கேள்வி
ஊக்கமான ஜெபத்திற்கான திறவுகோல் என்ன?
பதில்
ஒவ்வொருவரும் தங்கள் ஜெபங்கள் "பயனுள்ளதாக" இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், அதனால் நமது ஜெபங்களின் "பலன்களில்" கவனம் செலுத்தும்போது, ஜெபத்தில் நமக்கு இருக்கும் நம்பமுடியாத பாக்கியத்தை நாம் இழக்கிறோம். நம்மைப் போன்றவர்கள் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரிடம் பேசுவது ஒரு அற்புதமான விஷயம். அவர் நமக்குச் செவிசாய்த்து நம் சார்பாகச் செயல்படுகிறார் என்பது இன்னும் ஆச்சரியமான விஷயம்! பயனுள்ள ஜெபத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நாம் தேவனுடைய கிருபாசனத்தண்டையில் அவரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் தைரியமாகச் செல்லுவதற்கு, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரிக்க வேண்டியிருந்தது (எபிரேயர் 10:19-25).
சிருஷ்டிகருடன் நம்முடைய தொடர்பை எவ்வாறு ஆழப்படுத்தலாம் என்பதற்கு வேதாகமம் நிறைய வழிகாட்டுதல்களை அளித்தாலும், நாம் ஜெபிக்க வேண்டியது “எப்படி” என்பதை விட, ஜெபத்தை செய்கிறவரோடு தான் நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். உண்மையில், வேதம் கூறுகிறது, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5:16), மேலும் "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது" (1 பேதுரு 3:12; சங்கீதம் 34:15), மீண்டும், "செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்" (நீதிமொழிகள் 15:8). ஜெபமானது சிங்கத்தின் குகையிலிருந்து நீதிமானாகிய தானியேலைக் காப்பாற்றியது (தானியேல் 6:11), மற்றும் வனாந்தரத்தில், தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் தேவனுடன் மோசேயின் சரியான நிலைப்பாட்டிலிருந்து பயனடைந்தனர் (யாத்திராகமம் 16-17). மலடியான அன்னாளின் உறுதியான மற்றும் தாழ்மையான ஜெபங்கள் தீர்க்கதரிசியாகிய சாமுவேல் (1 சாமுவேல் 1:20) பிறக்கும்படி வித்திட்டது, மேலும் அப்போஸ்தலனாகிய பவுலின் ஜெபங்கள் பூமியை அசைக்கச் செய்தன (அப்போஸ்தலர் 16:25-26). தெளிவாக, தேவனுடைய நீதியுள்ள பிள்ளைகளின் உணர்ச்சிமிக்க ஜெபங்கள் நிறைய சாதிக்க முடியும் (எண்ணாகமம் 11:2).
நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்" (1 யோவான் 5:14-15). தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஜெபிப்பது என்பது, அவர் என்ன விரும்புகிறாரோ அதற்கு இணங்க ஜெபிப்பதாகும், மேலும் வேதம் முழுவதும் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை நாம் காணலாம். எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாவிட்டால், "ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்" (ரோமர் 8:27) என, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் நமக்காகப் பரிந்துபேசுவதற்கு பரிசுத்த ஆவியை நம்பலாம் என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். . மேலும் தேவனுடைய ஆவியானவர் தேவனுடைய மனதை நன்கு அறிந்திருப்பதால், ஆவியானவரின் ஜெபம் எப்பொழுதும் பிதாவின் சித்தத்திற்கு இசைவாகவே இருக்கும்.
கூடுதலாக, ஜெபம் என்பது விசுவாசிகள் "தொடர்ந்து" செய்ய வேண்டிய ஒன்று (1 தெசலோனிக்கேயர் 5:17). உதாரணமாக, லூக்கா 18:1ல், சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறோம். மேலும், நாம் தேவனிடம் நம் கோரிக்கைகளை முன்வைக்கும்போது, நாம் விசுவாசத்துடன் (யாக்கோபு 1:5; மாற்கு 11:22-24), நன்றியுடன் (பிலிப்பியர் 4:6), மற்றவர்களிடம் மன்னிக்கும் ஆவியுடன் (மாற்கு 11: 25), கிறிஸ்துவின் நாமத்தில் (யோவான் 14:13-14), மேலும் மேலே கூறப்பட்டுள்ளபடி, தேவனிடத்தில் சரியான இருதயத்துடன் (யாக்கோபு 5:16) இருக்கவேண்டும். இது நம்முடைய விசுவாசத்தின் பலமே தவிர, நாம் யாரிடம் ஜெபிக்கிறோமோ அவரைப் பிரியப்படுத்துவது நம்முடைய ஜெபங்களின் நீளம் போன்றவை அல்ல, எனவே நம்முடைய பேச்சாற்றல் அல்லது புத்திசாலித்தனத்தால் தேவனக் கவர வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் கேட்பதற்கு முன்பே நம் தேவைகள் என்ன என்பதை தேவன் அறிந்திருக்கிறார் (மத்தேயு 6:8).
மேலும், நாம் ஜெபிக்கும்போது நம் இருதயங்களில் அறிக்கைப்பண்ணப்படாத பாவம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது நிச்சயமாக பயனுள்ள ஜெபத்திற்கு ஒரு தடையாக இருக்கும். “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசாயா 59:2; சங்கீதம் 66:18). அதிர்ஷ்டவசமாக, "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9).
சுயநல இச்சைகளுடனும் தவறான நோக்கங்களுடனும் ஜெபிப்பது தேவனுடன் பயனுள்ள தொடர்புக்கு மற்றொரு தடையாக இருக்கிறது. "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்" (யாக்கோபு 4:3). தேவனுடைய அழைப்பை நிராகரிப்பது அல்லது அவருடைய அறிவுரையை புறக்கணிப்பது (நீதிமொழிகள் 1:24-28), விக்கிரகங்களை வணங்குவது (எரேமியா 11:11-14), அல்லது ஏழைகளின் கூக்குரலுக்கு செவிமடுக்காமல் செவிடாக மாறுவது (நீதிமொழிகள் 21:13) ஊக்கமான ஜெப வாழ்க்கைக்கு கூடுதல் தடைகளாக அமைகின்றன.
பரலோகத்திலுள்ள நம்முடைய தகப்பனுடனான நமது உறவைப் பலப்படுத்துவதற்கு ஊக்கமான ஜெபம் ஒரு வழியாகும். நாம் அவருடைய வார்த்தையைப் படித்து அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பிரியப்படுத்த முற்படும்போது, யோசுவாவின் ஜெபத்தில் சூரியனை அசையாமல் நிற்கச் செய்த அதே தேவன் (யோசுவா 10:12-13) கிருபையின் சிங்காசனத்தின் முன் தைரியமாக வந்து நம்பிக்கையுடன் ஜெபிக்க நம்மை அழைக்கிறார். நமக்குத் தேவைப்படும் நேரத்தில் நமக்கு உதவ அவர் தம் இரக்கத்தையும் கிருபையையும் விரிவுபடுத்துவார் (எபிரெயர் 4:16).
English
ஊக்கமான ஜெபத்திற்கான திறவுகோல் என்ன?