிற பொழுது தேவன் இருக்கிறார் என்பதைத்தவிர, வேறு விளக்கம் கொடுக்க இயலாது. தேவன் நம்மை ஆச்சரியமான விதமாக இரட்சித்து நம் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். ஆகவே அவரைத் துதித்து அவரில் அன்பு செலுத்துவதைத்தவிர நமக்கு வேறே என்ன செய்ய முடியும்.
இறுதியாக தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். (எபிரெயர் 11:6). தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல. விசுவாசம் என்பது ஒரு பாதுகாப்பான, வெளிச்சமான அறையில் அடி எடுத்து வைப்பதாகும். இதில் ஏற்கெனவே எண்ணற்ற மக்கள் இருக்கிறார்கள்.
English
தேவன் உயிர் வாழ்கிறாரா? தேவன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் உண்டா?