கேள்வி
சபையில் ஒரு மூப்பரின் கடமைகள் என்ன?
பதில்
வேதாகமம் ஒரு மூப்பரின் குறைந்தது ஐந்து கடமைகளையும் பொறுப்புகளையும் குறிப்பிடுகிறது:
1) சபையில் சச்சரவுகளைத் தீர்க்க மூப்பர்கள் உதவுகிறார்கள். "சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறுசிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்” (அப். 15:1-2). கேள்வியானது எழுப்பப்பட்டு மற்றும் பலமாக வாதிடப்பட்டது, பின்னர் ஒரு முடிவுக்கு வர அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதி மூப்பர்களை முடிவெடுப்பவர்கள் என்கிற நிலையில் கற்பிக்கிறது.
2) அவர்கள் வியாதியுற்றவர்களுக்காக ஜெபிக்கிறார்கள். "உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்" (யாக்கோபு 5:14). வேதாகமத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் ஒரு மூப்பருக்கு பக்தியுள்ள வாழ்க்கை இருக்கிறது, மேலும் "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5:16). ஜெபத்தில் தேவைகளில் ஒன்று, கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜெபிக்க வேண்டும், மூப்பர்கள் இதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3) அவர்கள் தாழ்மையுடன் சபையைக் கவனிக்க வேண்டும். "உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்” (1 பேதுரு 5:1-4). மூப்பர்கள் சபையில் தேவனால் ஏற்ப்படுத்தப்பட்ட தலைவர்கள்; மந்தையானது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பண ஆதாயத்திற்காக வழிநடத்தவில்லை, ஆனால் மந்தைக்கு சேவை செய்வதற்கும் மேய்ப்பதற்கும் அவர்கள் கொண்டிருக்கும் விருப்பம் காரணமாகவே அப்படிச் செய்கிறார்கள்.
4) அவர்கள் மந்தையின் ஆவிக்குரிய வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும். "உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே" (எபிரேயர் 13:17). இந்த வசனம் குறிப்பாக "மூப்பர்கள்" என்று கூறவில்லை, ஆனால் சந்ர்ப்பசூழல் சபைத் தலைவர்களைப் பற்றியது ஆகும். சபையின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
5) அவர்கள் ஜெபம் மற்றும் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதில் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும். "அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்" (அப். 6:2-4). இது அப்போஸ்தலர்களுக்கானது, ஆனால் பேதுரு ஒரு அப்போஸ்தலராகவும் மூப்பராகவும் இருந்தார் என்பதை நாம் 1 பேதுரு 5:1 இலிருந்து கண்டுகொள்ளலாம். இந்த வசனம் மூப்பர் மற்றும் உதவிக்காரரின் கடமைகளுக்கு இடையிலான வித்தியாசத்தையும் நமக்குக் காட்டுகிறது.
எளிமையாகச் சொன்னால், மூப்பர்கள் சமாதானம் பண்ணுபவர்கள், ஜெப வீரர்கள், போதிப்பவர்கள், மாதிரியின் மூலமாக தலைவர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சபையில் பிரசங்கம் மற்றும் போதனை செய்யும் தலைவர்கள். இது தேடப்பட வேண்டிய ஒன்று, ஆனால் இலகுவாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது—இந்த எச்சரிக்கையைப் படியுங்கள்: "என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக" (யாக்கோபு 3:1).
English
சபையில் ஒரு மூப்பரின் கடமைகள் என்ன?