கேள்வி
உலகத்தின் முடிவைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
பதில்
பொதுவாக "உலகத்தின் முடிவு" என்று குறிப்பிடப்படும் நிகழ்வு 2 பேதுரு 3:10 இல் விவரிக்கப்பட்டுள்ளது: "வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.” இது "கர்த்தருடைய நாள்" எனப்படும் தொடர் நிகழ்வுகளின் உச்சக்கட்டமாகும், இது நியாயத்தீர்ப்பின் நோக்கத்திற்காக தேவன் மனித வரலாற்றில் தலையிடும் நேரம். அந்த நேரத்தில், தேவன் தாம் படைத்த அனைத்தையும், "வானத்தையும் பூமியையும்" (ஆதியாகமம் 1:1), அவர் அழிப்பார்.
இந்த நிகழ்வின் நேரம் பெரும்பாலான வேதாகம அறிஞர்களின் கூற்றுப்படி, ஆயிரமாண்டு எனப்படும் 1000-ஆண்டு காலத்தின் இறுதியில் உள்ளது. இந்த 1000 ஆண்டுகளில், கிறிஸ்து பூமியில் எருசலேமில் ராஜாவாக, தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து (லூக்கா 1:32-33) சமாதானமாக ஆட்சி செய்கிறார் ஆனால் "இரும்பு கோலுடன்" (வெளிப்படுத்துதல் 19:15). 1000 வருடங்களின் முடிவில், சாத்தான் விடுவிக்கப்படுவான், மீண்டும் தோற்கடிக்கப்பட்டு, பின்னர் எரிகிற அக்கினிக்கடலில் தள்ளப்படுவான் (வெளிப்படுத்துதல் 20:7-10). பின்னர், தேவனுடைய இறுதி நியாயத்தீர்ப்புக்குப் பிறகு, 2 பேதுரு 3:10 இல் விவரிக்கப்பட்டுள்ளது போல உலகின் முடிவு நிகழ்கிறது. இந்த நிகழ்வைப் பற்றி வேதாகமம் நமக்கு பல காரியங்களைக் கூறுகிறது.
முதலில், இது நோக்கத்தில் மாபெரும் பிரளயத்தை உண்டுபண்ணும் தருணமாகும். "பரலோகம்" என்பது சரீரப்பிரகாரமான இப்பிரபஞ்சத்தைக் குறிக்கிறது—அதாவது நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன் திரள்கள்—இது ஒருவித பெரிய வெடிப்பால் அழிந்துவிடும், ஒருவேளை ஒரு அணுக்கருவின் அல்லது அணுவின் எதிர்வினையாக, அது நமக்குத் தெரிந்த அனைத்து பொருட்களையும் எரித்து மற்றும் அழிக்கும். பிரபஞ்சத்தை உருவாக்கும் அனைத்து கூறுகளும் "கடுமையான வெப்பத்தில்" உருகும் (2 பேதுரு 3:12). இது ஒரு பெரிய சத்தமுள்ள நிகழ்வாகவும், வெவ்வேறு வேதாகமப் பதிப்புகளில் "கர்ஜிக்கிற" (NIV), "பெரும் சத்தம்" (KJV), "உரத்த சத்தம்" (CEV) மற்றும் "இடியின் உராய்வு" (AMP) என விவரிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. "பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்" என்று நமக்கு சொல்லப்பட்டிருப்பதால் எல்லோரும் அதைப் பார்ப்பார்கள், கேட்பார்கள்.
பின்னர் தேவன் ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் (வெளிப்படுத்துதல் 21:1) உருவாக்குவார், அது பரலோகத்திலிருந்து கீழே இரங்கி வரும் “புதிய எருசலேமையும்” உள்ளடக்கியிருக்கும். இந்த நகரத்தில் பரிசுத்தவான்கள்—அதாவது "ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில்" பெயர் எழுதப்பட்டவர்கள் (வெளிப்படுத்துதல் 13:8)—என்றென்றும் வாழுவார்கள். பேதுரு இந்த புதிய சிருஷ்டிப்பை "நீதி வாசமாயிருக்கும் புதிய வீடு" என்று குறிப்பிடுகிறார் (2 பேதுரு 3:13).
அந்த நாளினைக் குறித்த பேதுருவின் விளக்கத்தின் மிக முக்கியமான பகுதி 11-12 வசனங்களில் அவருடைய கேள்வியில் கூறப்பட்டிருக்கிறது: "இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.” அந்த நாளில் என்ன நடக்கப்போகிறது என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும், அந்த புரிதலைப் பிரதிபலிக்கும் விதத்தில் நாம் வாழ வேண்டும். இந்த வாழ்க்கை கடந்து செல்கிறது, நம் கவனம் இனி வரவிருக்கும் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் இருக்க வேண்டும். இரட்சகரை அறியாதவர்களுக்கு நம் "பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும்" உள்ள வாழ்க்கை ஒரு சாட்சியாக இருக்க வேண்டும், மேலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும், அதனால் அவரை நிராகரிப்பவர்களுக்காக காத்திருக்கும் பயங்கரமான விதியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியும். தேவனுடைய "அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும்" (1 தெசலோனிக்கேயர் 1:10) கருத்தில்கொண்டு நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
English
உலகத்தின் முடிவைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?